திமுக – அதிமுக தமிழக சட்டமன்ற இருக்கையில் அரசியல் சாணக்கியம் ! பிஜேபிக்கு செக் !
பாஜக எதிர்ப்பில் திமுக – அதிமுக இரட்டைக்குழல் துப்பாக்கி ! அதிமுக எதிர்க்கட்சித் துணைத்தலைவருக்கு இருக்கை வழங்கப்பட்டது எடப்பாடி கோரிக்கை – முதல்வர் பரிந்துரை – சபாநாயகர் நிறைவேற்றினார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை, சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் தற்போது அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஓபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆர்.பி.உதயக்குமார் இன்று (14.2.2024) அமர வைக்கப்பட்டுள்ளார் என்பதில் உள்ள அரசியலை இச் செய்திக் கட்டுரை அலசுகின்றது.
2021 சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதையடுத்துக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகளுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்வதாக அதிமுக தலைமை அறிவித்தது. மேலும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி உதயக்குமாருக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து சட்டப்பேரவை தலைவரை நேரில் சந்தித்தும், சட்டப்பேரவையில் கடிதம் மூலமாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்திய போதும், அதிமுக கோரிக்கை தன் பரிசீலனையில் உள்ளதாக அப்பாவு தெரிவித்து வந்தார். மேலும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், இருக்கை தொடர்பாக என்ன முடிவு எடுத்தாரோ அதே முடிவைத் தான் எடுப்பதாகவும், அதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில், இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 7 முறை சபாநாயகரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபைச் சபாநாயகர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டு வருவதால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன்மூலம் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயக்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் 205 இருக்கைக்குப் பக்கத்திலுள்ள 206 இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் என்ற தகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னுள்ள 207 இருக்கை வழங்கப்பட்டுள்ளது. 208 இருக்கை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல் அமைச்சர் என்ற தகுதி நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முதல் வரிசையில் இருக்கை வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பின்வரிசையில் வழங்கப்பட்டுள்ளது என்பது அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வத்திற்குப் பின்னடைவாக உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி “பாஜகவோடு இப்போதும் சரி…. 2026இலும் சரி கூட்டணி கிடையாது. இனிமேல் பாஜகவோடு கூட்டணியா என்று யாரும் கேட்கவேண்டாம்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம்,“2017-2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற எல்லா வகையிலும் பாஜக துணைபுரிந்தது என்பதை மறந்துவிட்டு, எடப்பாடி பாஜகவோடு கூட்டணி இல்லை என்று நன்றியில்லாமல் பேசி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையில், முதல் அமைச்சர் ஸ்டாலின் “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பழனிசாமியின் வேண்டுகோளை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அடுத்தநாளில் மிகவும் விரைவாக இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டதில் பாஜகவுக்கு எதிர்நிலை எடுத்த பழனிசாமிக்கு ஆதரவாக முதல்வர் செயல்பட்டதில் அரசியல் சாணக்கியம் உள்ளது என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஜக எதிர்ப்பு நிலையில் திமுகவும் அதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படத் தொடங்கிவிட்டனவோ என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுவதில் நியாயம் உள்ளதுதானே……. பொறுத்திருந்து பார்ப்போம்.
-ஆதவன்