பல்லாயிரம் கோடி வசூல் செய்த நியோமேக்ஸ் – 160 வங்கி கணக்குகள் முடக்கம் !
பல்லாயிரம் கோடி வசூல் செய்த நியோமேக்ஸ் – 160 வங்கி கணக்குகள் முடக்கம் !
மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு, `நியோமேக்ஸ்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கிளை தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதத்துக்கு அதிகப்படியான வட்டித்தொகையும், குறிப்பிட சில வருட முடிவில் முதிர்வு தொகையாக பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் அல்லது அதற்கு இணையாக நிலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் பலவகையில் ஆசை வார்த்தை நம்பிய மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர்.
ஆனால், முறையாக மாதம் மாதம் வட்டி தொகையை கொடுத்துக்கொண்டு இருந்த நியோமேக்ஸ் அவர்கள் சொன்ன முதிர்வுதொகைக்கான காலம் முடிந்து பணம் கேட்டும் போது, முதிர்வு பணத்தை திரும்ப வழங்காமல் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து சந்தேகப்பட்ட சிலர் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 34 நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பல்லாயிரக்கணக்கான டாக்குமென்ட்கள், ஹார்ட் டிஸ்க்கள், உயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் பத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் முக்கிய இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்ட சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து மற்றும் சகாய ராஜா போன்றோர் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் வெளிநாடு செல்ல முயற்சித்தாலோ வெளிநாடுகளில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி வந்தாலோ விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் பேருக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதன் கிளை நிறுவனங்கள் என்று சொல்லப்படும் சென்டிரியோன், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உறுப்பினர்கள் அடிப்படையில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
மேலும், இந்த முதலீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 50,000 கோடி முதல் 1 இலட்சம் கோடி வரை பணம் திரட்டி இருப்பார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மீது 100க்கு மேல் புதிய புகார்கள் சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவிலும் மனுக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் நாங்கள் நிதிதிரட்டும் நிறுவனம் அல்ல, ரியல்எஸ்டேட், பில்டிங் கட்டிக்கொடுக்கும் நிறுவனம் என்றும், கட்டிடம் கட்டுவதற்கு எங்களிடம் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருந்தது.
ஆனால் நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்கள் எல்லோரும் பணத்துக்கு வட்டி கிடைக்கும், பணம் முதிர்வு காலத்தில் இரட்டிப்பு மடங்கு பணம் கிடைக்கும், பணம் வேண்டாம் என்றால் நிலத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னதன் அடிப்படையில் பணம் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இருக்கிறார்கள், நிலத்தின் விலையை நாங்களே சில குறிப்பிட்ட காலத்தில் விலை உயர்வு அடைய வைத்து விடுவோம், என்று செயற்கையான நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடி செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
28ம் தேதி நியோமேக்ஸ் நிர்வாகிகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் ஜாமீன் மனு விசாரணை வரும் நிலையில் நேற்று முந்தினம் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 18 இடங்களில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அரசாங்கத்திடம் முறையான அனுமதி இல்லாமல் எப்படி இத்தனை துணை நிறுவனங்கள் துவங்கி கோடிக்கணக்கான பணங்களை வசூல் செய்ய முடியும், என்கிற கேள்வியும், இத்தனை கோடி வசூல் செய்யப்பட்ட பணங்களுக்கு முறையான கணக்குகள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் 160 வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன என பொருளாதார குற்றப்பிரிவு தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய ஆருத்ரா, ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடிகளின் வரிசையில் தற்போது நியோ மேக்ஸ் நிதி நிறுவனமும் இணைந்துள்ளது. நியோ மேக்ஸ் என்ற மோசடி நிறுவனமும் அதன் 63 துணை நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து அமலாக்கதுறையும் நியொமேக்ஸ் குறித்து விசாரணையில் இறங்கி உள்ளது என்கிறார்கள்.
நாளை 28.07.2023 மதுரை உயர்நீதிமன்றத்தில நியோமேக்ஸ் குறித்த வழக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை நியோமேக்ஸ் இலட்சகணக்கான முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.