இஷ்டத்துக்கு உயர்த்தப்படும் கட்டணம் – கட்டும் பணத்துக்கு துண்டு சீட்டுக்கூட கிடையாது – எதிர்த்துக் கேட்டால் டிஸ்மிஸ் – காமராஜ் கல்லூரியின் அடாவடி !
இஷ்டத்துக்கு உயர்த்தப்படும் கட்டணம் – கட்டும் பணத்துக்கு துண்டு சீட்டுக்கூட கிடையாது – எதிர்த்துக் கேட்டால் டிஸ்மிஸ் – தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் அடாவடி !
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தின் கட்டண உயர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலரை கல்லூரியை விட்டே நிரந்தரமாக நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியிருக்கும் விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுள் ஒன்று தூத்துக்குடி காமராஜ் கலைக்கல்லூரி. தூத்துக்குடி கல்விச் சங்கத்தின் சார்பில் ஏ.எம்.எம்.எஸ். கணேசன் என்பவரால் இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனமாக 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தற்போது முழுக்க வணிகமயமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள், கல்வியாளர்கள்.
தூத்துக்குடி கல்விச் சங்கம், காரப்பேட்டை பரிபாலன சங்கம், ஏ.எம்.எம். சின்னமணி நாடார் சொசைட்டி, கணேசன் பத்மாவதி டிரஸ்ட் ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பில், தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் பள்ளிகள், மகளிர் கல்லூரி, கலைக்கல்லூரி என பத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட தலைநகரத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.
”அரசுப்பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு ஒரு கல்விகட்டணம். தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஒரு கல்வி கட்டணம். முழுக்க ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஒரு கல்வி கட்டணம் என நிர்ணயித்திருக்கிறார்கள். கல்லூரியில் முதல் ஆண்டு சேரும்போது ஒரு தொகையை சொன்னார்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை ஏற்றிக் கொண்டே செல்கிறார்கள். போன ஆண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு குறைத்தார்கள். இப்போதும் போராட்டம் நடத்தியதால் குறைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். போராட்டம் செஞ்சி காலேஜிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிட்டோம் என்று பழிவாங்குகிறார்கள்.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத மாணவர்களுள் ஒருவர்.
“இந்த பாடத்துக்கு இவ்வளவுதான் ஃபீஸ்னு தெளிவா சொல்றதே கிடையாது. வருசத்துக்கு ஒருமுறை அவர்களே ஏற்றிவிடுவார்கள். ஆயிரம், ரெண்டாயிரம் என்றால் பரவாயில்லை. ஒரேயடியாக ஐந்தாயிரம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். கட்டும் பணத்துக்கும் ரசீது கொடுக்க மாட்டார்கள். மற்ற கல்லூரிகளில் வங்கியில் நேரடியாக பணம் கட்டுவதாக இருக்கும். இங்கே, ஒரு துண்டு சீட்டில் பெயரையும், பாடப்பிரிவையும் எழுதி தருவார்கள். எவ்வளவு கட்ட வேண்டும் என்று வாய்மொழியாக சொல்வார்கள்.
ஆபீஸில் அந்த சீட்டை காட்டி பணத்தை கட்ட வேண்டும். கட்டியதற்கு ஆதாரமாக அதே துண்டுச் சீட்டில் கையெழுத்து போட்டு தருவார்கள். அதை சம்பந்தபட்ட துறையில் காண்பிக்க வேண்டும். இப்படித்தான் நடந்து வருகிறது. நான் எஸ்.எஃப்.ஐ. சங்கத்தில் எல்லாம் இல்லை. ஃபீஸ் அதிகமாச்சுனு போராடுனாங்க. நானும் கலந்துகிட்டேன். போராட்டத்துல கலந்துகிட்டதால உன்னை நீக்குறோம்னு சொல்ல முடியாதுல்ல. அதனால நீ அப்படி, இப்படினு ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி நீக்கியிருக்காங்க.” என்கிறார், மற்றொரு மாணவர்.
கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து போராடி வந்த சமயத்தில், அப்போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்கக்கூடாது என்று கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நேரடி மற்றும் மறைமுகமான மிரட்டல்கள் பலவற்றை கொடுத்திருக்கின்றனர்.
இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், “ஓட்டுப் போடும் வயதை எட்டிவிட்டீர்கள். உங்களது ஓட்டை கவர வேண்டும் என்பதற்காக சிலர் உங்களை திசை திருப்பி விடுகிறார்கள். குறிப்பாக, எஸ்.எஃப்.ஐ. இல் சேர்ந்து விடாதீர்கள்.
நம்ம காலேஜ அசிங்கப்படுத்துறதுக்காகவே, வெளியே இருந்து வர்றாங்க. 25 வருசத்துக்கு முந்தி இந்த காலேஜ எப்படி இருந்தது. சமீபமா ஒரு அஞ்சு ஆறு ஆண்டுகளில் இந்த கல்லூரி எப்படி மாறியிருக்குனு காட்றதுக்குத்தான் இந்த ஸ்லைடு போடுறோம். ஸ்போர்ட்ஸ் சென்டருக்கு ஒரு கோடியே பதினோரு லட்சம் செலவு செய்திருக்கிறோம். மண் காலில் படாத அளவுக்கு பாதை அமைத்திருக்கிறோம்.
இதற்கு 91 இலட்சம். ஆய்வகம் அமைக்க 42 இலட்சம். மின்சாதனங்களை மேம்படுத்தியதற்கு 20 இலட்சம். மொத்தத்துல ரெண்டு கோடியே அறுபத்தாறு இலட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அப்போ, இந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் போய்க்கிட்டு இருக்கோம். அதனால, மாணவர்களை திசை திருப்பி ஏதாவது வன்முறையிலோ, போராட்டத்திலோ இழுக்கிறதுக்கு கூப்பிட்டா, அந்த மாதிரி போராட்டத்துக்கு போகாதீங்க”னு பேராசிரியர் ஒருவர் பாடம் எடுத்திருக்கிறார்.
கட்டண உயர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) நடத்திய போராட்டத்தின் காரணமாகத்தான் மாணவர்கள் பழிவாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், எஸ்.எஃப்.ஐ. மாநில செயலர் கோ.அரவிந்தசாமியிடம் பேசினோம். “தென்மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் அரசுக் கல்லூரிகளே கிடையாது என்பதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். குறிப்பாக, மாவட்ட தலைநகரான தூத்துக்குடியில் ஒரு அரசுக் கல்லூரி கூட கிடையாது.
காமராஜர் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகள் என்றாலும் வருடம் தோறும் 12-ஆம் வகுப்பை நிறைவு செய்து வெளியேறும் மாணவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், அதற்கான இடங்கள் குறைவுதான். வேறுவழியின்றி பலரும் அதே கல்லூரியில் செயல்படும் சுயநிதிப்பிரிவுகளில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கே கூட, இவர்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையை வசூலிப்பதில்லை. தனியார் கல்லூரியைப் போல பத்தாயிரத்துக்கும் மேல்தான் வசூலித்து வருகிறார்கள். சுயநிதிப்பிரிவுகளுக்கும்கூட, வருடந்தோறும் ஏதோ ஆயிரம், ஐநூறு ஏற்றினால் பரவாயில்லை. ஒரேயடியாக இரட்டிப்பாக்கியிருக்கிறார்கள். குறைந்தது ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் உயர்த்தியிருக்கிறார்கள்.
இங்கே படிக்க வருவது பெரும்பாலும் உப்பளத் தொழிலாளிகள், விவசாயக்கூலிகள், தினக்கூலிகள் வீட்டுப் பிள்ளைகள்தான். மிகவும் பின்தங்கிய மாவட்டத்திலிருந்து ஏழ்மையான குடும்பத்திலிருந்து படிக்க வரும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகவே, கணிசமான மாணவர்கள் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் இடைநிற்றல் ஆகியிருக்கின்றனர்.
காமராஜர் கல்லூரியில் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் அணிதிரண்டு போராடினார்கள். எங்களது இந்திய மாணவர் சங்கம் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர் சேர்க்கையெல்லாம் நடத்தவில்லை. மாணவர்களின் போராட்டம் காரணமாக, கட்டண உயர்வு முடிவிலிருந்து கல்லூரி நிர்வாகம் பின்வாங்க நேரிட்டது. இது அவர்களுக்கு அவமானமாகிவிட்டது. இதே நிலை நீடித்தால் மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலை உருவாகிவிடும்.
இனி எந்த மாணவனுக்கும் கட்டண உயர்வுக்கு எதிராக போராடவேண்டும் என்ற சிந்தனையே வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, மாணவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயேதான் மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கியிருக்கிறார்கள்.” என்கிறார், அவர்.
“மாணவர்களின் போராட்டத்தையடுத்து, மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவையும் மீறி 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்கள். அதற்காக, கல்லூரி முதல்வர் பூங்கொடி, துணை முதல்வர்கள் அசோக் மற்றும் அருணாசலராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி கோட்டாட்சியர் விசாரித்திருக்கிறார்கள்.
அதன்பிறகும்கூட, இந்த மூன்று மாணவர்களை மட்டும் கல்லூரிக்குள் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். இந்த மூவரும்தான் மாணவர்களை ஒருங்கிணைத்தார்கள் என்று சந்தேகித்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும், போராட்டத்தைக் காரணமாக சொல்லாமல் வேறு காரணங்களை காட்டியிருக்கிறார்கள். தற்போது பாதிக்கப்பட்ட அந்த மூன்று மாணவர்களும் முதல் தலைமுறை பட்டதாரிகள். அவர்களுள் இருவரின் பெற்றோர்கள் உப்பளத் தொழிலாளர்கள். இருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். மூவருள் ஒரு மாணவர் கல்லூரிக்கு பெருமை தேடி தரும் கபாடி வீரர். கபாடி கோச்சும் கூட.
அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜ் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் கபாடி பயிற்சி அளித்து வருகிறார். இவற்றையெல்லாம், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து முறையிட்டிருக்கிறோம். கோட்டாட்சியர் வழியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். ” என்கிறார், SFI தூத்துக்குடி மாவட்ட செயலர் எம்.கிஷோர்குமார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.
“குற்றச்சாட்டுக்குள்ளான மாணவர்களிடம் விளக்கம் கோருவதாக அல்லாமல், எடுத்த எடுப்பிலேயே “குற்றப்பத்திரிக்கை” என்று கல்லூரி முதல்வர் பெயரில் கடிதம் அனுப்பபட்டிருப்பதே அதிர்ச்சியளிக்கிறது. மேலும், அந்தக் கடிதத்தில் ”உன் மீது”, “உனக்கு”, “நீ நடந்து கொண்டால்” என்பதாக பல இடங்களில் ஒருமையில் விளித்திருப்பதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விசாரணையில் கூட கண்ணியத்துடன் நடத்துவது கல்வியியல் செயல்பாட்டின் ஒரு பகுதி.
கடிதத்தில் கண்ணியக் குறைவாக எழுதுவதும்; ஒருமையில் விளிப்பதும் கல்லூரி நிர்வாகத்தின் ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. கடிதத்தில் இவ்வாறு எழுதும் ஆணவம் மிகுந்த நிர்வாகிகள் நேரில் எவ்வாறு நடந்து கொள்ளவார்கள் என்பதை உணர முடிகிறது. நேரில் வாய்வழியாக பேசும் போது எந்த அளவு இந்த மாணவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதில் அதிர்ச்சி தரும் செய்தி இத்தகைய கடிதத்தை எழுதியுள்ளது கல்லூரியின் முதல்வர்.
அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், கல்லூரிக் கல்வி இயக்கத்தின் மண்டல பொறுப்பாளர்கள் தொடங்கி இயக்குநர் வரை எந்த நிலையிலும் இத்தகைய அராஜகத்தை கண்டிக்கவில்லை என்பதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 21 கண்ணியமிக்க வாழ்வுரிமையை இந்தியர்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் தனது கோரிக்கையை வெளிப்படுத்தும் உரிமையைத் தந்துள்ளது. நியாயமான முறையில் சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் கோரிக்கைகளை தங்களின் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த முற்பட்ட மாணவர்களைப் பழி வாங்குவதும், சிலரைப் பழிவாங்குவதன் மூலம் மற்ற மாணவர்களை மிரட்டி அடி பணிய வைப்பதும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை.
கல்லூரி நிர்வாகத்தின் நியாயமற்ற கல்விக் கட்டண உயர்வை எதிர்த்துப் பேசக்கூடாது என்ற எச்சரிக்கையை மாணவர்களுக்கு விடுக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு மூன்று மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கும் நடவடிக்கைகளை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை உணரச் செய்ய வேண்டிய கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மாணவருக்கு வழங்கி உள்ள உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்குவதை அனுமதிக்கக் கூடாது.
அனைத்து மாணவர்களும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குநர் நேரடியாக தனது மேற்பார்வையில் உரிய விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என வேண்டுகோள் விடுக்கிறார், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய கல்லூரி நிர்வாகத்தை தொடர்புகொள்ள முயன்றும் நமது அழைப்பை அவர்கள் ஏற்று பதில் அளிக்கவில்லை. கல்லூரி முதல்வரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பிய குறுந்தகவலுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
கோட்டாட்சியர் பிரபுவை தொடர்பு கொண்டோம். நிகழ்வு ஒன்றில் இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் சொன்னார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் ரவீந்திரன் ஆகியோரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. வழக்கம் போல வாட்சப்பில் தகவல் குறுந்தகவல் அனுப்பிய நிலையில் அதற்கும் இதுவரை பதிலில்லை. மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவது நல்ல பதிலை தரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
ஏழைப்பிள்ளைகளின் வயிற்றுப் பசியால் பள்ளி வருகை தடைபட்டுக்கிடந்த சூழலில், மதிய உணவு திட்டத்தை தந்து, தமிழகம் தோறும் அரசுப் பள்ளிகள் பல தோற்றுவித்த ”கல்விக்கண் திறந்த” காமராஜர் பெயரில் இயங்கும் கல்லூரி; எம்.எல்.எம். கம்பெனிகாரன் கூட்டம் நடத்துவதைப் போல ”வளர்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது” என்று ‘படம்’ காட்டியிருப்பதும்; கட்டண உயர்வை தட்டிக் கேட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதும் பேரதிர்ச்சி மட்டுமல்ல; பேரவலமும் கூட !
– ஆதிரன்.