போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
சென்சிட்டிவான சிக்கல்களை சமாளிப்பது போலீசாருக்கு தலைவலி பிடித்த விவகாரம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விஜய் ரசிகர்களையோ,
போட்டு கொடுத்த போலீசு ! வணிகர் சங்க நிர்வாகியை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்!
திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ். பதவியேற்ற அன்றே, ”பொதுமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு நேரடியாக தகவல் அளிக்கலாம்” என்று தனியாக தொலைபேசி எண்ணை அறிவித்திருந்தார். பிரத்யேகமாக வழங்கப்பட்ட இந்த எண் வழியே, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பயனுள்ள பல தகவல்கள் தமக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும், அதன்படி உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பொழுதும் குறிப்பிட்டிருந்தார்.
கஞ்சா விற்பணை, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விபச்சாரம் உள்ளிட்ட தகவல்களை சொன்னவர் யார் என்று தெரிந்தால் நிச்சயமாக, அக்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் பொல்லாப்புக்கு ஆளாகக்கூடும் என்பதால்தான், இதுபோன்ற தகவல்கள் தருபவர்களின் இரகசியம் காக்கப்படும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருந்தார் எஸ்.பி. வருண்குமார்.
துறையூரில் வணிகர் சங்கத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை, இனி யாரும் பொது காரியங்களில் ஈடுபடவேக் கூடாது என்ற எதிர்மறை எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துவிட்டது அவலமான ஒன்று.
துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் காமராஜ். இவர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளராகவும் இருந்து வருகிறார். தனது குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றில், லியோ பட ரிலீசுக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் பேனர்களை நிறுவியிருக்கின்றனர். அதில் ஒரு பேனரை முக்கியமான சாலையின் திருப்பத்தின் ஓரத்தில் வைத்திருக்கிறார்கள். எதிரில் வரும் வாகனங்களை மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பேனரால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற பதைபதைப்பிலிருந்து, துறையூர் போலீஸ் ஸ்டேசனில் நேரில் சென்று தகவல் சொல்லியிருக்கிறார்.
“விஜய் ரசிகர்கள் வச்ச பேனரால தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. அதை முழுசா எடுக்கனும்னு சொல்லவும் இல்லை. பக்கத்துலேயே டாஸ்மாக் கடை வேற இருக்கு. குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போவாங்க. தியேட்டருக்கு நூற்றுக்கணக்கான வண்டிகள் வரும். திருப்பத்துல எதிர்ல வர்ற வண்டி தெரியாத அளவுக்கு வச்சிருக்காங்க. கொஞ்சம் உள்ள நாலு அடி தள்ளி வையுங்கனுதான், போலீசுகிட்ட சொன்னேன். அதுவும் ஸ்டேஷன் போற வழியிலதானே இருக்குனு, நேர்ல போயிட்டு சொல்லிட்டு வந்தேன்.
போலீசு காரங்க, விஜய் ரசிகர் மன்றத்து காரங்ககிட்ட போயிட்டு, பொதுமக்களுக்கு இடையூறா பேனர் இருக்குனு சொல்லி வணிகர் சங்கத்துல இருந்து எஸ்.பி.க்கு புகார் கொடுத்துருக்காங்க. எஸ்.பி. ஆபிசில் இருந்து பேனர எடுக்க சொல்லிட்டாங்க. உடனே எடுங்கனு சொல்லி அவங்க வச்ச 7 பேனரையும் எடுக்க வச்சிட்டாங்க. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிஞ்சிட்டாங்க. எவன்டா அது பேனரை வக்கக்கூடாதுனு எஸ்.பி. ஆபிசுக்கு புகார் கொடுத்தது. நாளைக்கு பாரு கடைய அடிச்சு நொறுக்குறோமா, இல்லையானு? தீபாவளிக்கு பட்டாசு கடை போடுவீல்ல, எப்படி கடை நடத்துறேனு பார்க்குறோம்னு என் வீட்டுக்கு முன்னாடி நின்னு கண்ட மேனிக்கு பேச ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அவங்ககிட்ட எஸ்.பி. ஆபிசுக்கெல்லாம் சொல்லல. ஸ்டேஷன்லதான் சொன்னேன். அதுவும் பேனரை எடுக்கலாம் சொல்லலை. நாலு அடி தள்ளி வைக்கதான் சொன்னேனு என் தரப்பு நியாயத்தைதான் சொல்லப்போனேன்.
என் குடும்பத்துல இருக்கவங்க பார்க்கிறப்பவே, அவ்ளோ பேச்சு பேசிட்டாங்க. அங்க நின்ன போலீசுகாரங்க, ஒரு வார்த்தை அவங்கள கண்டிக்கல. ”சரி விடுங்கசார் பேசிப்போம். நீங்க போங்க சார்”னு என்னைதான் சமாதானம் செஞ்சி அனுப்ப பார்த்தாங்க. ஏன்டா, சொன்னோனு ஆச்சு. நானும் வணிகர் சங்கத்தில இருக்கேன். இந்த ஊர்ல வியாபாரம் பன்றேன். பொது நோக்கத்துல இருந்துதானே, யாரும் அடிபட்டுற கூடாதுனு சொன்னேன். போலீசு காரங்க அப்படியே சொல்லலாமா, சார்? ” என ரொம்பவே மனவேதனையோடு பேசினார், காமராஜ்.
”உள்ளூர் பத்திரிகையாளர் மூலமா, விசயம் கேள்விபட்டு எஸ்.ஐ. ஒருத்தர் பேசினாரு. ”எங்க ஆளுங்க கண்டிச்சிருக்கனும். அமைதியா இருந்தது தப்புதான். விஜய் ரசிகர்களால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. எதுவும் ஒன்னுனா எனக்கு போன் பன்னுங்க”னு அவர் நெம்பர் கொடுத்தாரு” என்கிறார்.
விஜய் ரசிகர் மன்றத்தார்களிடமும் பேசினோம். ”எஸ்.பி. ஆபிசில் இருந்து எடுக்க சொன்னாங்கனு சொன்னாங்க. உரிய அனுமதி இல்லாம பேனர் வச்சிருக்கீங்கனு சொன்னாங்க. உடனே, 7 பேனரையும் எடுத்துட்டோம். பிரச்சினைலாம் ஒன்னுமில்லை.” என்றார்கள்.
”யாரா இருந்தாலும் வச்ச பேனரை எடுனு சொன்னா ஆத்திரம் வரும்தானே. விஜய் ரசிகர்களும் அந்த கோபத்தில் இருந்துதான் என்னைய திட்டினாங்க. போலீசார் ஏன் வணிகர்சங்கத்துல இருந்து புகார் சொல்லியிருக்காங்கனு சொல்லனும். அப்படி சொல்லவும்தானே, அவங்க கோபப்பட்டாங்க. பொதுவா, எஸ்.பி. ஆபிசில் இருந்து சொல்லியிருக்காங்கனு கூட சொல்லியிருக்கலாமே? இதுமாதிரி நடந்துகிட்டா, எந்த நம்பிக்கையில் தகவல் சொல்ல முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார், காமராஜ்.
இந்த சம்பவம் குறித்து கருத்து கேட்பதற்காக, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இதுபோன்ற, சென்சிட்டிவான சிக்கல்களை சமாளிப்பது போலீசாருக்கு தலைவலி பிடித்த விவகாரம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விஜய் ரசிகர்களையோ, போலீசாரையோ குற்றம் சொல்ல வேண்டும் என்பது நம் நோக்கமுமில்லை. துறையூர் வணிகர் சங்க பிரமுகர் காமராஜ் அவர்களுக்கு நேர்ந்தது போல, இன்னொரு “சம்பவம்” அடுத்து வேறெங்கும் வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
– அங்குசம் புலனாய்வு குழு.