யார் இந்த பிரணவ் ஜூவல்லரி மதன் செல்வராஜ் ? அங்குசம் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் !

நிலத்தில் முதலீடு செய்திருந்த ஆவணங்களையெல்லாம் போலீசாரிடம் காட்டி, “என்னோட சூழ்நிலைய புரிஞ்சிகிட்டு கம்மி விலைக்கு கேக்குறாங்க. கொஞ்சம் டயம் கொடுத்தா

0

மோசடி புகாரில் பிரணவ் ஜூவல்லரி – நடந்தது என்ன? அங்குசம் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!

கொரோனா கால ஊரடங்கை கடந்து புதுத்தெம்போடு பிறந்த 2023 ஆம் ஆண்டு மோசடிகளின் காலமாக மாறி நிற்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஐ.எஃப்.எஸ்., ஆருத்ரா, நியோமேக்ஸ் போன்ற நிறுவனம் சார்ந்த மோசடிகள் தொடங்கி, ஏலச்சீட்டு மோசடி, இரிடியம் மோசடி என பல்வேறு மோசடிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.

அந்த வரிசையில், நூறு கோடி ரூபாய் வரையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டதாக மோசடி புகாரில் சிக்கியிருக்கிறது, பிரணவ் ஜூவல்லரி. திருச்சியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லரி மிகக்குறுகிய காலத்திலேயே, தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து தமது கிளைகளை நிறுவியது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது.

Pravav
Pravav

- Advertisement -

”செய்கூலி, சேதாரம் என்றாலே ஏமாற்று” என பிரபல ஜூவல்லரி உரிமையாளரே விளம்பரங்களில் தோன்றி கொளுத்திப் போடுவது ஒருபுறமிருக்க; ”0% செய்கூலி – சேதாரம்” என்ற விளம்பரத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிரணவ் ஜூவல்லரி. பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தான் பிரணவ் ஜூவல்லரியின் பிரதான விளம்பர தூதராக இருந்து வருகிறார்.

ஐந்து இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2% வட்டிப்பணம் பத்தாயிரம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், பத்து மாதம் காத்திருந்து எந்தவித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் 106 கிராம் தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மற்ற ஜூவல்லரிகள் நடத்துவதை போலவே, மாதச்சீட்டு முறையை வைத்திருந்தாலும் அதிலும் புதுமையாக 11 மாதம் மட்டும் கட்டினால் போதும் 12-வது மாத சீட்டை பிரணவ் ஜூவல்லரியே கட்டிவிடும்; அதுவே, ஒரு இலட்சத்திற்குமேல் சீட்டு கட்டினால், இரண்டு மாத தவணையை சேர்த்து கட்டிவிடும் என்பது போன்ற பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது, பிரணவ் ஜூவல்லரி.

பிரணவ்
பிரணவ்

இவற்றையெல்லாம்விட, ”அடகுக்கடையில் நகையை வைப்பதால் என்ன பயன்? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள். ஒரு வருடம் கழித்து, எந்தவித செய்கூலியும் சேதாரமும் இல்லாமல் பழைய நகையின் அதே எடையில் புதிய நகையை அள்ளிச் செல்லுங்கள்” என்ற அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு. புதுடிசைனுக்கு ஆசைப்பட்டு, பீரோவில் பூட்டி வைத்திருந்த நகைகளையெல்லாம் அள்ளிச்சென்று பிரணவ் ஜூவல்லரியில் வந்து கொட்டிவிட்டார்கள்.

வீடியோ லிங்:

மாதச்சீட்டு தொடங்கி, பிக்சட் டெபாசிட் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம் என பல திட்டங்களை கைவைசம் வைத்திருக்கிறது, பிரணவ் ஜூவல்லரி. தெய்வீக தங்கம் என்ற சென்டிமென்ட்டும், 0% செய்கூலி, சேதாரம் என்ற வியாபார உத்தியும் வெளிச்சத்தைத் தேடி வந்து நெருப்பில் விழும் ஈசலைப் போல கனிசமான பெண்களை பிரணவ் ஜூவல்லரி ஈர்த்தும் விட்டது.

பிரணவ் - யூடிப் பேட்டி
பிரணவ் – யூடிப் பேட்டி

ஓராண்டு முடிவில், சொன்னபடி பழசுக்கு புதுசாக தங்கத்தை திருப்பித் தரமுடியாத சிக்கலில் சிக்கித்தவிக்கிறது, பிரணவ் ஜூவல்லரி. நான்கு நாட்களுக்கு முன்பாக, நாகர்கோயிலில் ஆரம்பித்து அடுத்தடுத்து அதன் ஒவ்வொரு கிளையையும் மூடியதோடு, இறுதியாக முதல் கிளையாகத் தொடங்கிய திருச்சியிலும் ஷட்டரை இழுத்துவிட்டது பிரணவ் ஜூவல்லரி. திருச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு சாலை மறியல் செய்யுமளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. மதுரையில் 80-க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பிரணவ் - விளம்பர யுத்தி (2)
பிரணவ் – விளம்பர யுத்தி (2)

என்ன பிரச்சினை என்ற கேள்வியுடன் போலீசில் புகார் அளித்திருக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.ஜே.கீர்த்திகாவிடம் பேசினோம். “பழைய நகையை கொடுத்தால், ஒரு வருடம் முடிவில் அதே அளவுக்கு புதிய நகை தருவதோடு சிறப்பு சலுகையாக 9% போனஸ் தருவதாகவும் சொன்னார்கள். அதை நம்பி 24.09.2022 அன்று என்கிட்ட இருந்த பழைய நகையெல்லாம் கொண்டு போனேன். உருக்கி எடை பார்த்ததுல 40 கிராம் இருந்துச்சி. அடுத்து, 23.12.2022 அன்னைக்கு 7 கிராம் கொடுத்தேன்.

பிரணவ் - யூடிப் பேட்டி
பிரணவ் – யூடிப் பேட்டி

அவங்க கொடுத்த டயம் படி, ஒரு வருசம் கழிச்சி நகைய வாங்க முயற்சி செஞ்சோம். கடைக்கு போனா, கடையில சுத்தமாக தங்க நகைகளே இல்லை. எல்லாம், வெள்ளி பொருட்களாத்தான் இருந்துச்சி. கேட்டதுக்கு, ஸ்டாக் இல்லை. ஆர்டர் போட்டிருக்கோம். ஸ்கீம்ல நகை கொடுத்தவங்களுக்கு எல்லாம் ஆர்டர் போட்டுத்தான் நகையை திருப்பித் தந்துட்டு இருக்கோம், நீங்கள் ஆர்டர் கொடுத்துட்டு போங்கனு சொன்னாங்க. அதன்படி, நான் செயின்-க்கு ஆர்டர் செஞ்சேன். 14.10.23 அன்னைக்கு வரசொல்லி தேதி கொடுத்திருந்தாங்க.

இதுக்கு நடுவுல, நாகர்கோயில் கிளையில எங்கள மாதிரி ஸ்கீம்ல சேர்ந்தவங்களுக்கு நகையை கொடுக்கிறதுல பிரச்சினை, கடைய மூடிட்டாங்கனு கேள்விபட்டு ஒரு நாளுக்கு முன்னாடியே போயிட்டு பார்ப்போமேனு கடைக்கு போன கடை மூடியிருக்கு. செக்யூரிட்டிகிட்ட கேட்டதுக்கு, போலீசெல்லாம் வந்து விசாரிச்சிட்டு போனாங்க. ஏதோ பிரச்சினை போலனு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்கு கூப்பிட்டிருக்காங்க.” என்றார் அவர்.

4 bismi svs

மதுரை, திலகர்திடல் போலீசு சரக உதவி ஆணையர் மகேஷ் அவர்களிடம் பேசினோம். ”இதுவரைக்கும் திலகர் திடல் போலீஸ் ஸ்டேஷன்லயே அடுத்தடுத்து நாற்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கு. பிரணவ் ஜூவல்லரி ஓனர்கிட்ட பேசினோம். திங்கட்கிழமையில இருந்து செட்டில்மெண்ட் செய்றோம்னு சொல்லியிருக்காரு. புகார் நிறைய வந்துருக்கிறதால இப்போ கிரைம் பிராஞ்சுக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது.” என்றார்.

யார் இந்த பிரணவ் ஜூவல்லரி மதன் செல்வராஜ்?

திருச்சியை தலைமையிடமாக கொண்டு குறுகிய காலத்தில் தமிழகமெங்கும் கிளை பரப்பிய பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ், திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை திருச்சி சின்னகம்மாளத் தெருவில் செல்வம் என்ற பெயரில் வெள்ளி நகைகள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தியவர். இவரது உடன்பிறந்த சகோதரரும் இவரும் இணைந்து இதே பகுதியில் பழைய நகைகளை வாங்கி விற்கும் வியாபாரத்தை தொடங்கியிருக்கின்றனர். நகை அடகுபிடிப்பது, வட்டிக்கு விடுவது, சொந்தமாக ஜூவல்லரி கடை வைப்பது என படிப்படியாக வளர்ந்திருக்கின்றனர். செல்வம் சிறுபட்டறை, செல்வம் அடகுக்கடை, செல்வம் பேங்கர்ஸ், செல்வம் ஜூவல்லர்ஸ்-ஆக மாறியிருந்தது.

பிரணவ்
பிரணவ்

தனியாக ஜூவல்லரி ஆரம்பிக்கும் வரையில் ஒன்றாக பயணித்த சகோதரர்கள் அதன்பிறகு, ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் தொடங்கினர். மதன் செல்வராஜ் ஜூவல்லரி பிசினசோடு, ரியல் எஸ்டேட் பிசினசிலும் ஈடுபட்டிருக்கிறார். தனியாக பசும்பால் பண்ணை ஒன்றையும் நடத்தியிருக்கிறார்.

திருச்சி ராயல் என்பீல்டு ஷோரும் உரிமையாளர் கருணா-வின் ஆதரவோடு முதன்முதலாக திருச்சியில் பிரணவ் என்ற பெயரில் ஜூவல்லரியை தொடங்கியிருக்கிறார் மதன் செல்வராஜ். வியாபாரம் சூடுபிடிக்க ஒருவருடம் ஆனாலும், பிற தொழில்களிலும் கவனம் செலுத்தியதால் தப்பி கரையேறியிருக்கிறார். கவர்ச்சிகரமான திட்டங்களில் மக்கள் குவியத் தொடங்க, அதற்கேற்ப மதன் செல்வராஜ் கைகளில் பணமும் குவியத் தொடங்கியது. அதற்கேற்ப, அடுத்தடுத்து 8 கிளைகளை நிறுவியிருக்கிறார்.

நகைக்கடையில் வசூலான பணத்தை மீண்டும் நகையில் முதலீடு செய்யாமல், ரியல் எஸ்டேட் பிசினஸை நம்பி நிலத்தில் போட்டது தான் பிரச்சினை என்கிறார்கள், மதன் செல்வராஜை பற்றி நன்கறிந்த அவரது நண்பர்கள்.

பிரணவ்
பிரணவ்

”மோசடி செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவர். திடீரென்று இவ்வளவு பணத்தை பார்த்ததும் அதை முறையாக நிர்வகிக்கத் தவறிவிட்டார். திருச்சியில் ஏற்கெனவே, ஒரு கிளை இருக்கும் போது, பெரியகடை வீதியில் தேவையில்லாம் இன்னொரு கடையை எடுத்தார். அதை ரெடி பண்ணவே கோடி கணக்கில் செலவு செய்தார். பல இடங்களில் மாசம் 3.5 இலட்சம் வரைக்கும் வாடகை கொடுத்து கடையை திறந்திருக்கிறார். அகலக்கால் வச்சது ஒரு பிரச்சினை. அடுத்து, ஆடம்பர வாழ்க்கையிலயும் பாதி காச விட்டாரு.” என்கிறார்கள் அவரைப்பற்றி அறிந்த நண்பர்கள்.

நிலத்தில் முதலீடு செய்திருந்த ஆவணங்களையெல்லாம் போலீசாரிடம் காட்டி, “என்னோட சூழ்நிலைய புரிஞ்சிகிட்டு கம்மி விலைக்கு கேக்குறாங்க. கொஞ்சம் டயம் கொடுத்தா, இடத்த வித்து எப்படியும் எல்லோருக்கும் செட்டில் செய்துவிடுவேன். எல்லோருக்கும் செக் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். கொஞ்சம் டயம் மட்டும் வாங்கிக் கொடுங்க”னு போலீசில் சொல்லியிருக்கிறாராம், பிரணவ் ஜூவல்லரி மதன் செல்வராஜ்.

”நீண்ட காலம் ஏமாற்றி தொழில் செய்துவிட முடியாது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். மக்கள் அங்கீகாரம் கொடுக்க மாட்டார்கள்” என வீடியோ பேட்டி ஒன்றில், பெருமையாக குறிப்பிட்டிருப்பார் மதன் செல்வராஜ். அவர் சொன்னது போலவே, குறுகிய காலத்தில் நெருக்கடியை சந்தித்திருப்பதோடு, வாடிக்கையாளர்களிடமிருந்து நம்பிக்கையையும் இழந்து நிற்கிறார்.

உதவி ஆணையர் மகேஷ்.
உதவி ஆணையர் மகேஷ்.

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; அது இல்லை; இது இல்லை என்றதால்தான் மக்கள் குவிந்தார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஜூவல்லரி நடத்துபவர்கள் இலாபம் இல்லாமலா, நகையை விற்கிறார்கள்? பிறகு, எப்படி இது கட்டுப்படி ஆகிறது? என்ற கேள்விக்கு, பல்வேறு வகைகளில் கடத்தி வரப்படும் தங்க நகைகளை வாங்கி நகை செய்வது; விற்பணையை குறைத்துக் காட்டுவது; ஜி.எஸ்.டி. பில் போடுவதில் தில்லுமுல்லு செய்வது என இதுபோன்ற முறைகேடுகளில்தான் அதிக இலாபத்தை பார்க்கின்றன என்கிறார்கள். இதன்காரணமாகத்தான், போட்டி போட்டுக்கொண்டு அதிரடி ஆஃபர்களை அள்ளிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

பிரணவ் - அறிவிப்பு
பிரணவ் – அறிவிப்பு

பிரணவ் ஜூவல்லரி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்ற போதிலும், பிரபலமான ஜூவல்லரிகள் அறிவிக்கும் கவர்ச்சிகர திட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பிரதான சூட்சுமமே இதுதான் என்கிறார்கள்.

பிரணவ் ஜூவல்லரியைப் போன்று, பல வண்ணங்களில், விதம் விதமாக கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கும் மற்ற ஜூவல்லரி கடைகளின் வரவு – செலவு கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையிலான “ரெய்டு” நடவடிக்கையை அரசு தரப்பில் நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் போல. இன்னும் ஓராண்டு காத்திருந்து, அடுத்த கடையின் ஷட்டர் இழுத்து மூடப்படுவதற்கு முன்பாக, வெள்ளம் வரும் முன் அணை போடுமா, தமிழக அரசு?

வீடியோ லிங்:

அங்குசம் புலனாய்வு குழு.

எங்கள் WhatsApp  சேனலில் இணைந்திடுங்கள்.. 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.