அங்குசம் பார்வையில் ‘வட்டார வழக்கு’ படம் எப்படி இருக்கு ! ..
அங்குசம் பார்வையில் ‘வட்டார வழக்கு’ படம் எப்படி இருக்கு ! ..
தயாரிப்பு: மதுரா டாக்கீஸ் & ஆஞ்சநேயா பிக்சர்ஸ் கே.கந்தசாமி, கே.கணேசன். டைரக்டர்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன். இசை: இசைஞானி இளையராஜா. ஆர்ட்டிஸ்ட்ஸ்: சந்தோஷ் நம்பிராஜன் ( கவிஞர் விக்ரமாதித்தன் (எ) நம்பிராஜனின் மகன்) , ரவீனா, விஜய் சத்யா, பருத்தி வீரன் வெங்கடேஷ். ஒளிப்பதிவு: டோனி ஜான்& சுரேஷ் மணியன். எடிட்டிங்: வெங்கட் ராஜன். தமிழக ரிலீஸ்: சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’சக்திவேலன். பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா டி ஒன்
தென்மாவட்டங்களில் இன்றைக்கும் முக்குலத்தோர் இனத்தின் ஒரு பிரிவிற்குள் நடக்கும் பங்காளிகளுக்குள் பகைமோதல்கள், அதனால் எரியும் வன்ம நெருப்பு, உயிர்ப் பலிகள் இவற்றை ரத்தமும் சதையுமாக, இன்னும் சொல்லப் போனால், நேரடி ஒளிப்பதிவாகவே வந்திருக்கும் சின்சியரான சினிமா தான் இந்த ‘ வட்டார வழக்கு ‘. 1980-களில் மதுரைக்கு மேற்கே நடந்த உண்மைக் கதை தான் என்பதையும் படம் ஆரம்பமாகும் முன்பே நேர்மையுடன் ஒத்துக் கொண்டார் டைரக்டர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.
அதனாலேயே இந்தப் படம் போலவே, பார்வையாளனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் இயக்குனர். இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த உக்கிரமான மோதல்கள், படுகொலைகள், பெண்களின் பரிதாபக் கதறல்களை நேரடியாக பார்த்த பகீர் அனுபவங்கள் நமக்கு இருந்தாலும் இந்த ‘வட்டார வழக்கு ‘ பேசிய திரைமொழி முற்றிலும் பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.
சேங்கை மாறனாக வரும் சந்தோஷ் நம்பிராஜனுக்கு இது இரண்டாவது படம் என நினைக்கிறோம். ஆனால் பத்து இருபது படங்களுக்கு மேல் நடித்தவர்கள் போல அனுபவ நடிப்பை வழங்கி அந்த கதை நடக்கும் மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்திருக்கிறார். இவராவது நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர், தெக்கத்தி மனிதர்களின் உடல் மொழி, பேச்சு மொழியை உள்வாங்கிக் கொண்டதில் சிரமம் இருக்காது.
ஆனால் பக்கா அல்ட்ரா மாடர்ன் சென்னைப் பெண், இன்னும் சொல்லப் போனால் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ரவீனா, தொட்டிச்சி கதாபாத்திரத்தில் அவ்வளவு நேரத்தியாக பொருந்தியிருக்கிறார். இந்த வட்டார வழக்கின் பலமிக்க ஆதாரம், உறுதுணை என்றால் அது இசைஞானி இளையராஜா தான் என்பதை ஓங்கி அடித்துச் சொல்லலாம்.
கதையின் காலம் 1980 என்பதால், அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் மனதுக்குள் ரீங்காரமிடும் அவரது பாடல்களின் சில வரிகளை சேங்கை மாறனுக்கும் தொட்டிச் சிக்கும் இடையே காதல் கண் சிமிட்டும் நேரத்தில் பின்னணி இசையாக கோர்த்து மெய் சிலிர்க்க வைத்துவிட்டார் இசைஞானி.
சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா, இன்னும் இருவரைத் தவிர படத்தில் நடித்த அம்புட்டுப் பேரும் அந்த ஊர்க்காரர்கள். சின்னச் சின்ன குறைகளை புறம் தள்வோம். இந்த வட்டார வழக்கை போற்றிப் புகழ்வோம். இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரனை இதய சுத்தியுடன் வாழ்த்துவோம்.
— மதுரை மாறன்