பதவிக்கு கை கொடுத்தவர் கூட்டத்திற்கு வராததால் அதிமுக தலைவர் அதிர்ச்சி – குளித்தலை சிக்கல் !
ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு கை கொடுத்தவர் கூட்டத்திற்கு வராததால் அதிமுக தலைவர் அதிர்ச்சி. கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கூட்டத்திற்கு அதிமுக ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம், அதிமுக துணைத் தலைவர் இளங்கோவன், அவர்களைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி மணிமேகலை, மேலாளர் சுரேஷ் ஆகியோர் கூட்ட மன்றத்திற்கு வந்தனர். மன்ற அனுமதியை எதிர்நோக்கி 44 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட இருந்தது. கூட்டத்திற்கு ஒரே ஒரு திமுக உறுப்பினர் சந்திரமோகன் மட்டும் வந்திருந்தார்.
அவரைத் தவிர மற்ற திமுக உறுப்பினர்களான சாந்தா ஷீலா, சங்கீதா, முருகேசன், சத்யா, ராஜேஸ்வரி, அறிவழகன் ஆகிய 6 பேர் உட்பட அதிமுகவை சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினரான கௌரியும் கூட்டத்திற்க்கு வரவில்லை. இதனால் ஒரு மணி நேரமாக கூட்டம் மன்றத்தில் காத்திருந்தனர். பிறகு அதிமுக தலைவர் விஜய விநாயகம் எழுந்து போதிய உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராததால் கூட்டத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கூறினார்.
கடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பலம் 6 ஆகவும், திமுக பலம் 4 ஆகவும் இருந்ததால் ஒன்றிய குழுவை அதிமுக கைப்பற்றியது. ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த விஜய விநாயகம், துணைத் தலைவராக இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக உறுப்பினர்கள் 3 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் 7 ஆக உயர்ந்தது. ஒரே ஒரு உறுப்பினர் ஆதரவு இல்லாததால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை எவ்வளவோ முயன்றும் திமுகவால் கைப்பற்ற முடியவில்லை.
அதிமுக ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை அதிமுக தக்க காரணமாக இருந்த ஒரே ஒரு அதிமுக உறுப்பினர் கௌரி! அதிமுக உறுப்பினர் கௌரியும் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் அதிமுக அதிர்ச்சி.
நவ்ஷாத்