கவிஞர் தமிழ்ஒளியின் 60-வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் !
தமிழ் மொழியின் பல்துறை வித்தகராய் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். விசயரங்கன் என்ற இயற்பெயரையுடைய தமிழ் ஒளி ...
கவிஞர் தமிழ்ஒளியின் 60-வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் !
பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சரி நிகர் சமத்துவ வாழ்வியல் என கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து அந்நோக்கிலேயே தம் படைப்புகளை இந்த சமூகத்திற்கு வழங்கிய கவிஞர் தமிழ்ஒளியின் மேன்மையை உலகறியச் செய்வதை நோக்கமாக கொண்டு, தமிழ் ஒளியின் நூற்றாண்டு நினைவை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சையில் கவிஞர் தமிழ்ஒளியின் 60-வது நினைவுநாளை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிப்புல அவையத்தில் இன்று (28.3.2024) முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணை வேந்தர் பேரசிரியர் வி. திருவள்ளுவன் அவர்கள் தலைமை தாங்கினார். மதிப்புயர் பதிவாளர் சி.தியாகராஜன், மொழிப்புலத்தலைவர் பேராசிரியர் ச.கவிதா முன்னிலை வகித்தனர். கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் முனைவர் சீ. இளையராஜா வரவேற்புரையும், முனைவர் மா. இரமேஷ்குமார் நன்றியுரையும் வழங்கினர்.
யார் இந்த தமிழ்ஒளி?
தமிழ் மொழியின் பல்துறை வித்தகராய் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். விசயரங்கன் என்ற இயற்பெயரையுடைய தமிழ் ஒளி, 1924ல் சின்னையா & செங்கேணியம்மாள் இணையருக்கு பிறந்தவர். தமிழகத்தின் குறிஞ்சிப்பாடியை அடுத்த அடுர் கிராமத்தில் பிறந்து புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டத்தில் வாழ்ந்து 1965-ல் புதுச்சேரியிலே மறைந்தவர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் தலைவர் பேராசிரியர் இரா. காமராசு அவர்கள், “தமிழ்ஒளி தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பயின்றவர். அவருக்கு தமிழ் நாடு அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருவுருவச்சிலை அமைத்திருப்பது பொருத்தமானது” என்றார்.
நாளை (29.3.2024) கவிஞர் தமிழ்ஒளியின் 60வது நினைவுநாள். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் சிலைக்கு தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் காலை 10மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
அங்குசம் செய்தி பிரிவு.