”சொல்” என்பதை ”செயல்” ஆக்கியவர் ! ஆசிரியர் வே.சந்திரசேகரன் !
”சொல்” என்பதை ”செயல்” ஆக்கியவர் ! ஆசிரியர் வே.சந்திரசேகரன் ! – சந்திரன் என்றால் நிலவு. நிலவு மென்மையானது, குளிர்ச்சியானது, காண்பதற்கு அழகானது. சேகர் என்றால், அறிவு என்பது பொருள். இதுதான் சந்திரசேகரன். இவரது பெற்றோர்கள் வேலுச்சாமி – கமலாம்பாள்.
இவர் 7ஆம் வகுப்பு படிக்கும்போது தாய் கமலாம்பாள் இயற்கையெய்தி விடுகிறார். அதற்குப் பிறகு, இவர் வாழ்க்கை முழுவதும் அப்பா வழித் தாத்தா, பாட்டியைச் சுற்றியே வருகிறது.
இவருக்குப் பூர்வீகம் குமரமங்கலம். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டுக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிற்றூர். மிகஎளிமையான சிறிய ஒரு வீட்டைக் கொண்டிருந்த தாத்தா, பாட்டியின் வீட்டுத் திண்ணைதான் இவருக்குப் புகலிடம்.
உள்ளூர் அஞ்சல் நிலையப் போஸ்ட் மாஸ்டரும், தபால்காரர் இருவருமே சந்திரசேகரனுக்கு உற்ற நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளனர்.
பாடப்புத்தகம் தவிர மற்ற நூல்களைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை, திருச்செங்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் படித்து முடிக்கிறார்.
ஆசிரியர் பயிற்சியும், பணியும் …
மாமா நடேசன் அவர்களின் உதவியால், அவிநாசியிலுள்ள அரசு அசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் பட்டயப் படிப்பை முடிக்கிறார். 1967 ஆண்டு இறுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியும் கிடைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் வட்டம், கூச்சூர் என்ற ஊரிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் செல்கிறார்.
நண்பர்கள் சிலர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, வேலையில்லாமல் இருந்தனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என முடிவெடுக்கிறார்.
அந்த நோக்கில், வே.சந்திரசேகரன் பணியில் இருந்த நேரத்திலேயே 29.5.1987 அன்று, நண்பர்கள் சிலரின் உதவியுடன் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை துவங்குகிறார்.
இந்த நேரத்திலேயே, ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளராக…
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்தபோது வே.சந்திரசேகர் அவர்களின் செயல்பாடுகள் பற்றி மேனாள் சட்ட மேலவை உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான செ.முத்துசாமி பேசும்போது, ” தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்திற்கெனத் தனி ஊழியர்கள் நியமனம் செய்யவில்லை.
பள்ளியின் தலைமையாசிரியர்களே அந்தப் பொறுப்பையும் கவனிக்கச் சொன்னார். இது, மாணவர்கள் நலனில் பதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இத்துடன் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து, மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
இந்தப் போராட்டத்தைக் கைவிட ஏற்பாடு செய்யுமாறு, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அன்றைய தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர் க.திரவியத்திடம் கேட்டுள்ளார். அவரும் “சத்துணவுத் திட்டத்திற்குத் தனியாக ஆள் நியமனம் செய்யலாம். உங்கள் சங்கம் நடந்தும், பேரணிகளை நிறுத்தி விடுங்கள்” என்றார். ஏற்கெனவே திட்டமிட்ட பேரணியை நிறுத்த முடியாது என மறுக்கிறார். பேரணி நடைபெற்றது. அரசும் கோரிக்கையை ஏற்றது.
தலைமையாசிரியர்கள், சத்துணவுப் பொறுப்பிலிருந்து விடுதலைப் பெற்றனர். ஆசிரியர் கூட்டணியின் போராட்டத்தில், இஃது ஓர் அரிய வரலாறு ஆகும். ஒவ்வொன்றையும் இப்படித் திட்டமிட்டு வழிநடத்துவதில், தம்பி சந்திரசேகருக்கு நிகர் வேறு யாருமில்லை” என்கிறார்.
பாதை மாறிய பயணம் …
1990 – ஆம் ஆண்டு, தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் சீதாலட்சுமி. இவரது நேர்முக உதவியாளராக நடராஜன், பள்ளி அரையாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், பல்வேறு கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த 50 ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிடுகிறார்.
ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்த வே.சந்திரசேகரனுக்கு இது எரிச்சலூட்டியது.
“பள்ளி இறுதித் தேர்வு முடியும்வரை ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது. மாணவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவர். இது, அவர்களின் தேர்வு முடிவுகளைப் பாதிக்கும். ” என்று சொல்கிறார்.
“ஆசிரியர்கள் பணி மாற்றம் என்பது, அதிகாரிகள் முடிவெடுப்பது. இதைப்பற்றிக் கேட்க உங்களுக்கு உரிமையில்லை. வெளியே போங்க…” என்கின்றார் நடராஜன்.“என்னை வெளியே போ..” என்று சொல்வதற்கு, இது உன் அப்பன் வீடல்ல. நான் வெளியே போகமுடியாது, நீ வெளியே போ…”என்று நடராஜனின் சட்டையைப் பிடித்து, இழுத்து வெளியே தள்ளுகிறார். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஆனால், வே. சந்திர சேகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அவர் பொருட்படுத்தவில்லை. தனது அடுத்த இலக்காக ஒரு புதிய பாதையை நோக்கி நகர்கிறார்.
தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வளர்ந்தால் போதும் என்ற நினைப்பவர்களே அதிகம். இந்தச் சந்திரசேகரன் அதிலிருந்து மாறுபட்டவர். இந்த ஊரிலுள்ள மாணவர்களும், வளரவேண்டும், இந்த ஊரும் வளர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அதன் காரணமாகவே, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் எளிய, சிறிய கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய அவர், இன்று அந்தக் கல்வி நிறுவனம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு அறிவையும், வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துக்கொண்டுள்ளது.
சமூக நலன் காக்கும் நந்தவனம்….
ஒவ்வோர் ஊரிலும் சுடுகாடு இருக்கும். அது சமூக விரோதிகளின் கூடாரமாக அமைந்திருக்கும். ஆனால் ஊத்தங்கரையில் அப்படி இல்லை. இந்த ஊர் சுடுகாடு நந்தவனம்போல இருக்கும். அதற்குக் காரணம் இந்த வே.சந்திரசேகரன்.
நமக்கு நாமே என்ற மக்கள் திட்டத்தின் கீழ், 80 லட்ச ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள மின்மயானத்திற்கு, அரசு தரப்பில் 51 லட்சம் ஒதுக்கீடு செய்த நிலையில் மீதிச் செலவு முழுவதையும் சந்திரசேகரன் அவர்களே செய்திருக்கிறார்.
அத்துடன், இறந்தோர் உடலை எடுத்துவர ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று வாங்குவதற்கும் 15 இலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
சமூகப் பாதுகாப்பு
ஊத்தங்கரை ஊர் முழுவதும், 64 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, ஊர் நடவடிக்கைகள் முழுவதையும் காவல்துறையினர் கண்காணிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என எந்த அலுவலகத்திற்குப் போனாலும், புளியமரத்துக்கு அடியில்தான், பொதுமக்கள் உட்கார்ந்து மனு எழுதிக் கொண்டிருப்பர்.
ஊத்தங்கரை இதற்கு விதிவிலக்காக உள்ளது. காரணம் இந்தச் சந்திரசேகரன். பொதுமக்கள் அமர்ந்து மனு எழுதுவதற்காகவே பல லட்சம் ரூபாய் செலவில், ஒரு நிழல் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அரசு மருத்துவமனைக்கு நிலம் தனம்…
புதிய அரசு மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்காக, திருவண்ணாமலை செல்லும் வழியில் நான்கரை ஏக்கர் நிலத்தைச் சந்திரசேகரன், சுகாதாரத்துறைக்குக் கொடுத்திருக்கிறார்.
மாணவர்களின் தொழிற்கல்வி…
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊத்தங்கரை இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு ஒரு பல்தொழில் பயிலகம் (Polytechnic College) வேண்டுமென்று நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் கிடந்தது. நிலம் வாங்க நிதியில்லை என அரசு கைவிரிக்க. நான் நிலம் தருகிறேன் என்று 10 ஏக்கர் நிலத்தைச் சந்திரசேகரன், உயர்கல்வித் துறைக்கு எழுதிக்கொடுக்கிறார். அந்த இடத்தின் மதிப்பை, கணக்கிட முடியாது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நவீன கல்வி…
ஊத்தங்கரை அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 40 இலட்சம் செலவில் மூன்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இதைப் பராமரிப்பதற்காக 10 லட்ச ரூபாய் வைப்பு நிதியாகவும் கொடுத்திருக்கிறார்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருகோடி ரூபாய் செலவில், கணினி நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஊத்தங்கரை அரசு ஆரம்பப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து, கணினி வழியில் கல்வி கற்பதற்குத் தேவையான உபகரணங்களை நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார்.
பெண்கள் பள்ளியில் சுகாதாரம் மேம்பாடு…
ஊத்தங்கரையில் 40 லட்சம் செலவில் மாணவிகளுக்குக் கழிப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறார். அத்தோடு மாணவிகள் ஐந்து ரூபாய் காசு செலுத்தி, மேம்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களைப் பெற்றுக்கொள்ளும் இயந்திரம்; பயன்படுத்திய நாப்கின்களை எரிப்பதற்கான ஓர் இயந்திரத்தையும் வாங்கிக் கொடுக்கிறார்.
மாணவிகள் கலைத்துறையிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக 10 இலட்ச ரூபாய் செலவில் கலையரங்கமும் கட்டி கொடுத்திருக்கிறார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு அறக்கட்டளை ….
ஊத்தங்கரையில் இருக்கும் சமூக ஆர்வமுள்ள அக்கறை உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த, 1.12.2017 இல் எம்ஜிஆர் நூற்றாண்டு அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பைத் தொடங்குகிறார். இந்த அறக்கட்டளை ஊத்தங்கரை சுற்றுப்பகுதியில் சமூகப் பணிகளை மேற்கொள்ளவும், சமூகப்பணி செய்பவரை ஊக்கப்படுத்தவும் பெருந்தொகையை வைப்பு நிதியாக ஒதுக்கி அதன் ஈவுத்தொகையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்.
இலக்கியப்பணி…
தமிழ்நாட்டிலுள்ள எழுத்தாளர்கள், பாவலர்கள், பாடலாசிரியர்கள், சொற்பொழிவாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்துறை அறிஞர்கள் அனைவரையும் அழைத்துப் பாராட்டி, பொற்கிழி வழங்கி வரும் ஊத்தங்கரை முத்தமிழ் மன்றத்திற்கு புரவலராக இருந்து பேணி வருகிறார்.
உதவிக் கல்வி அலுவலர் அலுவலகம்…
ஊத்தங்கரை உதவி கல்வி அலுவலர் அலுவலகம், மேம்படுத்தப்பட்ட அனைத்து வசதிகளுடனும், மாவட்ட அளவிலான ஒரு அலுவலகம் போலவே அமைந்திருக்கும். இந்தக் கட்டடத்தைச் சந்திரசேகரன் தனது சொந்தச் செலவில் கட்டிக்கொடுத்திருக்கிறார்.
கண் உள்ள எல்லோரும் உலகத்தைக் காணுகின்றனர். கல்விக்கண் திறந்தோர் எல்லோருமே உலகத்தை ஆளுகின்றனர்.
இந்த உலகத்தை ஆள்வதற்குப் புதிய இளைஞர்களை உருவாக்குவதற்காகவே இந்தச் சந்திரசேகரன் தன்னை அர்ப்பணித்து, வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வோர் இளைஞரும் படித்து, சொந்தக்காலில் நிற்கவேண்டும், தன் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும், இந்த மனிதச் சமூகத்திற்குப் பயன் அளிக்க வேண்டும் என்பது உங்களைப் போன்ற இளைஞர்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தைச் சந்திரசேகரன் நிறைவேற்றி, செயல்படுத்தி வருகிறார்.
இதையெல்லாம் கடந்து சந்திரசேகருக்கு ஒரு கனவு உள்ளது. அது மாபெரும் கனவு. அந்தக் கனவை ஒருபோதும் அவரால் நிறைவேற்ற முடியாது. உங்களால் மட்டுமே சாத்தியம்.
உங்களைப் பெற்றெடுத்துப் பாலூட்டி, தாலாட்டி வளர்த்த உங்கள் பெற்றோர்களைக் கண்கலங்காமல் காப்பாற்றுங்கள். எந்தக் காரணம் கொண்டும் அவர்களை, முதியோர் விடுதிக்கு அனுப்பி விடாதீர்கள். இதுதான் நீங்கள், உங்கள் பெற்றோர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்.
இந்த நன்றிக் கடனை ஒவ்வோர் இளைஞரும் செய்யவேண்டும் என்பதே இந்தச் சந்திரசேகரனின் மாபெரும் கனவாகும். இந்தக் கனவை நிறைவேற்றுங்கள். அந்தப் பொறுப்பு உங்களின் கைகளில் தான் உள்ளன.
.
கட்டுரை தொகுப்பு-எம்.வடிவேல், ஜெ.வெங்கடேசன், படங்கள் : முனைவர் க.அருள்