அங்குசம் பார்வையில் ‘சார்ல்ஸ் எண்டெர்பிரைசஸ்’
அங்குசம் பார்வையில் ‘சார்ல்ஸ் எண்டெர்பிரைசஸ்’
தயாரிப்பு: ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் டாக்டர். அஜித் ராய். டைரக்ஷன்: சுபாஷ் லலிதா சுப்பிரமணியன். நடிகர்-நடிகைகள்: ஊர்வசி, குருசோமசுந்தரம், பாலு வர்க்கீஸ், கலையரசன். ஒளிப்பதிவு: ஸ்வரூப் பிலிப், இசை: வி.கே.சுப்பிரமணியன், எடிட்டிங்: அச்சு விஜயன். பி.ஆர்.ஓ.யுவராஜ்.
சமீபத்தில் மலையாளத்தில் ரிலீசாகி ஹிட்டடித்த படத்தை தமிழ் வசனப்படுத்தி இந்த வாரம் கோலிவுட்டில் களம் இறக்கியிருக்கிறார்கள் இந்த ‘சார்ல்ஸ் எண்டெர்பிரைசஸ்’ படத்தை. புராதனமான பிள்ளையார் சிலை ஒன்று ஊர்வசிக்குக் கிடைக்க, அதை வீட்டில் வைத்து பூஜை செய்கிறார். அந்தச் விலைமதிப்பு மிக்க சிலையை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டும் தேடுகிறது, சிலைகளைக் கடத்தி விற்கும் கும்பலின் தலைவி ஒருவரும் அதை லபக் பண்ண களம் இறங்குகிறார். அந்தப் பிள்ளையாருக்கு தனியாக கோவில் கட்டினால் ஐஸ்வர்யம் பெருகும் என்கிறார் ஜோசியர்.
இரவானால் கண் பார்வைக் குறைபாடுள்ள ஊர்வசியின் மகன் பாலு வர்க்கீஸுகு தனியாக ஓட்டல் வைக்கும் ஆசையும் உள்ளதை ஸ்மெல் பண்ணி அவருக்கு பிராக்கெட் போட்டு 50 லட்சம் விலை பேசுகிறார் கடத்தல் கும்பல் தலைவி. பணத்திற்காக தனது வீட்டிலிருக்கும் சிலையையே அபேஸ் பண்ணி, ஓடாமல் நிற்கும் காருக்குள் மறைத்துவிட்டு, அதை கலையரசன் துணையுடன் விற்கவும் களம் இறங்குகிறார் வர்க்கீஸ்.
க்ளைமாக்ஸ் என்ன என்பது தான் இந்த ‘சார்ல்ஸ் எண்டெர்பிரைசஸ்’. திருட்டுப் பிள்ளையாருக்கு, சாரி.. பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்து வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகும் என்ற இந்திய செண்டிமெண்டை மலையாள பூமியில் சினிமாவாக்க்கி, இப்ப தமிழ் பூமியிலும் கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன். ஊர்வசியின் கணவராக குருசோமசுந்தரம், பிக்பாக்கெட் பேர்வழியாக கலையரசன் வருகிறார்கள்.
ஆங்காங்கே தமிழ் எழுத்துக்களைக் காண்பித்தாலும் முழுக்க மலையாள மண்ணின் நடிகர்—நடிகைகள் முகமே பளிச்சென தெரிகிறது. ஊர்வசி ரொம்பவே தளர்ந்துவிட்டதை, அவரது வற்றிப்போன முகமும் ( என்னதான் ஏழெட்டு இன்ச்சுக்கு மேக்கப் போட்டும் நோ யூஸ் டைரக்டரே) தடுமாற்றமான நடையும் காட்டிவிடுகிறது. இசையும் ஒளிப்பதிவும் படத்துக்குத்தகுந்த வகையில் இருக்கு.
திருட்டுப் பிள்ளையாரால் க்ளைமாக்சில், சாமி சிலைகளை விற்கும் கடைக்கும் ஓனராகிறார் பாலு வர்க்கீஸ். கலையரசனின் கேரக்டர் பெயரான சார்லஸ் தான் கடையின் பெயர் ‘சார்ல்ஸ் எண்டெர்பிரைசஸ்’.
–மதுரைமாறன்