ராமஜெயம் கொலையும் வெர்ஷா காரும்.. அவிழும் முடிச்சுகள்!
ராமஜெயம் கொலையும் வெர்ஷா காரும்.. அவிழும் முடிச்சுகள்! அங்குசம் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!
பல ஆண்டுகளாக குற்றவாளிகளை நெருங்க முடியாமல், திணறிவரும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சியை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளான பா.ம.க. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் மற்றும் தொழிற்சங்க செயலாளர் சு.பிரபு (எ) ஆம்புலன்ஸ் பிரபாகரன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை என சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த பின்னணியிலிருந்து, திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்த சு. பிரபு என்ற ஆம்புலன்ஸ் பிரபாகரன் என்பவரை, “கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சி விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டதால்” கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ”ஒருநாள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேசுகிறோம்.
ஆம்புலன்ஸ் பிரபு என்பவர் பா.ம.க.வில் மாவட்ட பொறுப்பில் இருப்பதாக சொல்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, “அவர் தற்போது பா.ம.க.வில் இல்லை. அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்பதால் கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம்” என்று பதில் சொன்னதை தாண்டி, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக எந்த ஒரு கேள்வியோ, விசாரணையோ செய்யவில்லை. தேவையில்லாமல் உள்நோக்கத்தோடு ராமஜெயம் கொலை வழக்கில் என்னையும் தொடர்புபடுத்தி விசாரணை நடைபெற்றதாக பத்திரிகைகளில் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இதனை கமிஷனரிடம் நேரில் சந்தித்துப் புகாராகவே தெரிவித்திருக்கிறேன்” என்கிறார், பா.ம.க. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத்.
இந்த சூடு தணிவதற்குள்ளாக, “கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த தாக உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் கைதாகியிருக்கிறார், ஆம்புலன்ஸ் பிரபு. திருட்டு வாகனமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள், திருச்சி ஜி.எச். போலீசார். ”எங்களுக்கு கிடைத்த தகவலில் இருந்து சந்தேகத் திற்கிடமான ஆம்புலன்ஸ் வாகனத்தை கைப்பற்றியிருக்கிறோம். ஆதாரங்களை கேட்டிருக்கிறோம். திருட்டு வாகனம்தான் என்று இன்னும் உறுதிபடுத்தவில்லை. விசாரணை சென்று கொண்டிருக்கிறது.” என்றார், திருச்சி ஜி.எச். இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி.
வீடியோ லிங்:
திருச்சி அரசு மருத்துவ மணையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கிவந்த பிரபாகரன் பா.மக.வின் தொழிற்சங்க நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவது, சவாரி எடுப்பது என சகல விசயத்திலும் அடாவடியாகத்தான் நடந்து கொள்வார் என்கிறார்கள். இவரது அத்துமீறிய நடவடிக்கைகளை, ஜி.ஹெச். போலீசாரும் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர். தவறை தட்டிக் கேட்கும் போலீசாரை பழிவாங்கும் விதமாக கட்சி சார்பில் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டுமென கட்சியில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இவரது அடாவடிகளுக்கு ஒத்துழைக்காத, பாமக மாவட்ட செயலர் உமாநாத்தை பழிவாங்கும் விதத்தில், கடையை வாடகை எடுப்பது தொடர்பான ஒரு விவகாரத்தில் கடை உரிமையாளர் ஒருவரை வைத்து புகார் கொடுக்க வைத்திருக்கிறார். அந்த வழக்கில் உண்மையில் நடந்த விசயமே வேறு என்பது விசாரணையில் போலீசாருக்குத் தெரியவர, திருப்பமாக உமாநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் பிரபு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளிவந்த நிலையில்தான், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டி ருக்கிறார் ஆம்புலன்ஸ் பிரபாகரன். தென் தமிழகத்தில் பிரபலமான ரவுடிகள் பலருடன் நேரடி தொடர்பில் இருப்பவர் இந்த பிரபாகரன் என்கிறார்கள். அவ்வப்பொழுது, அவர்கள் கேட்கும் உதவிகளை இவர் செய்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
மிக முக்கியமாக, ஆம்புலன்ஸ் ஓட்டுவது சைடு பிசினஸ் தான், திருட்டு வாகனங்களை வாங்கி விற்கும் வியாபாரம்தான் பிரதானமான தொழில் என்கிறார்கள். அதுவும் அது திருட்டு வாகனம் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாக ஆவணங்களை உருவாக்குவதில் வல்லவர் பிரபாகரன் என்கிறார்கள். அதாவது, வாகனங்களின் பதிவெண்ணை இவருக்கு பழக்கமான நண்பர் ஒருவரின் மெக்கானிக் ஷெட்டில் வைத்து, அந்த எண்ணை அழித்துவிட்டு, விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனத்தின் ஆவணங்களில் உள்ளபடி பதிவெண்ணை வார்ப்பு செய்து திருட்டு வாகனத்தை ”ஆவணங்களுடன்கூடிய நல்ல வாகனமாக” மாற்றுவதில் கில்லாடி என்கிறார்கள்.
ரவுடிகளிடம் உள்ள தொடர்பு, திருட்டு வாகன விற்பணை போன்ற இல்லீகல் பிசினஸ்களுக்கு பாதுகாப்பு கவசமாகத்தான் அவர் பா.ம.க.வை பயன்படுத்தி வந்ததாகவும்; அநாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு போலீசாருக்கே அவ்வப்போது ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வந்ததாகவும் சொல்கிறார்கள். இதையெல்லாம்விட, எப்போதும் ”மிஸ்டர் ஒயிட்” உடையில் வலம் வரும் பிரபாகரன், எவர் ஒருவரையும் பழிவாங்கும் நோக்கில் பெட்டிசன் போடுவதில் கில்லாடி என்கிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாகவே, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வந்த பிரபாகரனை சமயம் பார்த்து தூக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, ராமஜெயம் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடுச்சுகளில் ஒன்று ”கடைசியாக கொலையாளிகள் பயன்படுத்திய வெர்ஷா வகை வாகனம்”. தமிழகத்தில் பதிவான அந்தக் குறிப்பிட்ட 600+ வெர்ஷா மாடல் வாகனங்களை தேடிச் சென்ற பொழுதுதான், பிரபாக ரனை வந்தடைந்திருக்கிறார்கள்.
பிரபாகரன் வழியாக கைமாறியிருக்கும் இரண்டு வெர்ஷா மாடல் வாகனங் கள் உண்மையான பதிவெண் கொண்ட வையா? திருட்டு வாகனமா? என்பது ஒருபுறமிருக்க, அந்த குறிப்பிட்ட வெர்ஷா வாகனத்தை அவர் யாரிடம் அதை வாங்கி, யாரிடம் கைமாற்றினார்? என்ற ஒற்றைக் கேள்விக்கான விடையைத்தான் பிரபாகரனிடம் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடைசிவரை வாயைத் திறக்காத நிலையில்தான் வழிப்பறி வழக்கில் ஆம்புலன்ஸ் பிரபாகரன் கைதாகியிருக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக பிரபாகரனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல ரவுடிகளான மோகன்ராம், சாமிரவி, நரமுடி கணேசன், சீர்காழி சத்யா உள்ளிட்ட பல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிவடைந்த நிலையில் தற்போது வெர்ஷா மாடல் வண்டியை யாரிடம் வாங்கி, யாரிடம் விற்றார்? என்ற கேள்வியில்தான், ராமஜெயம் கொலை வழக்கிற்கான விடையும் அடங்கியிருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட் என்கிறார்கள்.
வீடியோ லிங்:
-அங்குசம் புலனாய்வு குழு.