அடிக்கடி இந்த அம்மா வேற போன் பண்ணித் தொலைக்கிறா, “தம்பி எங்கிருக்கேனு” கேட்டுத் தாலிய அறுக்கிறா. !

0

அடிக்கடி இந்த அம்மா வேற
போன் பண்ணித் தொலைக்கிறா,
“தம்பி எங்கிருக்கேனு” கேட்டுத்
தாலிய அறுக்கிறா.
ஆனாலும் இப்போ இப்போ
அடிக்கடி அவகிட்ட
பேசணுமுனு தோனுது,
அப்படியே மடி சா்ஞ்சு
தூங்க மனம் ஏங்குது.

“சாப்டியா”னு கேட்கிற
ஒத்தக் கேள்விக்கு
“ஏழு நாளாச்சு”னு
எப்படிச் சொல்றது?
உடைஞ்சிடுவா, உருகிடுவா,
ஊரு தேசம் விசாரிச்சு
ஓடோடி வந்திடுவா.

புள்ள
பெரிய படிப்பு படிக்கிறதா
பீத்திக்கிட்டுத் திரியுறா, – நான்
பேருந்து ரயிலுன்னு
பர்பி வித்து அலையுறேன்.
“அங்க இங்க அலையாதே”னு
அம்மா நீ சொல்லுவியே!
இப்போ நான்
எங்கேயும் அலையலமா,
எதுக்குமே வழியில்லமா,
ஒரே இடத்தில படுத்திருக்கேன்,
ஒருகை பார்த்துட பிழைச்சிருக்கேன்.

குருதி குறையுதும்மா,
உறுதி இடறுதும்மா,
கூட்டாளிங்க அன்பு மட்டும்
கூடிக்கிட்டே போகுதும்மா.
சண்டை போட்டவனும்,
சட்டை பிடிச்சவனும்,
தாயாகத் தாங்குறான்,
“போதும் டா வந்துடு”னு
பொழுதுக்கும் ஏங்குறான்.

தங்கச்சி மகளுக்கு
தண்ணி ஊத்து முடிஞ்சுருச்சா?
தம்பியோட பையனுக்கு
பப்லிக்கு தொடங்கிருச்சா?
புழு நெலிஞ்ச விடுதி சோறா
போயிடுச்சு பிறவி,
போனால் போகட்டும் போடானு
நான்
ஆயிட்டேன்மா துறவி.

போனை எடுக்கலைனு
அடிச்சுக்கிற உன் மனசு
அரசுக்கும் இருந்துச்சுனா
என் ஆயுசும் பெருசு.

தூக்கம் மிரட்டுதும்மா,
தொண்டை பிதற்றுதும்மா,
காதடச்சுப் போனதால எல்லாம்
கனவாவே தெரியுதும்மா.

உள்ளுக்குள்ள உருகுகிற பிண்டம்
ஓடி வருது தண்ணி தண்ணியா,
உன் பாசத்த ஏந்திக்கிட்டு நண்பர்கள்
வாராங்க அணியணியா.

தமிழகமே என்கூட,
நான் தனியாலாம் இல்லம்மா,
தடுமாறாத மனசு வேணும்
தைரியம் கொஞ்சம் சொல்லும்மா.

எனக்கு
அரசு வேல கெடைக்கணுமுனு
எந்தச் சாமிக்கு நேந்திருக்க,
இன்னும்
ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கிறேன்,
இன்னக்கி
என்னம்மா சமச்சிருக்க?

***ப. சரவணமணிகண்டன்

தொடர்ச்சியாக 8 நாட்களாக உண்ணா நோன்பு இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி தியாகிகளுக்கு சமர்ப்பணம்.

Leave A Reply

Your email address will not be published.