போடி மீனாட்சியம்மன் கம்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் ! அழுகி நாறும் பேரூராட்சி நிர்வாகம் !!
போடி மீனாட்சியம்மன் கம்மாயில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கும் மீன்கள்!
துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம்!!
தேனி மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கம்மாயாக உள்ளது. மீனாட்சியம்மன் கம்மாய். கொட்டகுடி ஆறு ராஜ வாய்க்கால் மூலம் இந்த குளத்திற்கு நீர் நிரப்பப்படுகிறது.
இந்த குளத்திற்கு வரும் ராஜா வாய்க்காலில் போடி பகுதியில் உள்ள கழிவு நீர் கலந்து கண்மாய்க்கு வருவதால் இந்த நீரானது மாசடைந்து குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயத்திற்கு மட்டும் பயன்பட்டு வருகிறது.
அதிகளவு கழிவுநீர் கலந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்குகின்றது. செத்துக்கரை ஒதுங்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி தண்ணீரும் மேலும் மாசடைந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும், பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது. கண்மாயை சுற்றிலும் மீன்கள் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த சுத்தமான நீரானது கழிவுநீராகவே இந்த கம்மாய்க்கு வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும் தற்போது மீன்கள் செத்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீரானது துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நேற்றல்ல; இது வருடம் தோறும் வெயில் காலங்களில் தொடரும் பிரச்சினையாகவே நீடிக்கிறது. கம்மாய்க்கு நீர் வரும் வழியிலேயே மாசடைந்து வருவதை உரிய முறையில் ஆய்வு செய்து, அப்பிரச்சினையை தீர்ப்பதற்குண்டான வழிமுறைகளை கண்டறிவதும் அதற்கேற்ப செயல்திட்டங்களை தீட்ட வேண்டியதுமான தனது கடமை மறந்த மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் அக்கறையின்மை மற்றும் அலட்சியமே முதற்காரணமாக இருக்கிறது. கம்மாய் கரையோரம் அழுகி நாறுவது மீன்கள் மட்டுமல்ல; மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாக சீர்கேடும்தான்!
- ஜெ.ஜெ.