லஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா? – அமைச்சர் அன்பில் மகேஸ்
இலஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா ? – அமைச்சர் அன்பில் மகேஸ்
கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திருச்சி மாநகர் பாஜக சார்பில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மற்றும் திருவெறும்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன் என்பவர், குண்டூர் பர்மா காலனியைச் சார்ந்த பெண் ஒருவருக்கு ஒன்றியச் செயலாளர் கங்காதரன் மற்றும் தன்னுடைய பரிந்துரையின் பெயரில்தான் அரசு வேலை கொடுக்கப்பட்டது. அதற்கு இலஞ்சமாக 3 இலட்சம் ரூபாய் தரவேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் பாலமுருகன் பேசிய இருந்தார். இந்த ஆடியோ பேச்சின் விவரங்கள் ஏப்.5 நாளிட்ட தினமலர் (சென்னை பதிப்பில்) நாளிதழில் விரிவாக 4 பத்தி செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆடியோவில் பேசிய திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் பாலமுருகன், ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல என்றோ, இது குரல் மாற்றி யாரோ பேசிய பேச்சு என்றோ மறுக்கவில்லை. மாறாகத் தன் அலைபேசியைச் சுச் ஆ செய்து வைத்துள்ளார். பாலமுருகன் ஆடியோவில் பேசியது கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் என்று குண்டூர் ஊராட்சி சார்ந்த 10 கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களிடம் “பாலமுருகன் மீது நடவடிக்கை வேண்டும்” என்று முறையீட்டு மனுவைக் கொடுத்திருந்தனர்.
பாலமுருகன் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோவில், “தன்னையும் தேவையில்லாமல் இணைத்து, கட்சி பொறுப்பில் இல்லாத நான் அரசு வேலைக்கு இலஞ்சம் கேட்டேன்” என்று அவதூறு பரப்பியதாகக் கொந்தளித்த முன்னாள் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், குண்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.மாரியப்பன் அவர்கள் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் மகேஸ், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை முருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோருக்குப் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி வைத்தார். ஆடியோ வெளியிட்டுப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அமைச்சர் வட்டாரத்திலிருந்து, உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
படிக்க: * கட்டி ஏழு வருஷமான கக்கூச கூட திறக்காத அடச்சீ… இப்படியும் ஒரு ஊராட்சியா ?
பாஜக தரப்பில் பேசிய திருச்சி மாநகரப் பொறுப்பாளர் ஒருவர், “திமுகவைச் சார்ந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி பாலமுருகன் ரூ.3இலட்சம் இலஞ்சம் கேட்டுப் பேசிய ஆடியோ வெளியிட்டு ஏறத்தாழ 90 நாள்களைத் தொட்ட போகின்றது. இதுவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலஞ்ச வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்ற முயற்சி எடுப்பதுபோல், அமைச்சர் அன்பில் மகேஸ் இளைஞர் அணி பாலமுருகனைக் காப்பாற்ற முயற்சி எடுத்துவருகிறார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது குறித்துத் தலைமைக்குத் தெரிவித்து, கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.
இளைஞர் அணி பாலமுருகன் தன்மீது அவதூறு பரப்பியதாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எம்.மாரியப்பன் அவர்களை அங்குசம் செய்தி இதழ் தொடர்பு கொண்டு கேட்டபோது,“என்மீது அவதூறு பரப்பி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டித் தலைமையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கடிதங்கள் அனுப்பி வைத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை; தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. என் மீது அவதூறு பரப்பிய பாலமுருகன் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்தேன். அதற்குப் பாலமுருகன் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து தற்போது பாலமுருகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். அங்கே எனக்குரிய நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
தமிழக அளவில் இலஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றது. திருச்சியில் இலஞ்சம் கேட்டு இளைஞர் அணி பாலமுருகன் பேசிய ஆடியோவைப் பாஜக வெளியிட்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகின்றார் என்று பொதுமக்களும் திமுக தொண்டர்களும் பேசி வருகின்றனர். அமைச்சர் அன்பில் மகேஸ் இலஞ்சம் கேட்டுப் பேசி ஆடியோ உண்மையா? என்பதை ஆராய்ந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே எல்லாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ஆதவன்
தொடர்புடைய பதிவுகள்:
* டால்மியா சிமெண்ட் ஆலையில் கல்லக்குடி நகர திமுக செயலர் ரகளை – நடந்தது என்ன ?