வெடிகுண்டு பார்சல் அனுப்பிய குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!
வெடிகுண்டு பார்சல் அனுப்பிய குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!
ஓரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற விவசாயிக்கு குரியர் மூலம் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பார்சலில் அனுப்பிய நபரை போலீஸார் நெருங்கி விட்டனர். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான எல்பின் நிதி நிறுவனத்தினர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் புதுத் தெருவைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 33) என்ற பத்தருக்கு அதே தினத்தன்று வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய ஓரு பார்சல் அனுப்பியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அறிவழகனுக்கு திருச்சி தென்னூர் முகவரியிலிருந்து சி.கார்திரப்பன் என்ற முகவரியிலிருந்து புரபெஷனல் குரியர் மூலம் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் நேற்று செய்தி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, அதே முகவரியிலிருந்து நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவருக்கு ஒரு பார்சல் வந்துள்ளதை கண்ட புரபெஷனல் அலுவலக நிர்வாகி அதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவரது தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்று அப் பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த விவசாயி அறிவழகனுக்கு அனுப்பப்பட்டிருந்ததைப் போலவே வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது.
நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமார் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மக்கள் நலச் சங்க நிர்வாகிகளால் நடத்தப்பட்டுவரும் எல்பின் நிதி நிறுவனத்தில் தனது சொந்த பணம் ரூ 6 லட்சம், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வசூலித்து கொடுத பணம் ரூ 8 லட்சம் என மொத்தம் ரூ14 லட்சம் டெபாஸிட் செய்துள்ளார்.
ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி அவருக்கு அந்நிறுவனத்தினர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனிடையே, எல்பின் நிதி நிறுவனம் சார்பில் தலையாமங்கலத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் ஏற்கெனவே வீரக்குமாரை மிரட்டியுள்ளார் என்;பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த அறிவழகன் போலீஸில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனத்தினர், அறிவழகன், வீரக்குமார் ஆகிய இருவரையும் மிரட்டுவதற்காக வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் அடங்கிய பார்சல்களை அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பார்சலை அனுப்பியது யார் என்பதைக் கண்டறிய திருச்சியில் புரபெஷனல் குரியர் அலுவலகத்தின் உள்ளேயும் அதன் வெளியேயும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரண்டு பார்சல்களை அனுப்பியது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவர் நன்கு திட்டமிட்டு தலையில் தொப்பி அணிந்து, முகக் கவசம் அணிந்துள்ளார். பார்சல்களை அனுப்பிய பின், அவர் சாலையில் நடந்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுக்காட்சிகளை ஆய்வு செய்தால் அவரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் போலீஸார்.