நம்பி வாங்க… ஏமாந்து போங்க… ஏஜண்ட், அட்வைசர் வித்தியாசம் தெரியுமா
பொதுமக்களே…ஆரம்பமே குழப்பம்
மேலை நாடுகளின் பொருளாதார ஆலோச கர்களின் பாணியை நம் நாட்டில் உள்ள ஆலோசகர்களும் அவரவருக்கு ஏற்றபடி பின்பற்றுவதாலேயே என்னவோ ஒருகட்டத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள், அது பாதுகாப்பானது இல்லை என்று கருதினால் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் என்பது மாதிரியான அறிவுரைகளில் வந்து நிற்கிறார்கள்.
யார் முகவர், யார் ஆலோசகர்?
இன்னொரு பரிமாணம் காப்பீடு முகவர்கள். அவர்களும் இப்போது காப்பீடு ஆலோசகர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் மிக அதிக அளவில் ஏமாற்றி விற்கப் படுவது காப்பீடு சார்ந்த சேவைகள்தான்.
சட்டப்படி சுரண்ட வசதி-..
Add on, rider, additional benefits என்று பல்வேறு பெயர்களில் வழங்கப்படுபவை எல்லாம் சட்டத்திற்குட்பட்டு சுரண்டப்படுபவை. அதை ஏன் ஒரே பாலிசியில் வழங்கிவிடக்கூடாது என்று கேட்டால் வண்டி வண்டியாக விளக்கம் தருவார்கள். சாப்பாட்டு இலையில் தூள் உப்பு, கல் உப்பு, இந்துப்பு என்று வைத்து இடத்தை நிரப்பும் வேலை.
ஏமாற்றப்படும் ஏழைகள்
எப்படியும் LIC-யின் 60% பாலிசிகள் விவரம் தெரியாத அப்பாவிகளை ஏமாற்றி கையெழுத்து வாங்கப்பட்டவையாகவே இருக்கும். அவர் களுக்கு வட்டிக்கணக்கு தெரிய வரும்போது லாக்-இன் பீரியட் என்ற பெயரில் நிலைமை கைமீறிப் போயிருக்கும்.
வங்கிகளின் தொடர் தோல்வி
வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்பது என்பதை வங்கியாளர்களும், ஆட்சி யாளர்களும் கடந்த 10 ஆண்டுகளில் அழித்தே விட்டனர். அனைத்து வங்கிகளின் மேல்மட்ட நிர்வாகம் ஏகதேசமாக ஒரே ஜாதிக்காரர்களிடம் இருந்து வந்ததும், தாங்களே உலக யோக்கியத்தின் அத்தாரிட்டி என்று அவர்கள் காட்டிக்கொண்டதும், வங்கிகளின் தொடர் தோல்விகளும் தனியாகப் பேசப்பட வேண்டியவை.
மொத்த பணமும் பங்குசந்தைக்கே…
RC என்ற பெயரில் சிறுசேமிப்பு என்று இருந்த ஒன்று, இன்று SIP ஆகிவிட்டிருக்கிறது. அவை கடைசியில் சுற்றி வளைத்து பங்குச்சந்தை என்ற சூதாட்ட களத்தை அடைகிறது. என்னதான் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தாலும், அதை வழங்கும் நிறுவனம் அல்லது அதற்குக் கடன் வழங்கும் நிறுவனம் என்று ஒருகட்டத்தில் பங்குச்சந்தைக்குச் சென்றே நிற்கிறது.
வேலைவாய்ப்பு நஹி…
மொத்த வேலைவாய்ப்பில் 5% கூட பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உருவாக்குவதில்லை. ஆனால் அவற்றுக்கான முதலீட்டுக்கு சந்தையில் மிகப்பெரிய மூளைச் சலவை நடக்கிறது.
யாருக்கு நட்டம்…
ஐந்து ரூபாய்க்கு வாங்கிய பங்கு ஐநூறு ரூபாய்க்கு போகும்போது விற்றுவிட்டு வெளி யேறுகிறீர்கள் என்றால் யாரோ ஒருவர் வந்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்குகிறார். அது திரும்ப 50 ரூபாய்க்கு இறங்கும்போது 450 ரூபாய் நட்டத்தை அந்த நபரே ஏற்றுக்கொள்கிறார். அதாவது ஒருவர் இலாபம் ஈட்ட மற்றொருவர் கட்டாயம் நட்டமடைய வேண்டும்.
உண்மையில் joint stock company அமைப்பு இந்த சூதாட்டத்திற்காக உருவாக்கப்படவில்லை. நிறுவனம் வழங்கும் ஈவுத்தொகை மட்டுமே நமது உண்மையான இலாபம். அதுதான் சமுதாயத்தில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதற்குச் சான்று.
வருவார்களா முதலீடு செய்ய…?
இனிமேல் பங்குச்சந்தையில் இலாபம் என்பது டிவிடெண்டு மூலம் மட்டுமே வரும், இரண்டு ஆண்டுகளுக்கு ஷேர்களைக் கைமாற்றி விட முடியாது என்று சொன்னால் யாரும் முதலீடு செய்வார்களா என்பது சந்தேகமே.
சிறு கடைகளுக்கு இந்நிலை என்றால்…
நாம் அன்றாடம் செல்லும் வீதிகளில் ஓராண் டில் எத்தனை கடைகளைப் புதிதாகத் திறந்து மூடுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திறக்கிறார்கள், ஒரு வருடத்தில் மூடுகிறார்கள். எப்படியும் மிகக்குறைந்த அளவாக இரண்டு இலட்சமாவது 15ஜ்10′ கடையை ஆரம்பித்து ஆறே மாதத்தில் மூடினாலே காற்றில் கரைந்துவிடும். பெரிய கடைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அடுத்த பத்தாண்டுகளுக்கு அந்த சுமையை அவர்கள் சுமக்க வேண்டும். ஆனாலும் விடாமல் வந்துகொண்டே இருக்கிறார்கள். இரண்டு மாதம் கூட எந்த கடையும் காலியாகக் கிடப்பதில்லை. அவர்களுக்கெல்லாம் யார் ஆலோசனை சொல் லுகிறார்கள், முதலீட்டை எப்படி திரட்டுகிறார்கள் என்று பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
பூட் ஸ்ட்ராப்பிங் என்றால்…
சொந்தப் பணத்தில் அல்லது அடமானத்தின் பேரில் கடன் வாங்கி தொழில் ஆரம்பிப்பதை Boot strapping என்பார்கள். அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அமைப்போ, தனிநபர்களோ நம்மிடம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
சிறுபிள்ளை வைத்த வெள்ளாமை…
கல்லூரிகளில் இன்குபேட்டர் என்று இருப்பதையெல்லாம் பேசக்கூடாது. சிறு பிள்ளைகள் வைத்த வெள்ளாமை அது; வீடு வந்து சேராது. மேலை நாட்டு உதாரணங்கள், மாடல்கள் இங்கு வேலைக்கு ஆகாது என்று அதனால்தான் முதல் பத்தியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அபூர்வமாக கல்லூரிகளின் incubatee firms வெற்றிபெறுவது மாதிரி தெரிந்தால் அதை அங்குள்ள பேராசிரியர்களும், வங்கி அதிகாரிகளுமாகச் சேர்ந்து கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்து விடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.
பயத்தை கிளப்புறாங்க…
சுற்றுச்சூழல் குறித்து தமிழகத்தில் அதிகமாக பேசக்கூடிய பிரபல ஆளுமை ஒருவரது பெயரில் இருக்கும் நிறுவனத்தைப் பார்த்தால் strike off என்று இருக்கிறது. அவரோ பொலிவியா நாட்டில் கோச்சம்பா நதி நீரைத் தனியாருக்கு விட்டதால் உள்நாட்டுப் போர் ஏற்பட்ட மாதிரி கோயமுத்தூரில் ஏற்படும் என்று கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை முறையாக wind up பண்ணாமல் அப்படியே விட்டு strike off ஆனால் அதில் இயக்குநராக இருந்தவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வேறு நிறுவனங்களில் இயக்குநராக இருக்க முடியாது. கம்பெனி பதிவு பண்ணித் தர, நிதிநிலை அறிக்கை தயாரிக்க, ஃபைலிங் பார்க்க எத்தனையோ ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால்?
பிரச்சனை ஒன்று… பதில்கள் பல…
காப்பீடு விற்பனை செய்ய தெருமுழுக்க முகவர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதில் உள்ள பிரச்சினைகள் எழும் போது ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை வழங்குவார்கள். கடைசியில் நீதிமன்றம் சொல்லும்போதுதான் பாலிசிகளின் fine print என்ன சொல்கிறது என்றே தெரிய வரும்.
தமிழில் இருக்காங்களா…
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளேட்டில் ஜெகாங்கீர் கெய் காப்பீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து வாராவாரம் எழுதுகிறார். தமிழில் அப்படியான பதிவர்கள் அதாவது insurance activist வகையில் யாருமே இல்லை.
யார் எக்ஸ்பர்ட்…
சேல்ஸ்மேனையும், எக்ஸ்பர்ட்டையும் நாம் கணிசமாகக் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.
‘நீங்கள் 1980-ல் பத்தாயிரம் ரூபாய்க்கு விப்ரோ பங்குகளை வாங்கிப் போட்டிருந்தால் இன்று அதன் மதிப்பு 500 கோடி’ என்று தங்களது sales Pitching-ஐ ஆரம்பிக்கிறார்கள். அது IPO-க்கான சான்று. ஆனால் கடைசியில் மார்க்கெட்டில் பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளில் வந்துதான் அது முடிகிறது.
எவ்வளவு பேரால் பத்து, இருபது வருடங்களுக்கு அமைதியாக IPO காலத்தில் இருந்து காத்திருக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?
சர்வீஸ் துறையில் உள்ள பிரச்னை
Mis-selling-தான் நமது சர்வீஸ் துறைகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. நாம் கேட்டது ஒன்று, நமக்கு விற்கப்பட்டது மற்றொன்றாக இருந்தாலும் அதன் விகிதாச்சாரத்தை வைத்துப் பார்த்து நாம் திருப்தி அடைந்து விடுகிறோம்.
அதிபுத்திசாலிகள் என்ன சொல்றாங்கனா…
Talking to Strangers என்ற புத்தகத்தில் மால்கம் கிளாட்வெல் இம்மாதிரியான ஏமாற்றம், பொய், மோசடி, mis-selling விவகாரங்களை அலசுகிறார். ஏகப்பட்ட உதாரணங்களுடன் கடைசி வரைக்கும் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அறுவையான புத்தகம்தான். ஜென் நிலையில் இருந்து பொறுமையுடன் படித்தால் சில take away points கிடைக்கும்.
அண்ணே சொல்றது உண்மையே…
நம் அனைவருக்கும் எதிரில் இருப்பவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பும் பழக்கம்தான் default modeஆக மனதில் செட் ஆகியிருக்கிறது. கொஞ்சம் ஐயம் வந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சான்றுகள் கிடைக்காத பட்சத்தில் defaulting to truth option மூலமாக உண்மை என்று நம்பும்படியாகவே பழகிவிட்டோம். அதனால்தான் சமூகம் ஏதோ ஒரு வகையில் அமைதியாகச் செல்கிறது.
நிச்சயமா ஏமாற்றப்படுகிறோம்
ஆனாலும் நாம் எல்லோரும் 5% அளவில் ஏமாற்றப்படுகிறோம். வாங்கும் பொருட்களில், சேவைகளில், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதில் என பலவற்றில் 5% transactions சொன்னபடி நடப்பதில்லை. நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரிந்தாலும் 95% பரிவர்த்தனைகள் நியாயமாக இருந்தது, வெறும் 5% மட்டும்தானே ஏமாற்றப்பட்டது என்பதால் அதை பெரிதுபடுத்தாமல் ‘சரி போகட்டும் விடு’ என்று சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.
யாரையும் நம்பமாட்டோம்… ஆனா…
அவநம்பிக்கை என்பது நமது சமூகத்தின் சொத்து. யாரும் யாரையும் நம்ப மாட்டோம். ஆனால் எதிரில் இருப்பவர் என்னை ஏமாற்ற மாட்டார் என்கிற default of truth செட்டிங் காரணமாக நமது அன்றாட நடவடிக்கைகளை நம்பி மேற்கொள்கிறோம். அஃது ஒரு வகையில் தேவையும் கூட. அப்படி நம்பாவிட்டால் காலையில் குண்டாவை எடுத்துக்கொண்டு வந்து பால் கூட வாங்க முடியாது.
எங்க மேல நம்பிக்கை வைக்காதீங்க…
கார் சர்வீசுக்கு விடும்போது கவனித்தி ருப்பீர்கள். சர்வீஸ் அட்வைசர் என்ற ஒருவர் ஒரு அட்டையுடன் வந்த முதல் வேலையாக வண்டியில் எங்கெங்கு கீறல், ஒடுக்கு இருக்கிறது என்று குறித்துக்கொண்டு கதவைத் திறந்ததும் எவ்வளவு டீசல் இருக்கிறது என்று எழுதியவாறே ‘சார் வண்டில பென்-டிரைவ், வேல்யுபிள்ஸ் எதுனா இருந்தா எடுத்துடுங்க’ என்கிற எச்சரிக்கை வாசகத்துக்குப் பின்னரே ‘சொல்லுங்க சார், வண்டில என்ன பிரச்சினை?’ என்று கேட்பார். We are not responsible for any kind of damage happens to customer’s vehicle in our premises என்கிற வாசகம் இல்லாத இடங்களே கிடையாது.
விதியேன்னு நொந்துபோகிறோம்…
எல்லா இடங்களிலும் பொறுப்பு துறப்பு (Disclaimer) வாசகங்களோடுதான் நமது பரிவர்த்த னைகளே ஆரம்பமாகிறது. இருந்தாலும் நாம் defaulting to truth-க்கு மட்டுமே பழக்கப்பட்டிருப்பதால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட ஜீரணித்துக்கொள்ள அல்லது விதி என்று நொந்து கொண்டு கடந்துசெல்ல கற்றுக் கொள் கிறோம். வயது ஏற ஏற, இதை அனுபவம் என்று மூளையில் பதிவு செய்து கொள்கிறோம்.
யார் எக்ஸ்பர்ட்…
இப்போது திரும்பவும் யோசித்துப் பாருங்கள். கன்சல்டன்ட், அட்வைசர் என்று நாம் சந்தித்த முக்கால்வாசி பேர் சேல்ஸ்மேன்கள். நமக்கு ஒரு விசயம் தெரியாத போது அதைப்பற்றி ஓரளவுக்கு அறிந்தவர் நமக்கு எக்ஸ்பர்ட் ஆகத் தெரிகிறார். நமது defaulting to truth செட்டிங் காரணமாக அந்த பரிவர்த்தனையின்பால் நாம் விழுகிறோம். சேல்ஸ்மேன் என்பது தரக்குறைவல்ல. அவர்கள் தெளிவாகத் தங்களது வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு வாடிக்கையாளராக நமக்குத்தான் பெரும்பாலான நேரங்களில் அது தெரிவதில்லை.
அமெரிக்க பாணி சேல்ஸ் ஒத்துவராது…
நமது குழப்பமான மனநிலையே தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. வீட்டு வாடகை கொடுக்கும் பணத்தில் EMI கட்டி வீடு வாங்கிடலாம் என்பது அமெரிக்க சந்தையின் Sales Pitch. அங்கே அது உண்மையும் கூட. ஆனால் அந்த கான்செப்ட்டை இங்கே இறக்குமதி பண்ணி கரூர் போன்ற ஊர்களில் 60 இலட்சத்துக்கு அபார்ட்மென்ட் வாங்குபவர்களை என்ன சொல்வது? இது சேல்ஸ் மேனுடைய தவறு கிடையாது.
வட்டியை தள்ளிபோட முடியாது
You buy now, pay EMI next year என்று வரும் விளம்பரங்களை எப்படி பார்க்கிறீர்கள்? இன்று கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகள் மூன்று மாதம் கடன் தவணையைத் தள்ளிப்போட ஒத்துக்கொண்டாலும் வட்டியை நிறுத்த முடியாது என்று கறாராகச் சொல்கின்றன. ஆனால் இந்த ஆண்டு வாங்கிவிட்டு அடுத்த ஆண்டு EMI கட்டுங்கள் என்று எப்படி சொல்ல முடிகிறது? ஆண்டு இறுதியில் இருக்கும் சரக்கைத் தள்ளுபடி கொடுத்து தள்ளி விடுவது என்பது முற்றிலும் வேறு.
நானே பொறுப்பு… தெரிந்தே ஏமாறுதல்…
இலட்ச ரூபாய்க்கு செல்போன் வாங்கிவிட்டு 24 மாதங்களுக்கு தவணை கட்ட எது நம்மை இழுத்துச் செல்கிறது? ‘அதுல இருக்கற டேட்டா செக்யூரிட்டி வேற லெவல்’ என்று நம்புகிறோம். ஆனால் I Accept என்பதைக் அழுத்தித்தானே ஒவ்வொரு ணீஜீஜீ-லும் நுழைகிறோம்.
நம்பி வாங்க… ஏமாந்து போங்க…
மறுபடியும் மேலே பார்த்த பங்குச்சந்தை முதலீடு, Mis-selling, தொழில்முனைவோர், விப்ரோவுல 1980-ல பத்தாயிரம் ரூபாய் போட்டிருந் தா சேல்ஸ் பிட்ச், joint stock company, கடன்பட்ட வாழ்க்கை முறையையும், நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளையும் இணைத்துப் பாருங்கள். நாம் கேட்காமலேயே ஏன் டிப்ஸ்-களை வாரி வழங்குகிறார்கள் என்று ஒவ்வொரு dot ஆக கவனித்து, அதில் எத்தனை transactions ‘நம்பி வாங்க, ஏமாந்து போங்க’ வகை என்று யோசித்துப் பாருங்கள்.
பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு காலாண்டு முடிவுகளை யும் உற்றுப் பார்த்து வருபவர்களைப் பகடி செய்வதுdefaulting to truth-இன் படி இந்த கட்டுரையின் நோக்கமல்ல
-ஆர்.எஸ்.பிரபு