“கியூட், நீட் மற்றும் நெக்ஸ்ட்: சந்தையின் சூதாட்ட வடிவங்கள்” – 15.07.2023 – சென்னையில் கருத்தரங்கம்
“கியூட், நீட் மற்றும் நெக்ஸ்ட்: சந்தையின் சூதாட்ட வடிவங்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பினர்.
“எதிர்காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் வணிக நிறுவனங்களின் சூழ்ச்சியால் சிதைந்து போகும் மிகப் பெரிய அபாயம் உருவாகி உள்ளது. பல்கலைக்கழகம் என்ற அமைப்பு இனி தேவை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து கல்வி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றைக் காக்க நாம் களம் காண வேண்டிய அவசியம் குறித்து விவாதிப்பதே இக்கருத்தரங்கின் நோக்கம்.” என்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கர்மவீரர் காமாராசர் பிறந்தநாளான ஜூலை 15 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை, எழும்பூர் மியூசியம் அருகில், காசா மேஜர் சாலையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வோர்க் (MSSW) வளாகத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. பேராசிரியர் பி.ரத்தினசபாபதி, தலைவர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், நீட் மற்றும் நெக்ஸ்ட்: மருத்துவக்கல்வி மற்றும் பொதுச்சுகாதாரத்தைப் பலவீனப்படுத்தும் கருவிகள் என்ற தலைப்பில் மருத்துவர் பி.குகானந்தம் (மேனாள் நகர சுகாதார அலுவலர், சென்னை மாநகராட்சி. மேனாள் இயக்குநர், அரசு தொற்றுநோய் மருத்துவமனை, சென்னை) மதிப்பீட்டுக் கோட்பாட்டின் நோக்கம் மற்றும் நியதிகளுக்கு எதிரானது க்யூட், நீட், மற்றும் நெக்ஸ்ட் என்ற தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன், (மேனாள் தலைவர், வரலாற்றுத்துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை) நீட் மற்றும் நெக்ஸ்ட்: மருத்துவக்கல்வி மதிப்பீட்டு முறையின் தவறான உருவகம் என்ற தலைப்பில் மருத்துவர் சீ.ச.ரெக்ஸ்சற்குணம், (மேனாள் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர், இன்ஸ்டியூட் ஆப் சைல்ட் ஹெல்த் மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர்.) மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் நிறுவனர்-தலைவர், ஐ.பி.கனகசுந்தரம் (ஐ.பி.கே.); பொதுச்செயலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு; செயலர் வே.மணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.