“எடிட்டருக்கு முதுகுல ஆபரேஷன்! ஆனாலும் நான் விடல” -‘அடியே’ டைரக்டர் விக்னேஷ் கார்த்திக் !
“எடிட்டருக்கு முதுகுல ஆபரேஷன்! ஆனாலும் நான் விடல” -‘அடியே’ டைரக்டர் விக்னேஷ் கார்த்திக் !
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்,
நானும், படத்தொகுப்பாளர் முத்தையனும் அலுவலகத்திலேயே இருப்போம். கிட்டத்தட்ட பத்து மாதத்திற்கு மேலாக அலுவலகத்திலேயே தங்கி படத்தொகுப்புப் பணிகளை கவனித்தோம். இரவு 12 மணி அளவில் கூட ஏதேனும் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பினால், அவரிடம் சொல்வேன். அவரும் சிரமம் பார்க்காமல் அந்தப் பணிகளை செய்து கொடுப்பார். தொடர்ந்து பத்து மாதத்திற்கு மேலாக பணியாற்றியதால் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்று விட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து கொண்டே இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்யுடன் இணைந்து ஏற்கனவே ‘திட்டம் இரண்டு’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஆந்தாலஜி படைப்பு ஒன்றிலும் இணைந்து பணியாற்றினோம். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவர் ஒரு சிறந்த தொழில் முறையிலான ஒளிப்பதிவாளர். தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நட்புடன் பணியாற்றக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் நான் அடுத்த காட்சியும் கோணமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான பணிகளை அவர் அங்கு நிறைவேற்றுவார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பதிவிறங்கத்திற்கு சென்று விட்டால்… அது ஒரு நேர்நிலையான அதிர்வலைகளை வெளிப்படுத்தும் இடம் என்பதை உணரலாம். அது ஒரு போதை போல் இருக்கும். போதை என்றவுடன் தவறாக நினைத்து விட வேண்டாம். ஒருவித இணக்கமான சூழலாக கருதிக் கொள்ளுங்கள். அது ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் போல் இருக்கும். ஏராளமான நண்பர்கள் அங்கு தான் எனக்கு கிடைத்தார்கள். ஜஸ்டின் பிரபாகரனை எனக்கு ஏற்கனவே பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றும்போது அவரை நிறைய பிடித்து விட்டது. எப்போதும் அமைதியாகவே இருப்பார். தொடக்கத்தில் அவர் ஒரு இன்ட்ரோவர்ட் போலத்தான் இருப்பார். ஆனால் அவருக்குள் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வாளர் இருக்கிறார். அவருடைய இசையமைப்பு.. இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.