காருக்கு கலப்பட டீசல் ! 8 இலட்சம் அபராதம் ! நடந்தது என்ன ?
காருக்கு கலப்பட டீசல் ! பங்க் உரிமையாளருக்கு 8 இலட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம் !
கலப்பட டீசலை வாடிக்கையாளருக்கு விநியோகித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 8,21,000 ரூபாய் அபராதம் விதித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அஜய் பாஸ்கர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான பென்ஸ் காரில் குடும்பத்துடன் கொச்சிக்கு சென்று சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சேலம் தலைவாசல் அருகில் ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டிருக்கிறார்.
டீசல் போட்டுக்கொண்டு கிளம்பிய சற்று தொலைவிலேயே வாகனம் பழுதாகி நடு வழியில் நின்றிருக்கிறது. லோக்கலில் ஒரு கார் மெக்கானிக்கை பிடித்து என்ன ஏதென்று பார்த்தபோது, என்ஜின் பழுதானதாக தெரிவித்திருக்கிறார். பென்ஸ் வகை உயர்ரக கார் என்பதால், அந்த காரை சென்னைக்கு வேறொரு இழுவை வாகனத்தில் இணைத்து சென்றிருக்கிறார். பின்னர், அங்கு கார் சர்வீஸ் சென்டரில் கலப்பட டீசலை பயன்படுத்தியதால்தான், என்ஜின் பழுதானதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, சம்பந்தபட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் முறையிட்டு, முதற்கட்டமாக தலைவாசலிலிருந்து சென்னைக்கு காரை இழுவை வாகனத்தில் கொண்டு வந்த செலவு மற்றும் குடும்பத்தினரின் பயணச்செலவுக்கு என ரூ.64,000- பெற்றிருக்கிறார்.
வாகனத்தை சென்னைக்கு கொண்டு வரவே 25,000 செலவான நிலையில், வாகனத்தை பழுது பார்க்க 8 இலட்சம் வரையில் செலவாகியிருக்கிறது. பெட்ரோல் பங்க் உரிமையாளரோ, முதற்கட்டமாக கொடுத்த 64000-த்துடன் கணக்கை முடித்து கை கழுவியிருக்கிறார்.
இதனையடுத்தே, சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் டீசல் பிடித்தற்கான ஆதாரம், வாகனத்தை சர்வீஸ் செய்ததற்கான ஆதாரம், கலப்பட டீசல் என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கை நடத்தினார்.
அஜய் பாஸ்கரின் வழக்கை விசாரித்த, சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர், புகாரில் உண்மைத்தன்மை இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். மிக முக்கியமாக, முதற்கட்டமாக 64,000/-ஐத்தை கொடுத்துவிட்டு, முழு இழப்புக்கும் பொறுப்பேற்க தவறிய பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வாதத்தை ஏற்க மறுத்து, காரை பழுது பார்க்க ஆன மொத்த செலவு ரூ.8,19,000.00 மற்றும் இழப்பீடு ரூ.10,000.00 மற்றும் வழக்கு செலவு ரூ2000 .00 அனைத்தையும் சேர்த்து வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கலப்பட டீசல் விவகாரம் என்பது சமீபத்தில் பரவலான குற்றச்சாட்டுகளாக மேலெழுந்திருக்கிறது. டீசலுடன் பயோ பொருட்களை கலந்து விநியோகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். குறிப்பாக, போர்வெல் லாரிகள் மற்றும் மீன்பிடி படகுகள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு இதுபோன்ற கலப்பட டீசல் விநியோகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
மீன்பிடி படகுகளுக்கு விநியோகம் செய்வதற்கென்றே, காங்கேயத்திலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட கலப்பட டீசல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பிடிபட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு 9000 லிட்டர் கலப்பட டீசல் கடத்தப்பட்டதும்; அக்டோபரில் தூத்துக்குடி தெர்மல் நகர் விலக்கு பகுதியில் 11,800 லிட்டர் கலப்பட டீசல் பிடிபட்டதும் போலீசு வழக்காகியிருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கலப்பட டீசலின் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டுமென்று, தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இவையெல்லாம், தமிழகத்தில் பரவலாக கலப்பட டீசல் புழக்கம் இருப்பதை உறுதிபடுத்துவதற்கு போதுமான சான்றுகளாக அமைந்திருக்கின்றன. அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனம் கார் போன்றவற்றிற்கு டீசல் அல்லது பெட்ரோலை பிடித்துவிட்டு கடந்து போகிறோம். அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் விநியோகிக்கப்படும் பெட்ரோல் அல்லது டீசலின் தரம் குறித்து யாரும் இதுவரை பொருட்படுத்தியதேயில்லை.
தற்போது, இந்த விவகாரம் அதிலும் உஷாராக இருந்தாக வேண்டுமென்ற எச்சரிக்கைமணியை அடித்திருக்கிறது இந்த விவகாரம்.
— ஆதிரன்.