அங்குசம் பார்வையில் ‘தீர்க்கதரிசி’
தயாரிப்பு:’ ஸ்ரீ சரவணா பிலிம்ஸ்’ பி.சதீஷ்குமார். டைரக்ஷன்: பி.ஜி.மோகன் & எல்.ஆர்.சுந்தரபாண்டியன். நடிகர்—நடிகைகள்: சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரா, மோகன்ராம், உமா பத்நாபன், மதுமிதா, மூணாறு ரமேஷ். ஒளிப்பதிவு: ஜே.லக்ஷ்மண், இசை: ஜி.பாலசுப்பிரமணியன், எட்டிங்: சி.கே.ரஞ்சீத், ஆர்ட் டைரக்டர்: பி.ராஜு, நடனம்: தினேஷ், ஸ்டண்ட்: ‘டான்’ அசோக். பி.ஆர்.ஓ.சதீஷ்( எய்ம் )
”சென்னை அடையாறு பகுதியில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும் ஏரியாவில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்யப் போகிறார்கள்” போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு ஆண் குரல் போன் வருகிறது. இது சும்மா வெத்துவிட்டு என சும்மா இருந்துவிடுகிறது போலீஸ். ஆனால் நிஜத்தில் அதே ஏரியாவில் ஒரு பெண் கொலையாகிறார். கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்யும் ஆண் குரல் டி.வி.சேனல்களுக்கும் போன் செய்வதால், போலீஸின் அலட்சியம் குறித்து மீடியாவில் பிரேக்கிங் ஆக்கிவிடுகிறார்கள்.
இதனால் பதட்டமாகும் சென்னை சிட்டி கமிஷனர், அந்தக் கொலையை விசாரிக்க, இன்ஸ்பெக்டர்கள் துஷ்யந்த்( நடிகர்திலகத்தின் பேரன்) ஜெய்வந்தையும் களத்தில் இறக்குகிறார். அதே போலீஸ் கண்ட்ரோல் ரூமில் கம்ப்யூட்டர் டெக்னாலஜிஸ்டாக வேலை பார்க்கிறார் ஸ்ரீமன். அந்தப் பெண்ணின் கொலை விசாரணைக்காக இன்ஸ்பெக்டர்கள் களத்தில் இறங்கும் போது, அண்ணாசாலையில் ஒரு விபத்து நடக்கப் போவதாக அதே ஆண் குரல் சொல்கிறது. இதுவும் நடந்துவிடுகிறது. இந்த நிலையில் தான் ஜே.சி.அஜ்மலை களம் இறக்குகிறார் கமிஷனர். இதற்கடுத்து அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் பல கோடி ரூபாய் கொள்ளை நடக்கப் போவதாக அந்த ஆண் குரல் அலெர்ட் பண்ணுகிறது. போலீசுக்குச் சொல்லும் தகவல்களை மீடியாவுக்கும் அந்த ஆண் குரல் பாஸ் செய்வதால், சென்னை மக்களிடையே ‘தீர்க்கதரிசி’ என புகழ் பெறுகிறார் அந்த நபர்.
அந்த தீர்க்கதரிசி யார் என்பதை பக்கா ஸ்பீட் ஸ்கிரீன் ப்ளேவுடன் பரபரப்பு, படபடப்பு, எதிர்பார்ப்புடன் க்ளைமாக்ஸ் வரை கொண்டு வந்து அசத்திவிட்டார்கள் இரட்டை இயக்குனர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியனும். கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் அதிகம் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார்கள் டைரக்டர்கள். அதையும் சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் படமாக்கியதற்காகவே இரட்டையர்களை தாராளமாக பாராட்டலாம்.
க்ளைமாக்ஸ் நெருங்கிருச்சு என ரசிகர்கள் நினைக்கும் போது சத்யராஜுக்கு எண்ட்ரி கொடுத்து க்ளைமாக்சுக்குள் ஒரு க்ளைமாக்ஸ் வைத்து செமத்தியான ட்விஸ்ட் டேஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் மோகனும் சுந்தரபாண்டியனும். கடைசி 10 நிமிடங்கள் வந்தாலும் தான் ஒரு ‘எக்ஸ்பெர்ட் சீனியர் ஆர்ட்டிஸ்ட்’ என்பதை புரூஃப் பண்ணியிருக்கார் சத்யராஜ்.
மிஷ்கினின் ‘அஞ்சாதே’, கே.வி.ஆனந்தின் ‘கோ’ படங்களில் வெயிட்டான கேரக்டர்களில் நடித்து கவனம் ஈர்த்த அஜ்மலுக்கு இடையில் பத்து வருடங்கள் கவனச் சிதைவு ஏற்பட்டதால் காணாமல் போயிருந்தார். இந்த ‘தீர்க்கதரிசி’ மூலம் செம ஃபிட்டான போலீஸ் அதிகாரியாக வெயிட் காட்டியிருக்கார். இனிமேலாவது ’வெயிட் லாஸ்’ வராம பார்த்துக்கங்க அஜ்மல் ப்ரோ. கதையில் நடக்கும் கொலைகள், விபத்து ஆகியவற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஸ்ரீமனுக்கு நல்ல அழுத்தமான கேரக்டர் தான்.
சைக்யாட்ரிஸ்டாக வரும் ஒய்.ஜி.மகேந்திரா, கண்ட்ரோல் ரூம் போலீசாக வரும் மூணாறு ரமேஷ், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வரும் மதுமிதா, ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு பெரிய சப்போர்ட்டாக இருப்பவர்கள் கேமராமேனும் மியூசிக் டைரக்டரும், சாஃப்ட்வேர் டெக்னாலஜி டீமும் தான்.
படம் முடிஞ்சு தியேட்டரைவிட்டு வெளியே வந்து, வீட்டுக்கும் வந்த பிறகு தான் நமக்கு ஒரு விசயம் மண்டைக்குள்ள தட்டுப்பட்டுச்சு. ”ஆமா படத்துல ஹீரோயினே இல்லையே”…
இந்த ‘தீர்க்கதரிசி’க்கு அது தேவையே இல்லையே..
–மதுரை மாறன்