நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்!
நவீன அறுவை சிகிச்சை மூலம்
பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்!
பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய 50 குழந்தைகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அவர்கள் அனைவரும் தற்போது பேச்சுத் திறன் பெற்றுள்ளனர்.
இக் குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந் நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறவியிலேயே செவித்திறன் இல்லாத குழந்தைகளுக்கு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையம் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இப் பரிசோதனை மூலம் பிறவியிலேயே செவித்திறன் இல்லாத, 6 வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவருக்கும் நவீன காது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அக் குழந்தைகள் அனைவரும் பேச்சுத் திறன் பெற்று நல்ல நிலையில் உள்ளனர் என்கிறார் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 50 குழந்தைகளுக்கு இந் நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் 18 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் டாக்டர் பாலாஜிநாதன்.
“இந் நவீன அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.6 லட்சம் வரை செலவாகும். ஆனால், இக் குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் டாக்டர் பாலாஜிநாதன்.