அதிமுகவின் நாலரை மணி நேர கூட்டம் – விமர்சனங்களோடு தொடங்கி தேர்தலோடு முடிந்தது !
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி 2. 30 மணி வரை நடைபெற்றது. நாலரை மணி நேரம் கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.
இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக உரையாடலை நிகழ்த்தலாம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை தொடங்கினர். ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் கட்சி பிரச்சனை, வழிகாட்டுதல் குழு என்று காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கட்சியில் வலுவான தலைமை இல்லை என்று கூறி எடப்பாடி தரப்பை விமர்சித்தார். இதற்கு சிவி சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்வர் ராஜா தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் அவர் கூறிய கருத்திற்கு ஒபிஎஸ் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அப்படியே அமைதிகாத்தார்கலாம்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 11 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இருந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்து விட்டார். இப்போது 10 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கிறது. ஆனால் அந்த வழிகாட்டுதல் குழுவிற்கு சரியான அதிகாரம் வழங்கப்படவில்லை 10 பேர் கொண்டு செயல்படும் வழிகாட்டல் குழுவை 18 பேர் ஆக உயர்த்த வேண்டும் வழிகாட்டு குழுவுக்கு மேலும் அதிகாரம் வழங்க வேண்டும். என்று செங்கோட்டையின் பேசினார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் சில நிர்வாகிகள் வழிகாட்டல் குழுவின் தலைவராகவோ அல்லது அவைத்தலைவராகவோ செங்கோட்டையனை கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும் ஒற்றைத் தலைமை பற்றிய வாதமும் தவிர்க்க முடியாமல் கூட்டத்தில் இடம்பெற்றது. அதோடு ஓபிஎஸ் வரும்பொழுது ஒற்றை தலைமையே வருக என்று தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர்.
இப்படி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் இலத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் எம்ஜிஆர் மாளிகை வாயில் பகுதியில் முழக்கமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
இப்படி கூட்டத்தில் கட்சியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து ஆலோசித்தனர். இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெறுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, கூட்டம் ஆரோக்கியமாக இருந்தது. அனைத்து நிர்வாகிகளும் பல்வேறு தரப்பட்ட கருத்துகளை பதிவு செய்தனர். பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அனைத்தும் கலந்த ஆலோசிக்கப்பட்டு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும் வகையில் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது என்று கூறினார்.