குடியுரிமை திருத்தச் சட்டம் ! வெறுப்பு அரசியலின் குழந்தை !! – தி.லஜபதிராய் ( பாகம் – 01 )
கிட்டத்தட்ட 132 முகாம்களில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித குடியுரிமையும் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாத முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் ! வெறுப்பு அரசியலின் குழந்தை !!
– தி.லஜபதிராய் (பாகம் – 01)
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களில் ஒன்றான கோல்புரா மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதிக்கரையில் தேயிலை தோட்டங்களைக் கடந்த மரப்பாலம் ஒன்றை தாண்டி அமைந்த மாட்டியா என்ற சிறு நகரில் 10 அடி கோட்டைச் சுவர்களின் நடுவே 46 கோடி பொருள் செலவில் கட்டப்பட்ட தடுப்பு முகாம் 3000 மனிதர்களை, ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக அடைக்கும் வசதி கொண்டது.அதுவே குடியுரிமையற்றவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு முகாம்.
அந்த தடுப்புமுகாம் உள்ளே பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்து இருக்கும். இந்த முகாமுக்குள் அடைக்கப்படும் மனிதர்களில் சிலர் முகாமுக்குள்ளேயே தங்களுடைய வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டும்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முலாக 68 பேர்கள் அந்த முகாமில் அடைக்கப்பட்டனர் அதில் ஆண்கள் 45 பெண்கள் 21 மற்றும் குழந்தைகள் இரண்டு பேர்கள் . முகாம்களில் செலவழிக்கப் போகும் இதுபோன்றவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.
தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாத இந்தியர்கள் எல்லோரும் மாட்டியா முகாம் போன்ற ஆயிரக்கணக்கான முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். 2019 ஆம் ஆண்டு இறுதியில் அஸ்ஸாமில் மட்டும் 19 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தவறியுள்ளனர். அங்குமட்டுமே 633 முகாம்கள் குறைந்தது தேவைப்படும்.
அஸ்ஸாம் முகாம்களுக்கான பொருட்செலவு முப்பதாயிரம் கோடி செலவு ஒரு புறமிருக்க இருக்க தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இரண்டிலும் விடுபட்டுப் போன இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டினர் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தீர்ப்பாயங்களில் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கொகாய் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அமர்வின் 2013ஆம் ஆண்டு தீர்ப்பின்படி அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேட்டில் அஸ்ஸாமில் வசிக்கும் இந்திய குடிமக்களை கணக்கெடுத்த போது 19 லட்சம் பேர் குடியுரிமை பதிவேட்டில் இடம்பெற இயலவில்லை. அவர்களில் வங்காள மொழி மற்றும் இந்தி பேசும் 12 லட்சம் பேர் இந்துக்கள். அவர்கள் தீர்ப்பாயங்களில் தங்கள் உரிமையை நிரூபிக்காவிட்டால் முகாம்களில் அடைக்கப்பட இருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்தின் பலன்கள் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 31.12.2014 டிசம்பருக்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர் , சமணர்கள், பௌத்தர்கள், ஆகியோருக்கு மட்டுமே கிடைக்கும் ,அவர்கள் சட்ட விரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்.
ஏறத்தாழ எட்டு லட்சம் இந்துக்களும், ஏழு லட்சம் இஸ்லாமியரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தவறினால் முகாம்களில் அடைக்கப்படுவர்.
தமிழகத்தை பொருத்தமட்டிலும் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை உள்நாட்டுப் போரால் இந்தியாவிற்குள் நுழைந்தனர். கிட்டத்தட்ட 132 முகாம்களில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித குடியுரிமையும் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாத முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவற்றில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஒரு முகாம் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. அதே முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் போன்று அதே எண்ணிக்கையில் முகாமுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர்.
(தொடரும்)
வழக்கறிஞர் தி.லஜபதிராய்