கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல் – அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை !
”S”…”N” ..”P”..பெயரில் நிதி ஒதுக்கீடு ! கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல்! – தமிழகத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெருமளவுக்கு ஊழல் – முறைகேடுகள் நடைபெறுவதாக பரவலான குற்றச்சாட்டு சமீப காலமாகவே எழுந்து வருகிறது. ஒருவர் பெயருக்கு ஒதுக்கீடான வீட்டை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுப்பது தொடங்கி, சம்பந்தபட்ட பயனாளிக்கே தெரியாமல் மொத்தப் பணத்தையும் அதிகாரிகளே ஆட்டைய போட்ட விவகாரம் வரையில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
”அட இப்படியும் கூட தில்லுமுல்லு செய்ய முடியுமா?” என்று வாயைப் பிளக்கும் வகையில், ”S”…”N” ..”P”.. என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்திருப்பதாக கிறுகிறுக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார், பெரம்பலூர் மாவட்டம், இலாடபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்.
பிரதம மந்திரி ஆவாஸ் போஜனா (கிராமின்) திட்டத்தின் கீழ் 2016-17 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டில் மணிகண்டன் பெயருக்கு வீடு ஒதுக்கீடு ஆகியிருக்கிறது. சம்பந்தபட்ட மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, அவரது பெயரில் ஒதுக்கீடான வீட்டிற்கு அவரது தாயார் சீரங்கம்மாளின் வங்கிக்கணக்கை காட்டி, கட்டாத வீட்டுக்கு வந்த பணம் மொத்தத்தையும் சீரங்கம்மாளின் கையெழுத்தைப் பெற்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்திருக்கின்றனர்.
வீடியோ லிங்
இந்த விவரம் ஏறத்தாழ ஓராண்டு கழித்து, எதேச்சையாக தாயாரின் வங்கி பரிவர்த்தனையை பார்க்கும்போதுதான் மணிகண்டனுக்கு தெரிய வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்திரியிடம் கேட்டிருக்கிறார். உங்களுக்கு வந்த வீட்டை இன்னொருவருக்கு மாற்றிவிட்டிருக்கிறோம் என்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சொன்ன நபரிடம் விசாரிக்கும்போது, அதுவும் பொய் என தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில்தான், இந்த மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்ரி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலர் பெ.அமுதா இ.ஆ.ப. வரையில் புகார் தெரிவித்து விட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக திரும்பத்திரும்ப நினைவூட்டல் கடிதங்களையும் அனுப்பி அலுத்துவிட்டார் மணிகண்டன். இடைப்பட்ட காலத்தில் பெரம்பலூருக்கு இரண்டு கலெக்டர்கள் மாறிவிட்டார்கள், இரண்டு கலெக்டர்களுக்குமே மணிகண்டன் புகார்மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு அரசு முதன்மை செயலர் பெ.அமுதாவும் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனாலும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மாறாக, ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்ரிக்கு ஆதரவாக அவரது கணவர் பெருமாள், ஆள்மாறாட்டம் செய்த முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மிரட்டுவதாக சொல்கிறார், மணிகண்டன். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசு நிலையத்தில் பதிவான வழக்குகளும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.
இந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்றில்தான், அந்த அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்திருக்கிறது மணிகண்டனுக்கு. அதாவது, அவரது ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயணாளிகளின் பட்டியலில் வெறுமனே ”S”…”N” ..”P”.. என்று ஒற்றை ஆங்கில எழுத்தை மட்டுமே முழுப்பெயராகக் கொண்ட பயனாளிகளுக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பலநூறு பக்கங்களை கொண்ட பல்வேறு ஆவணங்கள் கையுமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, ஊழல் முறைகேட்டுக்கு எதிராக சளைக்காமல் தனி ஒருவனாக போராடி வருகிறார், மணிகண்டன். ஊராட்சி மன்றத் தலைவரில் ஆரம்பித்து, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த பல்வேறு நிலை அதிகாரிகள் உள்ளிட்டு, உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரையில் இந்தக் கூட்டுக் கொள்ளையில் பங்கு இருப்பதன் காரணமாகவே, ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கும் விதமாக கூட்டு சேர்ந்து கொண்டு ” எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்று மணிகண்டனுக்கு “பெப்பே” காட்டி வருகிறார்கள்.
– வே.தினகரன்.