அங்குசம் பார்வையில் ‘கிளாஸ் மேட்ஸ்’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘கிளாஸ் மேட்ஸ்’ தயாரிப்பு & ஹீரோ: ‘முகவை ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ ஜே.அங்கயற்கண்ணன். இணைத் தயாரிப்பு: கலைவாணி கண்ணன், டைரக்டர்: ‘குட்டிப்புலி’ ஷரவணசக்தி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: பிராணா, மயில்சாமி, ஷரவணசக்தி, அருள்தாஸ், அபிநட்சத்ரா, ஷாம்ஸ், மீனாள், முத்துப்பாண்டி, டி.எம்.காரத்திக், எஸ்.ஆர்.ஜாங்கிட். டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: அருண்குமார் செல்வராஜ், இசை: பிரித்வி, எடிட்டிங்: எம்.எஸ்.செல்வம், ஆர்ட் டைரக்டர்: ஜெய், பாடல்கள்: சீர்காழி சிற்பி. பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்)
‘குடி’ தனது குடும்பத்தை மட்டுமல்ல, அடுத்தவன் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிப்பாட்டிவிடும். பலரை மனநோயாளியாக்கிவிடும். ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த உண்மை தான் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தின் ஒரு வரிக்கதை. முகவை ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்திருப்பதால் , காளையார்கோவில், மருது சகோதரர்கள், உத்திரகோசமங்கை கோவில், பாம்பன் பாலம், ஏர்வாடி தர்ஹா, கமல்ஹாசன், அப்துல் கலாம் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளைச் சொல்லிவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள். கதைக்களமும் அங்கே தான்.
அங்கையற்கண்ணனும் ஷரவணசக்தியும் மாமன் – மச்சான்கள். இருவருமே குடிக்கு அடிமையானவர்கள். ஷரவணசக்தி மனைவி டீச்சர் என்பதால் தினமும் 500 ரூபாய் கொட்டி அழுகிறார். பள்ளியில் படிக்கும் வயதில் ஒரு பெண் குழந்தை இவர்களுக்கு. அங்கையற்கண்ணன் கால் டாக்சி டிரைவர். புதிதாக கல்யாணம் ஆனவர். கையில் கிடைக்கும் காசை அவ்வப்போது ‘கட்டிங்’ போட்டே பொழுதைக் கழிக்கிறார்கள் மாமாவும் மாப்ளையும். இருவருமே ஒரு கட்டத்தில் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள்.
துபாயில் இருந்து ஊர் திரும்புகிறார் ஷரவணசக்தி மனைவியின் தம்பி ஷாம்ஸ். அவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் நடக்குது. இதற்கிடையே குடியை நிப்பாட்டிய மயில்சாமி குடும்பத்திலும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் மாமாவும் மாப்ளையும். இதனால் மீண்டும் குடிக்கிறார் மயில்சாமி. கல்யாணத்துக்கு முதல் நாள் சரக்கடித்துவிட்டு ஷாம்ஸ் போடும் சாவு டான்ஸ், சோஷியல் மீடியாவில் பரவ, கல்யாணம் ஸ்டாப். மாமா ஷரவணசக்தி , டிரைவர்மாப்ளை, மயில்சாமி ஆகிய மூவரும் ஃபுல் மப்புடன் காரில் போகும்போது கார் மரத்தில் மோதி, மயில்சாமி மண்டையைப் போடுகிறார்.
இதனால் மயில்சாமி மனைவியும் ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் அவரது மகளும் ( அபி நட்சத்ரா) நடுத்தெருவில் நிற்கிறார்கள். குடி நோயாளிகளான மாமாவும் மாப்ளையும் திருந்தினார்களா? என்பதை செவுட்ல அரஞ்ச மாதிரி ‘நச்’ சென க்ளைமாக்ஸுடன் முடிகிறது இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’. இடைவேளை விடுவதற்கு முன்பான இருபது நிமிடங்கள் வரை டாஸ்மாக் பார், ஆட்டம் குத்தாட்டம்னு படம் நிதானம் இல்லாமல் தான் போகிறது. தயாரிப்பாளர் தான் ஹீரோ என்பதால் கொஞ்சம் சிரத்தை எடுத்து நல்லாவே குடிச்சு நடிச்சிருக்காரு அங்கையற்கண்ணன்.
ஆனால் டைரக்டர் ஷரவணசக்தி தான் ரொம்பவே ஓவராகி… செயற்கைத் தனமாக நடித்து, நாம் சரக்கு அடிக்காமலேயே கிறுகிறுக்க வைக்கிறார். முத்தையா படங்களில் லிமிட்டாக நடிக்கும் ஷரவணசக்தி, இதில் தானே டைரக்டர் என்பதால் ‘ அன்லிமிட்’ டாகப் போய்விட்டார் போல. ஆனால் கேரக்டர்களின் டயலாக் மூலம் சபாஷ் போட வைத்துவிட்டார். ” மாப்ளே..நம்மள மாதிரி வங்குடிகாரனுக்கு வாக்கப்பட்ட பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும்னு நினைக்குறது தப்புடா” என ஷரவணசக்தி பேசுவது, ” நல்லா இருந்தவனைக் குடிக்க வச்சு, அவனைப் பைத்தியக்காரனாக்கிட்டீகளேடா” என மயில்சாமி பேசுவது, ” யோவ் மாமா குடிகாரன்னு பேர் எடுத்தால் கூட திருத்திக்கலாம்.
ஆனால் திருடன்னு பேர் வந்தா..அழிக்கவே முடியாது” என பாரில் ஒரு கேரக்டர் பேசுவது என பல சீன்களில் கைதட்ட வைக்கிறார் ஷரவணசக்தி. ஷரவணசக்தியின் மனைவியாக வரும் டீச்சர் கேரக்டர், ஹீரோயின் மனைவி கலை என்ற கேரக்டரில் நடித்துள்ள பிராணா, சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் மயில்சாமி, அவரது மனைவியாக வரும் கேரக்டர், மகளாக வரும் அபிநட்சத்ரா, இரண்டு சீன்களில் வரும் மீனாள், அருள்தாஸ், ஹீரோயின் அண்ணன் அண்ணியாக வரும் கேரக்டர்கள் என எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கின்றன. கேமரா மேனும் மியூசிக் டைரக்டரும் ரொம்பவும் சப்போர்ட்டாக ‘நிற்கிறார்கள்’. சிச்சுவேஷனுக்கேத்த மாதிரி, டிஆர் பாணியில் சீர்காழி சிற்பியும் ரகளையான பாடல்கள் எழுதியுள்ளார்.
“ஒங்கள மாதிரி ஆம்பளைங்க குடும்பத்தலைவனா இருந்தா.. ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலைக்கா போக முடியும். ‘அயிட்டம்’ ( சென்சார் மியூட்) வேலைக்குத்தான்டா போக முடியும்” க்ளைமாக்ஸுக்கு முன்பு அபிநட்சத்ரா பேசும் இந்த ஒத்த வரிடயலாக் தான் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. இப்போது அவசியத் தேவையான இந்தப் படத்தின் மேக்கிங் சொதப்பலும் புரமோஷன் இல்லாததும்தான் மைனஸ். இந்த 23- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘கிளாஸ்மேட்ஸ்’. தியேட்டர் ஓனர்ஸ் புண்ணியவான்கள் பெரிய மனசு பண்ணி ரிலீஸ் பண்ணினால், உங்கள் ஏரியாவில் இந்தப் படத்தை கண்டிப்பாக பாருங்கள். குறிப்பாக ஆண்கள். –
மதுரை மாறன்