உற்பத்தியின்றி முடங்கிய மாதவரம் ஆவின் பால் பண்ணை ! போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் இன்று (07.06.2024) முற்றிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு காலை 11.00 மணி கடந்து கூட ஆவின் பால் விநியோகம் நடைபெறுமா..? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ...
உற்பத்தியின்றி முடங்கிய மாதவரம் ஆவின் பால் பண்ணை ! போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
ஆவின் பால் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதிவில், “மாதவரம் பால் பண்ணைக்கு வெளி மாவட்டங்களில் வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக சரிவடைந்துள்ளதோடு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து இன்றும் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.
இதன் காரணமாக மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோருக்கான மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் தற்போது அதிகாலை 4.45மணி நிலவரப்படி ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் பிறகு பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து எப்போது அந்த விநியோக வாகனங்கள் புறப்படும் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இதனால் கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, தொடங்கி மணலி, மீஞ்சூர் எண்ணூர் மற்றும் புரசைவாக்கம், ஓட்டேரி, சூளை, பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் இன்று (07.06.2024) முற்றிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு காலை 11.00 மணி கடந்து கூட ஆவின் பால் விநியோகம் நடைபெறுமா..? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதில் பால் முகவர்கள் கடும் இன்னலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மாதவரம் பால் பண்ணையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆவின் நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்களுக்கும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் @Manothangaraj அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, ஆவின் பால் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
-
அங்குசம் செய்திப் பிரிவு.