சேலம்: ஊழியரின் சான்றிதழை தரமறுத்து நகைக்கடை அதிபர் அடாவடி!
பள்ளி மாற்றுச் சான்றிதழை திருப்பித் தர மறுத்து தாக்கிய தனியார் நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பள்ளி மாற்றுச் சான்றிதழை திருப்பித் தர மறுத்து தாக்கிய தனியார் நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சேலம் கடை வீதியில் செயல்பட்டு வரும் கே ஜே எஸ் என்ற நகைக்கடையில், வரவேற்பு அறையில் கடந்த 08.04.2022 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்துள்ளார் . அப்போது தினேஷின் பத்தாம் வகுப்பு (மாற்றுச் சான்றிதழ்) டிசி- யை நகைக்கடை உரிமையாளர் ஆனந்த் வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். சுமார் 8 மாதங்கள் பணி செய்த தினேஷ், அதிகபட்ச பணி நேரம் , சம்பளம் போதாமை உள்ளிட்ட காரணங்களால் வேலையிலிருந்து நின்று கொள்வதாக உரிமையாளர் ஆனந்திடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து வேலை செய்ய கே ஜே எஸ் நகைக்கடை நிர்வாகம் தினேஷை நிர்பந்தப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ் 30 .11. 2022 ல் வேலையை விட்டு நின்று உள்ளார்.
அவரிடம் இருந்து பெற்ற டிசி-யை திரும்ப தர மறுத்த நகைக்கடை உரிமையாளர் ஆனந்த் பல மாதங்களாக அலைக்கழித்து உள்ளார். இது தொடர்பாக தினேஷ் கடிதம் ஒன்றையும் நகைக்கடை நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உரிமையாளர் ஆனந்த் கடந்த 23.5.2023 அன்று கடைக்கு வருமாறு தினேஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பேரில் சென்ற தினேஷ் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார் . தொடர்ந்து அவரை தாக்கி, கொலை மிரட்டலும் நிர்வாகத்தினர் விடுத்துள்ளனர். மேலும், டிசி தர முடியாது என்று கூறிய கடை உரிமையாளர் ஆனந்த் டவுன் காவல் நிலைய எஸ்ஐ ஒருவரை அழைத்து தினேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. “உன் மீது பொய் வழக்கு போட்டு விடுவேன்” என்றும் ஆனந்த் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இன்று சேலம் காவல் உதவி ஆணையர் ( தெற்கு சரகம் ) அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார். தனது டிசி – யை பெற்று தருமாறும் தன் மீது தாக்குதல் நடத்திய கே.ஜே.எஸ். நகைக்கடை உரிமையாளர் ஆனந்த் மற்றும் எஸ்.ஐ. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் .
-சோழன் தேவ்