அங்குசம் பார்வையில் ‘குலசாமி’
தயாரிப்பு: மைக் புரொடக்ஷன்ஸ். தமிழக ரிலீஸ்: சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ். டைரக்ஷன்: ‘குட்டிப்புலி’ ஷரவண சக்தி. வசனம்: ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி. நடிகர்—நடிகைகள்: விமல், தான்யா ஹோப், கீர்த்தனா, வினோதினி, போஸ்வெங்கட். சிறப்புத் தோற்றம்: ரிடையர்ட் டி.ஜி.பி.ஜாங்கிட். ஒளிப்பதிவு: ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர், இசை: வி.எம்.மகாலிங்கம், ஸ்டண்ட்: கனல் கண்ணன். பி.ஆர்.ஓ. பி.தியாகராஜன்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சேர்ந்த( அட நம்ம ஊரு சாயல்குடிக்குப் பக்கத்துல தான் இருக்கு) மீனவர் விமல். இவரின் பாசத்திற்குரிய தங்கை கீர்த்தனா +2 தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெறுகிறார். தங்கையை டாக்டராக்க வேண்டும் என்பது விமலின் கனவு, லட்சியம். இந்த லட்சியம் நிறைவேற ஊர்மக்களே இணைந்து உதவிக்கரம் நீட்டுவதால், மதுரையில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் தங்கையை சேர்க்கிறார் விமல்.
தங்ககையை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாலும், தங்கைக்காக மதுரையிலேயே ஆட்டோ டிரைவராக செட்டிலாகிறார், அதுவும் தங்கச்சி படிக்கும் கல்லூரி வாசல் ஆட்டோ ஸ்டாண்டிலேயே. கல்லூரியின் பிரின்சிபல் வினோதினி, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி ஸ்டைலில் பெரிய மனிதர்களுக்கு காலேஜ் கேர்ள்ஸ்’சை சப்ளை பண்ணுபவர். அப்படி வினோதினி விரித்த வலையில் சிக்காமல் தப்பும் விமலின் தங்கையைக் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை செய்துவிடுகிறான் வில்லனின் ஆள்.
தங்கையின் மரணத்தால் நொந்து நொம்பலமான விமல், தாடியை வளர்த்துக் கொண்டு குடிகாரனாகி, கோப வெறி தலைக்கேறி, கல்லூரி மாணவிகளை நாசமாக்கும் காமவெறிக்கூட்டத்தை அழிக்கும் குலசாமி அவதாரம் எடுக்கிறார்.
காமெடி ஜானரிலும் ஒரு சில காமநெடி ஜானரில் மட்டுமே காலத்தைக் கடத்தி வந்த விமலுக்கு இந்த ‘குலசாமி’ மூலம் ஆக்ஷன் ஹீரோ வரம் கிடைத்திருக்கிறது. தங்கையின் இழப்பை நினைத்து உள்ளுக்குள் குமுறுவது, தனது தங்கைக்கு ஏற்பட்டது போல சில மாணவிகளுக்கும் நிகழ்ந்ததும் கண்களில் வெறி ஏறி, பொறி பறக்க, வில்லன்களை பொளந்து கட்டுவது என டோட்டல் டிஃபெரண்டாக மாறிவிட்டார் விமல். இப்போது கிடைத்திருக்கும் இந்த வரத்தை கைநழுவாமல், கைகழுவி விடாமல் காப்பாற்றிக் கொண்டு கோலிவுட்டில் ஜெயிப்பது விமலின் கைகளில் தான் இருக்கு.
ஹீரோயின் தான்யா ஹோப்பிற்கு சிலபல சீன்கள் தான் என்றாலும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் கொடுத்திருக்கிறார், படத்தில் விமலின் மாமாவாக வரும் ஆட்டோ டிரைவர் ஷரவண சக்தி. இருந்தாலும் தான்யா ஹோப்பைவிட விமலின் தங்கையாக வரும் கீர்த்தனாவின் களையான கிராமத்து முகம் நமக்குள் பளிச்சென ஒட்டிக் கொள்கிறது. அதே போல் இன்ஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட்டைவிட சப்—இன்ஸ்பெக்டராக வரும் முத்துப்பாண்டி அதிக சீன்களில் வந்து நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்சில் போஸ் வெங்கட்டிடம், “நானும் ஒரு பொம்பளப்புள்ளய பெத்தவன்ற முறையில சொல்றேன், அந்த காமக் கொடூரன்களை பொலி போட்ட ஆட்டோ டிரைவர் தான் குலசாமி” என குமுறி வெடிக்கும் போது ரொம்பவே கவனம் ஈர்க்கிறார்.
ஜே.கே.ரித்தீஷை வைத்து எடுத்த ‘நாயகன்’ படத்தில் பள்ளிச் சிறுமிகளைக் கடத்தி நாசம் செய்யும் காமவெறி ஓநாய்களைப் பற்றி அழுத்தமாகச் சொன்னவர் டைரக்டர் ஷரவண சக்தி. இந்த ‘குலசாமி’யில் கல்லூரி மாணவிகளை வேட்டையாடும் வெறி நாய்களை வேட்டையாடியிருக்கிறார். சமூக அக்கறையுள்ள ஷரவண சக்தி, காமெடி நடிகராக தொடர்வதைவிட்டுவிட்டு, தொடர்ந்து டைரக்டராகவே இயங்கலாம்.
அது சரி, டைரக்டரண்ணே, கடலாடி என்ற கிராமத்தில் கடல் இருக்குன்னு உங்ககிட்ட எவன் சொன்னான்? ஹீரோ விமலின் கேரக்டர் பேரு சூரசங்கு, மீன்பிடித் தொழில், கழுத்தில் சங்கு மாலை அப்படிங்கிறதால கடல் இருக்கும் கிராமமா காட்டிட்டீகளோ? ஏன்னா நமக்கும் ஊரு, அந்த கடலாடிக்குப் பக்கத்துல இருக்கும் சாயல்குடி தான். விடுப்பா..விடுப்பா..சினிமாவுல இதெல்லாம் சகஜம் தானப்பா.
க்ளைமாக்சில் சில நிமிடங்களே வந்தாலும் வெயிட்டாக வருகிறார் ரிடையர்டு டி.ஜி.பி.ஜாங்கிட்.
கேமராமேன் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரைப் பத்தி புதுசா ஒண்ணும் நாம சொல்லிரப்போறதில்ல. கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையான தொழில்நுட்பசாலி அவர். ‘குலசாமி’க்கு அவரின் திறமை ரொம்பவும் பயன்பட்டிருக்கிறது. மியூசிக் டைரக்டர் வி.எம்.மகாலிங்கத்தின் பணியும் ஓகே.தான்.
‘குலசாமி’ விமலின் மார்க்கெட்டைக் காப்பாற்ற வந்திருக்கும் சாமி.
–மதுரைமாறன்