பாடப்புத்தகத்தில் தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !
பாடப்புத்தகத்தில் தமிழ் குறித்து தவறான தகவல்களை குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் பாரதியார் தலைப்பாகை காவியில் இடம்பெற்றிருந்தது உள்ளிட்ட அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று விமர்சித்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “மாநிலப் பாடத்திட்டத்தின் படியான 12-ஆம் வகுப்பு ஆங்கில நூலில் தமிழை விட தொன்மையான மொழி சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு ஆகும். தமிழ் செம்மொழி தொடர்பான அந்தப் பாடத்தில் தேவையற்ற இந்தத் தகவல் திணிக்கப்பட்டிருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கே.எஸ்.அழகிரி உள்பட பல தலைவர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பாக வேலூரில் கடந்த ஜூலை 26 செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய் மொழி தமிழ் விளங்குகிறது. பிளஸ்-2 பாட புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு விடப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இதுவரை 19 தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஏதாவது தவறுகள் இருந்து அவை சுட்டிக்காட்டப்பட்டால் அவை உடனடியாக சரிசெய்யப்படும்.” என்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு என்றைக்கும் கிடையாது. சமஸ்கிருதம் பேசுபவர்கள் கூட அதனை 2ஆயிரம் வருடப் பழமையான மொழி என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இரு மொழிகளும் எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது” என்று தெரிவித்தார்.