வலசை தொலைத்த பேருயிர்…. வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி – 3
வலசை தொலைத்த பேருயிர்…. வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி – 3
யானை என்பது ஒற்றை உயிர் அல்ல. அதுதான் காடுகளின் ஆதார உயிரினம். அது இருந்தால் மட்டுமே மற்ற உயிர்கள் வாழும் சூழல் உருவாகும். அதனாலேயே இதனை பேருயிர் என்கிறோம்.
உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன. ஆசியாவை பொறுத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை. ஏனெனில், அவைகளின் உணவுத் தேவை அதிகம். அதனால் ஒரு வாழிடம் விட்டு இன்னொரு வாழிடம் செல்லும். அப்படி செல்லும்போது அவைகள் காலம்காலமாக பயன்படுத்தியதுதான் வலசைப் பாதைகள். அந்த பாதையை தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கிறது.
தற்போதைய பிரச்சினையே இந்த வலசை பாதைகளை அது இழந்து வருவது தான். இந்த பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி விவசாயம் கிடையாது. விவசாயம் இன்றி நமக்கு உணவு கிடையாது. எனவே, நாம் தினசரி உண்ணும் உணவுக்கும் எங்கோ இருக்கும் யானைக்கும் தொடர்பு உண்டு. வலசை பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன.
இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு? நாம் தான் காரணம். நம்முடைய நுகர்வுக்காவே காடுகள் இங்கு அழிக்கப்படுகின்றன. நன்கு யோசித்துப் பாருங்க. தேவைக்கு வாழாமல் ஆசைக்கு வாழ பொருட்களை வாங்கி வாங்கி குவிக்கிறோம். அந்த பொருட்களை செய்யும் மூலப்பொருள் எல்லாம் காடுகளை சார்ந்தே உள்ளது. எனவே இங்கு காடழிப்பு தொடந்து கொண்டே இருக்கிறது. காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள், மனிதர்களால் உண்டாக் கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு, என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.
ஓசூர் சூளகிரி பகுதியில் பல நூறு கிரானைட் தொழிற்சாலைகள் இப்பகுதியில் உள்ள காடுகளை ஆக்கிரமித்துள்ளது . ஓசூர் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியே யானைகள் வழித்தடங்கள் அங்கு யானைகள் செல்லும் பாதை கவனத்தோடு செல்லவும் என்று போர்டும் உள்ளது. அந்த வழித்தடத்தில் (பீமீறீtணீ ) டெல்டா என்று தொழிற்சாலை ஒன்று பல நூறு ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு யானை வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து தொழிற்சாலை அமைந்துள்ளதாலே யானைகள் மற்றும் வன விலங்குகள் திசை மாறி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது.
சத்தியமங்கலம் வனத்தில் இருந்து மேட்டூர் ஒகேனக்கல் பென்னாகரம் சூளகிரி கிருஷ்ணகிரி குப்பம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில் பயணித்து ஆந்திரா வனப்பகுதியில் நுழைந்து மீண்டும் இதே வழித்தடங்களில் பயணிக்கும் இக்குறிப்பிட்ட காட்டு பகுதியில் மனிதர்கள் வன விலங்குகளின் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் ஆக்கிர மித்து வருகின்றனர். அதிக ஒலி சத்தம் எழுப்பும் கற்கள் உடைக்கும் தொழிற்சாலைகளால் வன விலங்குகள் வன உயிரினங்கள் தடம் மாறி அருகில் உள்ள மனித குடியிருப்பு மற்றும் விவசாய பகுதியில் தன் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கிறது.
(தடங்கள் தொடரும்)
-ஆற்றல் ப்ரவின் குமார்
(யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்)
முந்தைய தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்…
யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பதற்கு இணையானது! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம் – 2