டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ – உறவினர்கள் கோரிக்கை!
டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ – உறவினர்கள் கோரிக்கை!
தஞ்சாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரசு அனுமதிபெற்ற மதுவருந்தும் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடித்த 2 கூலித் தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக உண்மையைக் கண்டறிந்து வெளிக்கொணர அவ்வழக்கு விசாரணையை உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பலியான இருவரின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்யப்போவதாக இச்சம்பவத்தில் பலியான குப்புசாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் அனுமதிக்க்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக (காலை 11.15 மணியளவில்) சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த ‘குட்டி’ விவேக் என்ற 2 மீன் வெட்டும் தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
வாயில் நீர் வழிந்தவாறு மயங்கி விழுந்த குப்புசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மதுக்கடை வாசலில் மயங்கி விழுந்த ‘குட்டி’ விவேக் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்ற பிற்பகல் 2.45 மணியளவில் இறந்தார்.
ஏற்கெனவே செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் மது குடித்து 22 நபர்கள் இதுவரை இறந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. அதோடு, இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தஞ்சையில் டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் விற்கப்பட்ட மதுவைக் குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
சயனைடு கலந்த மதுவைக் குடித்ததே இவ்விருவரின் சாவுக்கு காரணம் என viscera test-ல் தெரிய வந்துள்ளதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
இது கொலையா அல்லது தற்கொலையா, அதற்கான மோட்டிவ் என்ன என்பன போன்ற விபரங்கள் விசாரணை முடிவில்தான் தெரிய வரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், மதுகுடித்து பலியான இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதை ஏற்க மறுத்தனர். பொதுமக்களும் இதை நம்பவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, குப்புசாமியின் உறவினர் தமிழரசன், நண்பர் சரவணன், குட்டி விவேக்கின் அண்ணன் வினோத் (38) உள்ளிட்டோரை போலீஸார் தங்களது கஷ்டடியில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அவ்விருவரும் குடித்த டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்தது யார், எதற்காக என்ற விபரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், 68 வயதுடைய குப்புசாமிக்கு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதேபோல அவரை கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் எவரும் இல்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
“அவருக்கு கெண்டை மீன் கொழம்புனா ரொம்ப உசிரு. அன்னிக்கு ‘கெண்டை மீன் வாங்கி வெச்சிருக்கேன்…வந்து வாங்கிட்டு போ’ன்னு அவர் கூப்பிட்டார். அதனால நானும் எனது மகளும் (சூரியா) ஆட்டோவில் அவரது கடைக்கு போனோம். பக்கத்து கடையில் மீனை வெட்ட கொடுத்திருந்தார்.
3 மீன்களை வெட்டி முடிச்சிட்டாங்க. இன்னும் 2 மீன்களை வெட்டி முடிப்பதற்காக நானும் என் மகளும் காத்திக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்திற்குள்ள அவர் எதிரேயுள்ள டாஸ்மாக் கடைக்கு ஓடோடிச் சென்று குடித்துவிட்டு திரும்பி வந்தார். நெஞ்சு எரிச்சலாக இருக்குனு சொன்னார். அவரது வாயில் நீர் வழிஞ்சது. எங்க கண் முன்னாடியே அவர் அப்படியே மயங்கி கீழே விழுந்திட்டார்,” எனக் கூறி கண் கலங்குகிறார் குப்புசாமியின் மனைவி காஞ்சனா என்ற காஞ்சனா தேவி (58).
குப்புசாமியை ஆட்டோவில் ஏற்றி டபீர்குளம் ரோட்டில் டாக்டர் சேகர் என்பவரின் கிளினிக்கிற்கு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். “ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவரோட உசிரு போயிருச்சு”, என்கிறார் காஞ்சனா.
அவருக்கு குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இப்போதான் பேரன் பிறந்து 6 மாசம் ஆகுது. ரொம்ப சந்தோசமா இருந்தார். தற்கொலை செஞ்சிக்கிறதா இருந்தா, அவர் ஏன் ‘மீன் கொழம்பு வை, மதியம் வந்து சாப்பிடுறேன்னு’ என்கிட்ட சொல்லணும் என்கிறார் காஞ்சனா.
“டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கி குடிச்ச அந்த சரக்குலதான் ஏதோ கோளாறு இருந்திருக்கு. ஆனா அதுபத்திய உண்மைய சொல்லாம அரசு அதிகாரிகளும் போலீஸாரும் மறைக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செஞ்சிக்க நெனச்சிருந்தா சாதாரணமா கடைகளில் கிடைக்கக் கூடிய பூச்சிக்கொல்லி மருந்து அல்லது எலி பேஷ்ட் அல்லது பாலிடால் வாங்கி சாப்பிட்டிருக்க முடியும்,” என்கிறார் குப்புசாமியின் மைத்துனர் வழக்கறிஞர் நாகேந்திரன்.
“அதோடு, மீன் வெட்டிக் கொடுப்பது மூலம் தினமும் ரூ.100, ரூ.200னு சம்பாதிக்கும் சாதாரண கூலித் தொழிலாளிகளுக்கு சயனைடு விஷம் எப்படி கிடைக்கும்?,” என்கிறார் நாகேந்திரன்.
சம்பவம் நடந்து இன்னையோட ஐந்து நாட்கள் ஆகுது. ஆனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இதுவரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தரல. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தர மறுக்குறாங்க. இதுபற்றி தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலையத்துக்கு நேரில் சென்று கேட்டேன். அங்கிருந்த போலீஸார் உரிய பதில் சொல்ல மறுத்ததுடன் வழக்கறிஞரான எனக்கே இன்ஸ்பெக்டரின் நம்பரை தர மறுத்துவிட்டனர் என்கிறார் நாகேந்திரன்.
கள்ளச்சாராயம் குடிச்சு இறந்தவர்களுக்குகூட தமிழக அரசு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கியது. ஆனால் டாஸ்மாக் சரக்கு குடிச்சு 2 பேர் இறந்து இத்தனை நாள் ஆகியும் அவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை எந்தவொரு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை என்கிறார் வழக்கறிஞர் நாகேந்திரன்.
இச்சம்பவம் குறித்து தமிழக போலீஸார் நடத்தும் விசாரணை திருப்திகரமாக இல்லை. இவ்வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். எங்களது கோரிக்கைக்கு அரசு செவிமடுக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்வோம் என்கிறார் வழக்கறிஞர் நாகேந்திரன்.