வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மீனவரிடம் ரூ.72,000 மோசடி: இருவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித்
தருவதாக கூறி
மீனவரிடம் ரூ.72,000 மோசடி:
இருவர் கைது
வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் போலியாக விளம்பரம் செய்து தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரை ரூ.72,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மோசடி கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் ஓட்டல் ஒன்றில் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், மலேசியாவில் ஓட்டலில் வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறி முகநூல் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த விளம்பரத்தைக் கண்டு அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் செந்தில்.
மறுமுனையில் பேசிய நபர்கள் கூறியவாறு, மீனவர் செந்தில் ஆன்லைன் மூலம் அவ்வப்போது சிறிது சிறிதாக மொத்தம் ரூ.72,000 அனுப்பியுள்ளார்.
ஆனால், மேற்படி நபர்கள் செந்திலுக்கு வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தனர்.
தான் பண மோசடி செய்யப்பட்டதை மிக தாமதமாக உணர்ந்த மீனவர் செந்தில் இதுபற்றி தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அவரது புகாரின் பேரில், தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவ்விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லட்சுமி நகரைச் சேர்ந்த முருகன் (46), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (46) ஆகிய இருவரும் வெளிநாட்டில் ஓட்டலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி முகநூல் பக்கத்தில் போலியாக விளம்பரம் செய்து செந்திலிடம் இருந்து ரூ.72,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவ்விருவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள முருகன் ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது கூட்டாளியான சாந்தகுமார் எட்டாம் வகுப்பு படித்துள்ளார். இவ்விருவரும் இன்னும் சிலருடன் சேர்ந்து ஒரு நெட்வொர்க் ஆக உருவாக்கி செயல்பட்டு இதே பாணியில் இன்னும் பலரை ஏமாற்றியுள்ளனர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், இதுவரை மீனவர் செந்திலை தவிர வேறு எவரும் புகார் செய்யவில்லை. எனவே இப்போதைக்கு இந்த ஒரு புகாரில் மட்டும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்கின்றனர் போலீஸார்.
அதோடு இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க சில ‘டிப்ஸ்’களை சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
“மொபைல் போனில் தேவையில்லாமல் வரும் லிங்க்-களை எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது. முன் பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து உங்களது செல்போனுக்கு வரும் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்புகளை ஏற்கக் கூடாது. அதேபோல, நமக்கு தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது.
லோன் ஆப்-கள் மூலம் கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். போலியான வெப்சைட்-களில் பணத்தை செலுத்தி ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நாம் ஆர்டர் செய்யாத பொருள்களை நமக்கு வந்துள்ளதாக கூறி யாரும் போன்கால் செய்தால் பதில் அளிக்காமல் தவிர்ப்பது நல்லது.
நமக்கு பரிசு கிடைத்திருப்பதாக வரும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார்.
“இணையவழி குற்றங்கள் தொடர்பாக பண இழப்பு ஏற்பட்டால், பாதிக்கபட்ட நபர்கள் உடனடியாக 1930 என்ற இலவச ஹெல்ப் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். மேலும் இதர இணையவழி குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்,” என்கிறார் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்.