ரவுடி அரசியல் – சர்ச்சையில் திமுக ஒன்றிய செயலாளர் !

0

”ரவுடி அரசியல்” செய்கிறாரா, உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர் !

டால்மியா ரகளையைத் தொடர்ந்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம். உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய வாகனம் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினையில், முத்துச்செல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்திருக்கிறார், உப்பிலியபுரத்தைச் சேர்ந்த நடராஜன். இவரது புகாரைத் தொடர்ந்து, ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளியது தொடர்பான விவகாரத்தில் தேவையில்லாமல் தன்னை சம்மந்தப்படுத்தி, முத்துச்செல்வம் தனக்கும் கொலைமிரட்டல் விடுத்துவருகிறார் என ரெங்கநாதன் என்பவரும் புகார் கொடுத்திருக்கிறார்.

2 dhanalakshmi joseph

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்த நடராஜனிடம் பேசினோம், “மே-19ந் தேதி காலை 10 மணிக்கு உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய டாடா சுமோ வாகனம் ஏலம் விட இருந்தது. பி.டி.ஓ. வந்தாதான் ஏலம்னு எங்களை மதியம் வரைக்கும் காத்திருக்க வச்சாங்க. அப்போதான், முத்துசெல்வன் வந்தாரு. இவரு வந்ததும் ஏலம் ஆரம்பிச்சிக்கலாம்னு சொன்னாங்க. பி.டி.ஓ. வரட்டும். இப்ப என்ன அவசரம்? அவர் வந்தபிறகு ஏலத்தை நடத்துங்கனு சொன்னேன். “எவன்டா அது ஏலம் நடத்தக்கூடாதுனு சொல்றது? எங்க இஷ்டத்துக்குதான் நடத்துவோம்”னு கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பிச்சிட்டாரு முத்துசெல்வம்.

அவருகூட வந்திருந்த வாசு, செந்தில் ஆகியோர், “இனிமேல் இங்க இருந்தீன்னா கத்தி எடுத்து சொருகிடுவோம்”னு மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நேரா போலீஸ்டேஷன்ல போயிட்டு கம்ப்ளையிண்ட் கொடுத்தேன். கொடுத்த புகாருக்கு மனு ரசீது வாங்கவே ஒருவாரம் அலைஞ்சேன். அதுக்கப்புறம் கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை; எஃப்.ஐ.ஆரும் போடலை. ஒரு வழியா, ஜூன் 17-ந்தேதிதான் துறையூர் இன்ஸ்பெக்டர் என்னையும் முத்துச்செல்வத்தையும் கூப்பிட்டு விசாரிச்சாரு. அப்போகூட, “என் மேல ஒரு கேசு போட்டா, உன் மேல பத்து கேசு போடுவேன்… பாக்குறியா?”னு இன்ஸ்பெக்டர வச்சிகிட்டே என்னை மிரட்டினாரு.

- Advertisement -

- Advertisement -

ரவுடி அரசியல் - சர்ச்சையில் திமுக ஒன்றிய செயலாளர்!
ரவுடி அரசியல் – சர்ச்சையில் திமுக ஒன்றிய செயலாளர்!

இந்த நிலைமையிலதான், ஜூன்-20 ஆம் தேதி எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்தேன். அதுக்கப்புறம்தான், ”உங்க கம்ப்ளைண்டுக்கு எஃப்.ஐ.ஆர். அப்பவே போட்டுட்டோம். உங்ககிட்ட ஏட்டுதான் கொடுக்க மறந்துட்டாரு சொல்லி என்கிட்ட எஃப்.ஐ.ஆர். காப்பியை கொடுத்தாங்க.” என்கிறார், நடராஜன்.
மேலும், “இந்த டாடா சுமோ வாகனத்தை இதுக்கு முன்னாடி, ஏப்ரல் மாசம் 26 ஆம் தேதியே ஏலம் விட்டாங்க. ஆரம்ப விலை 50,000 சொன்னாங்க. அப்போ, சசிக்குமார் என்பவர் அந்த வண்டிய 1,05,000/-க்கு ஏலமும் எடுத்துட்டாரு. சசிகுமாரும் அவங்க ஆளுதான். ஆனால், அவரு அந்தப் பணத்தை கட்டலை. பணம் கட்டாம விட்டு, மறு ஏலத்துல அதவிட கம்மியா எடுத்துடலாம்னு நினைச்சாங்க. நாங்க ஏலத்துக்கு வருவோம்னு அவங்க எதிர்பார்க்கலை, வந்துட்டோம்னு பிரச்சினை பன்னிட்டாங்க.” என்கிறார்.

சம்பவம் நடந்தது, புகார் கொடுத்தது மே-19ஆம் தேதி. ரெண்டு பேரையும் கூப்பிட்டு விசாரிச்சது ஜூன்-17ஆம் தேதி. நியாயம் கேட்டு நடராஜன் எஸ்.பி. ஆபிசில் புகார் செஞ்சது ஜூன்-20 ஆம் தேதி. அதன்பிறகு, அவர் கையில் எஃப்.ஐ.ஆர் (ஜூன் 17 ம் தேதியிட்டு) கிடைத்தது, ஜூன் 21 ஆம் தேதி. இந்த கால தாமதங்களே, இப்பிரச்சினையில் ஏதோ ஓர் ’தலையீடு’ இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

வழக்கை விசாரித்துவரும் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் பேசினோம், “போதுமான ஆதாரங்கள் இல்லாமல் எஃப்.ஐ.ஆர். போட முடியாது என்பதால் தான் இந்த தாமதம். சம்பவ இடத்தில் வீடியோ புட்டேஜ் இல்லை. அழிந்துவிட்டது என்கிறார்கள். முத்துசெல்வம் தரப்பில் சில வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். புகார்தாரர் நடராஜனும் பணம் கட்டிய ரசீது உள்பட சில ஆதாரங்களை கொடுத்திருக்கிறார். எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறோம். இன்னும் விசாரிக்க தொடங்கவில்லை.” என்றார்.

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும், உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்துசெல்வத்திடம் பேசினோம். “அன்னைக்கு ஏலம் நடந்தப்போ சின்ன வாக்குவாதம் நடந்தது உண்மை. கொலைமிரட்டல் எல்லாம் விடலை. நான் 25 வருஷமாக பொதுவாழ்க்கையில இருக்கிறேன். பத்து வருஷம் கவுன்சிலரா இருந்திருக்கேன். இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால, இப்போ என் மனைவி கவுன்சிலராகவும் சேர்மனாகவும் இருக்காங்க. என்னை பற்றி துறையூரில் விசாரித்துப் பாருங்கள். இதே ஊரைச் சேர்ந்த ரெங்கநாதனுடன் சேர்ந்துகொண்டு இப்படி செய்திட்டு இருக்காரு. ரெங்கநாதன்  ஒரு பத்திரிக்கையில இணை ஆசிரியரா இருக்காரு. அவரை உள்ளூர்ல யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்கனு, இந்த மாதிரி ஏதாவது செய்திட்டு இருக்காரு. நேர்ல வாங்க விரிவா பேசுவோம்.” என்றார்.

4 bismi svs
உப்பிலியபுரம் பேரூராட்சி
உப்பிலியபுரம் பேரூராட்சி

ஏலம் தொடர்பான சர்ச்சை குறித்து, உப்பிலியபுரம் பேரூராட்சி ஆணையர் செந்தில்குமார் அவர்களிடம் பேசினோம். ”முதல் ஏலத்தின் பொழுது, ஏலம் கேட்ட சசிகுமார் என்பவர் அன்று மாலைக்குள் ஏலத்தொகையை செலுத்தவில்லை. அவர் கட்டிய முன்பணத்தைக்கூட வாங்க வரவில்லை. இந்நிலையில்தான் மறு ஏலம் அறிவித்தோம். ஆணையர் இருந்தால்தான் ஏலத்தை நடத்தவேண்டும் என்றில்லை. அவரது பிரதிநிதியாக நியமித்திருக்கும் அலுவலரை கொண்டு ஏலத்தை நடத்தலாம். அன்றைக்கு பிரச்சினை என்று என் கவனத்திற்கு வந்தது. அது அவர்களது தனிப்பட்ட விவகாரம். எங்களது தரப்பில், மீண்டும் மறு ஏலம் அறிவித்திருக்கிறோம்.’’ என்றார்.

இதுஒருபுறமிருக்க, ”இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏரியில் மண் அள்ளுவது தொடர்பாக செய்தி இதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்ததற்காக செந்தில்குமார் என்பவரை வீடு புகுந்து தாக்கியதாகவும்; அப்போதே அது போலீசு கேசு ஆனதாகவும்; தற்போது மீண்டும் கனிம வளக் கொள்ளை குறித்து இதழ் ஒன்றில் செய்தி வெளியாக நான்தான் காரணம் என, பல்வேறு தொலைபேசி எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும்; இதனால் சொந்த ஊருக்குகூட அச்சமின்றி சென்றுவர இயலவில்லை” என புகாரும் கையுமாக புலம்புகிறார், பி.ரெங்கநாதன்.

டி.எஸ்.பி. யாஸ்மின்
டி.எஸ்.பி. யாஸ்மின்

முத்துச்செல்வத்திற்கு ஆதரவாக எஃப்.ஐ.ஆர். போடாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதா, காவல்துறை? கேள்வியோடு, துறையூர் டி.எஸ்.பி. செல்வி யாஸ்மின் அவர்களை தொடர்பு கொண்டோம். “கூட்டம் ஒன்றில் இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்.” என்றார்.

உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலர் முத்துசெல்வன், ஆற்றுமணலை சட்டவிரோதமாக அள்ளினாரா? தில்லுமுல்லு செய்து ஏலம் எடுக்க முற்பட்டாரா? தன்னை எதிர்ப்பவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுகிறாரா? உள்ளூரில் ’ரவுடி அரசியல்’ செய்துவருகிறாரா? என்பதையெல்லாம் போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான் தெளிவுபடுத்த வேண்டும்; முறையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

– ஆதிரன்.

 

மேலும் சில  வீடியோவையும் பாருங்கள்… 

கத்தி குத்து வாங்கிய கறார் ஆர்.டி.ஓ.! நேர்மை படுத்தும் பாடு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.