ஏழு மாவட்ட நிர்வாகிகளுக்கு கல்தா ! அமைச்சர் பட்டியலில் மாங்கனி எம்.எல்.ஏ.க்கள் ? அதிரடிக்கு தயாராகும் அறிவாலயம் ! வீடியோ
அந்த நாலு + ஏழு பேர் யாராக இருக்கும் என்ற அனுமானம்தான் ஆளும்கட்சி அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்-காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ”நாலு + ஏழு” பட்டியலில் நம்ம பெயரும் இடம்பெற்றிருக்குமோ என்று ஏகத்தும் பி.பி. எகிறிக் கிடக்கிறார்களாம் ஆளும் தரப்பில்.
ஏழு மாவட்ட நிர்வாகிகளுக்கு கல்தா ! அமைச்சர் பட்டியலில் மாங்கனி எம்.எல்.ஏ.க்கள் ? அதிரடிக்கு தயாராகும் அறிவாலயம் !
அதிரடியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, நான்கு அமைச்சர்கள் பதவி பறிப்பு , இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் குறைப்பு , பல மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என அறிவாலயம் தரப்பில், அதிரடி காட்ட ஆயத்தமாகியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றிய உளவுத்தகவல் ஒன்று கட்சித் தலைவரும் முதல்வருமானவரின் டேபிளில் இருப்பதாக தகவல்.
வீடியோ லிங்
அவரது டேபிளில் முடிவுக்காக காத்திருக்கும் அந்த ரிப்போர்ட்டில் 4 அமைச்சர்கள் , 7 மாவட்டச் செயலாளர்கள் பற்றிய பல முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கிறதாம். அந்த நாலு + ஏழு பேர் யாராக இருக்கும் என்ற அனுமானம்தான் ஆளும்கட்சி அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்-காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ”நாலு + ஏழு” பட்டியலில் நம்ம பெயரும் இடம்பெற்றிருக்குமோ என்று ஏகத்தும் பி.பி. எகிறிக் கிடக்கிறார்களாம் ஆளும் தரப்பில்.
மேலும், சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும்; புதியவர்கள் இருவர் புதிய அமைச்சர்களாகும் யோகம் வாய்த்திருப்பதாகவும் தகவல். தேனாம்பேட்டை வட்டாரத்தில், விசாரித்த வகையில், பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கதர் அமைச்சரையும்; நீண்ட இனிஷியல் கொண்ட அந்த மூத்த அமைச்சரையும் அவர்களது உடல்நிலை ஒத்துழைக்காததன் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல். முட்டைக்கு பெயர்போன மாவட்டத்தின் அமைச்சர், குளுகுளு மாவட்டத்தை சேர்ந்த இரு அமைச்சர்களின் பதவியும் பறிபோக வாய்ப்பிருக்கிறதாம்.
வெயிலுக்கு பெயர் பெற்ற சீனியர் அமைச்சரிடம் உள்ள இலாகாவில் உள்ள சில துறைகளையும் உப்புக்கு பெயர் போன மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரிடம் உள்ள சில துறைகளைப் பறிப்பதாக முடிவாம். இவர்களிடம் பறித்ததை, மாங்கனிக்கு பெயர்போன மாவட்டத்து எம்.எல்.ஏ.வுக்கும்; ஆந்திர கர்நாடகா எல்லையையொட்டி அமைந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பகிர்ந்து கொடுப்பது என்பதாகவும் ஏற்பாடாம். கனிமங்கள் மற்றும் கால்நடைத்துறைகள் புதியவர்கள் வசம் போக வாய்ப்பிருப்பதாக தகவல்.
கள்ளச்சாராய சாவு காரணமாக, அரசுக்கு அவப்பெயரை எடுத்துக் கொடுத்த மாவட்டத்தின் செயலர் மாற்றப்படுவது உறுதி என்கிறார்கள் அறிவாலயம் தரப்பில். மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக அமையாமல், நல்ல மாற்றங்களால் நல்லது நடந்தால் மகிழ்ச்சிதானே ?
கா . மணிகண்டன்
வீடியோ லிங்