வம்படியாக பெண்கள் மீது வண்டியில் மோத சென்ற விசிக பிரமுகர்கள் கைது ! இருதரப்பு மோதல், போராட்டம் !
வம்படியாக பெண்கள் மீது வண்டியில் மோத சென்ற விசிக பிரமுகர்கள் கைது ! இருதரப்பு மோதல், போராட்டம் ! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை காலனியைச் சேர்ந்த அரவிந்த், சந்தீப் திவாகர் ஆகிய இளைஞர்கள், கடந்த 19ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அதே வழியில் நடந்து சென்ற பெண்ணின் மீது மோதுவது போல் சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பெண்ணின் கணவர் மாதேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த பிரமுகர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாதேஸ்வரன், அவரது மனைவி மற்றும் மாதேஸ்வரின் தாய், தந்தை மற்றும் கேலி கிண்டல் செய்த விடுதலை சிறுத்தை கட்சியி பிரமுகர்களான திவாகர், சந்தீப் மற்றும் அரவிந்தன் ஆகிய 7 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண் இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரச்சினைக்கூறிய நபர்களான சந்தீப், திவாகர், அரவிந்தன் ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துவிட்டதாகவும் கேலி கிண்டல் செய்த , நபர்களை தாக்கிய மற்றொரு தரப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, அம்பலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த (பொறுப்பு) ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
– மணிகண்டன்