பச்சையப்பன் கல்லூரி 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் இரத்து – முறைகேடு குறித்து முழுமையான ஸ்கேனிங் ரிப்போர்ட்
பச்சையப்பன் கல்லூரி 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் இரத்து – முறைகேடுகளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் துணைநின்ற உயர்கல்வி அமைச்சர், அலுவலர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா?
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் பணிஇழந்துள்ளனர்.
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரிகள் உள்ளது. இந்த அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில்,
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னையில் உள்ள பச்சையப்பர் கல்லூரி, சி.கந்தசாமிநாயுடு ஆடவர் கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பர் ஆடவர் கல்லூரி, பச்சையப்பர் பெண்கள் கல்லூரி, கடலூர் சி.கந்தசாமிநாயுடு ஆகிய 6 கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் 152 பேர் உரிய தகுதி பெறாதவர்கள் என கூறி, அதுகுறித்து விளக்கம் அளிக்க, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அறக்கட்டளை உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்யும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி, பிரேமலதா உட்பட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராயவேண்டும் என உத்தரவிட்டிருந்ததார்.
இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர், 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என உத்தரவிட்டார்.
உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்ப்பினால் 8 ஆண்டுகள் பணிநியமனம் பெற்று அரசு ஊதியம் பெற்ற ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்தின்போது பணியனுபவச் சான்றை போலியாக சமர்ப்பித்துள்ளனர் என்றும் இரு பெண் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பட்டம் முடிக்காமலே முனைவர் பட்டம் பெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்றும், பல ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் இளநிலை, முதுநிலை, எம்.பில். பிஎச்.டி.யை முடித்துள்ளார்கள் என்றும், பல பாடங்களை மாற்றி படித்து(Cross Major) முறைகேடாக நியமனம் பெற்றுள்ளனர் என்பதாக நீதிபதி தன் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரிக் கல்லூரி இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இதைக் கண்டுபிடித்துள்ளது என்றால், பணிநீக்கம் செய்யப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களும் ஆசிரியர் பணிக்குத் தகுதியுடையவர் என்றுதே நியமன ஆணையை வழங்க உத்தரவிட்டது. இவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்பு வழங்கிய பல்கலைக்கழங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) விதிகளின்படிதான் இருக்கின்றன என்ற ஏற்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள் பணிநீக்கம் சரி என்றால், தகுதியில்லாதவர்களின் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்ய வாய்மொழி உத்தரவு வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்விச் செயலாளர், அப்போதைய கல்லூரிக் கல்வி இயக்குநர், மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் – என அனைவரும் இதில் முறையாக உயர்மட்டக் குழுவை வைத்து விசாரிக்கவேண்டும் என்பதுதானே சரியாக இருக்கமுடியும்.
உயர்கல்வித்துறையில் அரசு உதவிப்பெறும் கல்லூரி ஆசிரியர் நியமனங்களில் இப்படி இலஞ்சம் தலைவிரித்து இன்றும் ஆடிக்கொண்டுதானே இருக்கின்றன. மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர்கள் இலஞ்சம் வாங்கித் தரும் இயந்திரமாகத்தானே செயல்படுகின்றனர் என்ற உண்மையை நீதிமன்றம் உணர யார் வழக்குத் தொடுப்பது என்பது தெரியவில்லை.
2015இல் நிரப்பப்பட வேண்டிய அரசுக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் 4000 விரைவில் நிரப்படவுள்ளதாக அரசாணையை தற்போதைய அரசு வெளியிட்டுள்ளது.
2016-2020 கல்வியாண்டுகளில் சுமார் 10ஆயிரம் கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அரசு காலதாமம் செய்கின்றது. கல்லூரி ஆசிரியர் பணி தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்க…. அதிகரிக்க இலஞ்சம் கொடுத்தாவது வேலைப் போய்விடுவோம் என்ற உளவியல் சிக்கலுக்கு 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆட்படுகின்றனர்.
ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவதன் மூலம் உயர்கல்வியில் நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தைத் தரமுடியும் என்பதை அரசு உணர்ந்தால் இதுபோன்ற முறைகேடுகளுக்கு முடிவு கட்டமுடியும் என்பதையும் நீதிமன்றம் எதிர்காலத்தில் அறிவுறுத்த வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
– ஆதவன்