வருகிறது மேலவை… தொடர் – 1 மாறப்போகும் தமிழக அரசியல் 🧐😳😱
வருகிறது மேலவை… மாறப்போகும் தமிழக அரசியல்
ஒரு அரசியல் கட்சியில் பலமிக்க ஒருவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டாலும் கட்சியில் உள்ள அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஒரு சாளரமாக மாநிலங்களவை அமைகிறது.
இந்தியாவின் இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மக்களவை தொகுதியிலும் போட்டியிடாமல் மாநிலங்களவை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
தேசிய அளவில் பிரபலமாக உள்ள ஒருவரை கட்சியின் பிராண்ட் அம்பாசிட்டராக ஆக்குவதற்கு இந்த மாநிலங்களவை பெரும் வாய்ப்பாக அமைகிறது. பதினெட்டாண்டுகள் தேர்தலில் நிற்காமல் மேல்சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டவர் வைகோ. இப்படி பலர் இந்தியா முழுக்க உள்ளனர். கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் முதல் இசையமைப்பாளர் இளையராஜா வரை இப்படியான வழியில் தான் நாடாளுமன்ற வளாகத்திற்குள் கால் பதித்தவர்கள். இளைராஜாவிற்கு மந்திரி பதவி தர பா.ஜ.க. முன்வந்தால் அதை எந்த அரசியல் சட்டமும் தடுக்காது. தடுக்க முடியாது. அப்படியான குறுக்கு வழி பயணமாக அமையும் மாநிலங்களவை போல் மாநிலங்களின் மேலவை அமைகிறது. 1952ம் ஆண்டில் ராஜாஜியும், 1967ம் ஆண்டில் அண்ணாதுரையும், மேலவையில் இருந்து நேரடியாக முதல்வர் ஆனவர்கள் என்பது நினைவுறத்தக்கது.
மேலவை என்பது துறை சார்ந்த விற்பன்னர்களை சபையின் அங்கத்தினர்களாக்கி அவர்களின் அறிவுரையினை ஏற்று அதன்படி அத்துறைக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதே மேலவை அமைத்ததின் நோக்கமாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பதவி வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாகவும் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த ஒரு தீர்வாகவும் மேலவை அமைந்தது.
இந்தியாவில் உள்ள சட்டமன்ற மேலவைகளில் முன்னோடி மேலவை என்ற பழமை வாய்ந்த தமிழக மேலவை 1861-ல் அமைக்கப்பட்டது. இதற்கு ‘மெட்ராஸ் லெஜிஸ்டேடிவ் அசெம்ளி’ என்று அழைக்கப்பட்டது. இதை ‘ஆளுநர் மேலவை’ என்றே அழைக்கப்பட்டது. காரணம் இதன் உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்படுவாரகள். 1909-ம் ஆண்டு மேலவை அமைப்பை மாற்றி விரிவுபடுத்தப்பட்டது. என்றாலும் தேர்தல் மூலம் மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது 1921ல் தான். இதன் பிறகு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மேலவை மாற்றி அமைக்கப்பட்டது. இடையில் 1930ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நான்காவது மேலவை மட்டும் நான்கு ஆண்டுகள் செயல்பட்டன. 1969ல் சென்னை மாநிலம் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது, மேலவையின் பெயரும் ”தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது.
மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. 1986ல் மேலவை உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆகவே இருந்தது. இந்நிலையில் 1986 வரை செயல்பட்டு வந்த மேலவை மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது.
பொதுவாக மாநிலத்தில் மேலவை அமைக்க மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தீர்மானம் மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும். அதன்பின் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அம்மாநிலத்தில் மேலவை அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பிறகே மாநிலத்தில் மேலவை உருவாக்கப்படும். களைப்பதற்கும் இதே வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
1986ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் மேலவை திடீரென கலைக் கப்பட்டது. இதற்கான தீர்மானம்,
14.-5.-1986ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. மேலவை கலைக்கப்பட்ட போது அதன் தலைவராக ம.பொ.சிவஞானமும் எதிர்க்கட்சித் தலைவராக மு.கருணாநிதியும் இருந்தனர்.
‘என்னைக் குறி வைத்தே எம்.ஜி. ஆர். மேலவையை கலைக்கிறார் என்பதால் நான் வேண்டுமானால் மேலவை பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலவையை கலைக்க வேண்டாம்’ எனக் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தும் எம்.ஜி.ஆர். அதைப் பொருட்படுத்தவில்லை. மு.கருணாநிதியின் பதவியை பறிக்கவே எம்.ஜி.ஆர். மேலவையை கலைத்தார் என்ற கருத்து ஒருபுறமும்,
மேலவை உறுப்பினராக வரை யறுக்கப்பட்ட தகுதிகள் வரிசையில் ‘மேலவை உறுப்பினர்கள் கடனில் சிக்காதவர்களாக இருக்க வேண்டும்’ என்ற விதி உள்ள நிலையில் திவால் நோட்டீஸ் வெளியிட்டிருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக எம்.ஜி.ஆர். நியமித்தார்.
10 லட்சம் ரூபாய் கடன் பாக்கியை கட்டினால் மட்டுமே எம்எல்சி ஆக முடியும் என நீதிமன்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதை வெண்ணிற ஆடை நிர்மலா செலுத்தினார். கடனில் தத்தளித்தவர் ஒரே நாளில் பத்து லட்சம் ரூபாயை எப்படி கட்ட முடிந்தது என்ற கேள்வி எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து எம்எல்சி பதவியை நிர்மலா ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்தமாக மேலவையை கலைத்தார் என்றும் கூறப்படுகிறது.
1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின் மேலவையைக் மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொண்டார். அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. 1989ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1990ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி ராஜ்யசபாவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 1991ம் ஆண்டு திமுக அரசு கலைக்கப்பட்டது.
1991ல் ஆட்சி அமைத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. தலைமையிலான அதிமுக அரசு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மேலவைக்கான தீர்மானத்தை ரத்து செய்யும் ஒரு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றியது.
தொடர்ந்து 1996ம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்த திமுக மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால், மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், அப்போதும் தி.மு.க., அரசால் மேலவை அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் மீண்டும் மேலவை அமைப்பதற்கான தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் 2006ல், விக்ரமாதித்தன் கதையாக, மீண்டும் ஆட்சி அமைத்த திமுக மேலவை அமைப்பது தொடர்பான தீர்மானம் 2007 ஏப்.12ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் வரை சென்றது. ஆனால் மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தொடர்ந்து மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் தமிழகத்தில் மேலவை என்பது கடந்த 36 ஆண்டுகள் இல்லாமலே போனது.
இந்தியாவில், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என ஆறு மாநிலங்களில் மட்டுமே தற்போது சட்டமேலவை செயல்படுகிறது.
‘தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டுவரப்படும்’ என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 78 உறுப்பினர்கள் கொண்ட சட்டமேலவையை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ள தமிழக அரசு வருகிற 2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக திமுகவினர் குறிப்பிடுகின்றனர்.
மேலவை அமைந்தால் நமக்கெல்லாம் பதவி கிடைக்கும் என திமுக ஆதரவாளர்களும் ஆளுங்கட்சி ஆதரவு கட்சிகளும், அதிருப்தி கோஷ்டிகளும் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால் மேலவை அமைக்கும் தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றினாலும் அத்தீர்மானம் நாடாளுமன்றத்தின் இருஅவைகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மத்தியில் பலம் மிக்க மெஜாரிட்டி கட்சியாக உள்ள பா.ஜ.க. ‘ஒன்றிய அரசு’ என தன்னை விளிக்கும் தமிழக அரசின் மேலவை தீர்மானத்தை எந்தளவு ஆதரிக்கும் என்பதில் தான் தொடங்க இருக்கிறது அரசியல் விளையாட்டு.
இது குறித்து விரிவாக
அடுத்த இதழில் பார்ப்போம்..