பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை – சர்ச்சையில் சிக்கிய பிரபல மருத்துவ அரசியல்வாதியின் உறவினர் !
உங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், தேவையில்லாமல் பத்திரிக்கையில் உனது பொண்டாட்டி பெயர், படம் எல்லாம்
பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை – சர்ச்சையில் சிக்கிய பிரபல மருத்துவ அரசியல்வாதியின் உறவினர் !
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் ஜீயபுரம் பேருந்து நிலையம் அருகே இளங்கோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையை நடத்திவரும் மருத்துவர் கண்ணன் என்பவர், திமுகவைச் சேர்ந்தவர். மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவரது உறவுக்காரரான சுகின் என்பவர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தற்போது சிக்கியிருக்கிறார்.
சுகின் , செவிலியராக பணிபுரிந்து வந்த அந்த பெண்ணை மிரட்டி பணிய வைத்ததாக ஒரு தரப்பும், இருவரும் பரஸ்பர விருப்பத்தோடு தான் பழகி வந்ததாக மற்றொரு தரப்பும் சொல்கிறார்கள். சுகின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவே, செவிலியர் பணியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
அப்போதும், விடாத சுகினும் அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், மீண்டும் பணிக்கு வராவிட்டால், தன்னுடன் பழகாவிட்டால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனையடுத்து, தனது கணவரிடம் அந்தப் பெண் அழுது புலம்ப, அவரும் அவரது உறவினர்களுமாக சேர்ந்து இளங்கோ மருத்துவமனையை தகராறு செய்து இருக்கிறார்கள்.
இந்த புகார் குறித்து விசாரித்த ஜீயபுரம் போலீசார், ”வழக்கு எல்லாம் வேண்டாம். உங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில், தேவையில்லாமல் பத்திரிக்கையில் உனது பொண்டாட்டி பெயர், படம் எல்லாம் வெளிவரும். உனக்குத்தான் அசிங்கம்.” என பாதிக்கப்பட்ட பெண் தரப்பினருக்கு அட்வைஸ் செய்ததாகவும், அதனையும் மீறி எப்படியோ இந்த தகவல் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கவனத்திற்கு சென்றுவிட, அவரது உத்தரவின் பேரில் தற்போது முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது, ஜீயபுரம் மகளிர் போலீசார் விசாரித்து வருவதாக சொல்கிறார்கள். மருத்துவமணையின் உரிமையாளரான மருத்துவர் கண்ணன் திமுகவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ. ஒருவரை வைத்து சுமுகமாக முடித்து கொள்ள முயற்சி நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள்.
போலீசு வட்டாரத்தில் விசாரித்த வகையில், ”நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை. ஜீயபுரம் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்சிட்டிவான விசயம், ஆளும்கட்சி பிரமுகர் தொடர்புடைய பிரச்சினை எனவே வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது” என முடித்துக்கொண்டனர். சம்பந்தபட்ட மருத்துவர் கண்ணனிடம் பேசினோம். ”கொளுந்தியா பையன் தான். பிரச்சினை எல்லாம் ஒன்றுமில்லை. பேசி சமாதானம் ஆகிவிட்டோம்.” என்பதோடு முடித்துக் கொண்டார்கள்.
– ஆதிரன்.