அங்குசம் பார்வையில் ‘ ஜிகர்தண்டா XX’ படம் எப்படி இருக்கு ! ..
அங்குசம் பார்வையில் ‘ ஜிகர்தண்டா XX’
தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் & ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன். தமிழக ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்டர்: கார்த்திக் சுப்புராஜ். ஆர்ட்டிஸ்ட்: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், சத்யன், நவீன் சந்திரா. ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு, இசை: சந்தோஷ் நாராயணன், ஆர்ட் டைரக்டர்கள்: பாலசுப்பிரமணி& குமார் தங்கப்பன், எடிட்டிங்: சஃபீக் முகமது அலி, ஸ்டண்ட் மாஸ்டர்: திலீப் சுப்பராயன். பிஆர்ஓ.நிகில் முருகன். ( இவருக்கு 525–ஆவது படம் என்பது வெகு சிறப்பான செய்தி. அங்குசம் சார்பிலும் நமது தனிப்பட்ட முறையிலும் நிகில் முருகனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்)
பலர் பார்ட் -2 சினிமா ரிலீஸ் பண்ணிக் கொண்டிருக்கும் போது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜிகர்தண்டா’ எடுத்த கார்த்திக் சுப்புராஜ், இந்த தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டாXX’ என டைட்டிலிலேயே ஜில் ஏத்திருக்கார். சரி, கதை என்னன்னு சொல்லுவோம். 1973-75 தான் கதையின் காலம். மதுரை நகரமும் கோம்பை வனப்பகுதியும் தான் கதையின் களம்.
மதுரையில் பெரிய தாதாவாக இருந்து அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் அல்லியன் சீசர் ( ராகவா லாரன்ஸ்). இவரைப் போட்டுத் தள்ள பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. இன்னொரு பக்கம் போலீஸ் வேலைக்கு செலக்ஷனாகி, ட்ரெய்னிங் போகும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார் கிருபை ( எஸ்.ஜே.சூர்யா). சீசரை குளோஸ் பண்ணினால் உனக்கு விடுதலை+ போலீஸ் வேலை என்ற அசைன்மெண்டுடன் போலீசே கிருபையை ரிலீஸ் பண்ணுகிறது.
கருப்பா இருக்குறவன் சினிமாவுல ஹீரோவாக முடியாது என்பதை முறியடிக்க, தன் தயாரிப்பில் தானே ஹீரோவாக நடிக்க டைரக்டர் செலக்ஷனில் இறங்குகிறார் சீசர். இதை சாக்காக வைத்து டைரக்டர் சத்யஜித்ரேவின் அசிஸ்டெண்ட் எனச் சொல்லி அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும் சத்யன் துணையுடன் சீசரின் கோட்டைக்குள் நுழைகிறார் கிருபை. ” ஒங்க லைஃப் ஹிஸ்ட்ரிய சினிமாவா எடுத்து ஆஸ்கர் விருது வாங்குவோம்” என பிட்டைப் போட்டு, சீசரைப் போட்டுத் தள்ள காத்திருக்கிறார் கிருபை. சீசரை கிருபை குளோஸ் பண்ணினாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ஜிகர்தண்டா XX. மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சீராக ராகவா லாரன்ஸ் பிரமாதப்படுத்தியிருக்கார்.
அவருக்கு ஈக்வலாக டைரக்டர் சத்யஜித்ரே கெட்டப்பில் செமத்தியாக அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ” வெத்தல பாக்கு போட்டுட்டு பேசுற மாதிரி பேசாத, சிவாஜி கணேசன் மாதிரி நிறுத்தி நிதானமா பேசு. இப்ப ரஜினிகாந்த்னு ஒரு பையன் வந்திருக்கான். வருங்காலத்ல பெரிய ஸ்டாரா வருவான்னு நேசிக்கிறாக. அவரும் ஒன்ன மாதிரி கருப்புதான்யா” என ராகவாவிடம் சூர்யா பேசும் டயலாக், கார்த்திக் சுப்புராஜின் ஸ்பெஷல் பிராண்ட்.
ராகவா வின் மனைவியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த மலையரசியாக நிமிஷா சஜயன் சபாஷ். தந்தந்திற்காக யானையை கொலை செய்யும் கூட்டம், வனத்தை கொள்ளையடிக்க பழங்குடியினரை அழிக்க நினைக்கும் ஆளும் அதிகார வர்க்கத்தின் நயவஞ்சகம் என மக்களுக்கான சினிமாவை படைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். க்ளைமாக்ஸ் சீன் பதறவைக்கிறது. இந்த ஜிகர்தண்டா வின் சூப்பர் டேஸ்ட் மிக்ஸிங்கிற்கு மாபெரும் உழைப்பைத் தந்திருக்கிறார்கள் ஆர்ட் டைரக்டர்கள் பாலசுப்பிரமணி, குமார் கங்கப்பன், ( அந்தக் காலத்து மதுரை, பழங்குடி மக்களின் குடிசை, அவர்களின் குலதெய்வம் சேக்காளியம்மன் என பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.
கேமரா மேன் திருநாவுக்கரசு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ராகவா லாரன்ஸுக்கு மதுரை பேச்சு வர, கார்த்திக் சுப்புராஜ் மெனக்கெடாதது மைனஸ் தான்.ஆரம்பத்தின் பத்து நிமிட காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் ஜிகர்தண்டாவின் டேஸ்ட் இன்னும் கூடியிருக்கும். இருந்தாலும் இந்த ‘ஜிகர்தண்டா XX’ க்கு ட்ரிபிள் சபாஷ் போடலாம்.
-மதுரை மாறன்