தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா
தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா – திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்புவிழா நடைபெற்றது. இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவிற்குத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தலைமை வகித்தார். இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் செ.ஜா.அரசி மார்லின் வரவேற்புரை வழங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவி சஹானா வரவேற்பு நடனம் ஆடி அனைவரையும் வரவேற்றார்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தமிழ்த்துறையின் தனித்துவம் குறித்து கல்லூரியின் மேனாள் துணைமுதல்வர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் சு.சீனிவாசன், வளனார் தமிழ்ப்பேரவைச் செயலர் செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.

நான்காம் ஆண்டு ஒய்எஸ்பிஏ நடத்திய தேசிய அளவிலான 5000 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழ்நாட்டுக்காக ஓடித் தங்கம் வென்று மேலும் பன்னாட்டு அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிற மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர் கே.அவினேஷ் மற்றும் கல்லூரி மாணவர் பேரவைத் துணைத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர் சே.பிரான்சிஸ் ஆண்டனி ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.
தலைமையுரையாற்றிய துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தமிழாய்வுத்துறையின் அனைத்துப் பேராசிரியர்களையும் துறைத்தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கான ஒழுக்கமுறைகள், துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.

தமிழ்த்துறைப் இளங்கலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆஷிக்டோனி நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்தார். வரவேற்பு விழாவின் நிறைவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் பங்கேற்றுப் புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர். வளனார் தமிழ்ப் பேரவைத் தலைவர் முனைவர் ஆ. அடைக்கலராஜ் மாணவர்களோடு இணைந்து நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.