பொதுத்தேர்வில் ஒரே கையெழுத்தில் இரண்டு விடைத்தாள்கள் ! பெற்றோர்கள் – ஆசிரியர்கள் அதிரடியாக கைது !
பொதுத்தேர்வில் ஒரே கையெழுத்தில் இரண்டு விடைத்தாள்கள் ! மோசடியில் ஈடுபட்ட பெற்றோர்கள் – ஆசிரியர்கள் அதிரடி கைது ! கடந்த 2023 டிசம்பர் 1-15 அங்குசம் இதழில், “மதுரைக்கு வந்த சோதனை” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றில், “10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்; மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சென்றிருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தோம்.
வீடியோ லிங்
இந்த விவகாரத்தில், தொடர்புடைய கல்வித் துறை அலுவலர்களை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கும் விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 2013 இல் நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வின் வினாத் தாள்கள் ஏப்ரலில் திருத்தப்பட்டது.
அப்போது, மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிய இரண்டு மாணவர்களின் விடைத்தாளின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஏற்கனவே இவர்கள் எழுதிய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தபோது ஒரே மாதிரியாக மதிப்பெண்களும் ஒரே மாதிரியாக கையெழுத்துக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை நடத்திய விசாரணையில் மதுரையில் நடந்த விடைத்தாள் திருத்தும் முகாமில் இந்த குளறுபடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை எதிர்த்து, சம்பந்தப்பட்ட மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில், இம்மோசடி தொடர்பான வழக்கை முதலில் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாது ரமேஷ், எஸ்.எஸ்.ஐ. முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படிசிபிசிஐடிக்கு மாற்றபட்டது.
இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர்கள் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் சரவணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அய்யம்மாள் ஜோதி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
அதன்படி, தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களாக சி.இ.ஓ. அலுவலகத்தில் நடத்திய தீவிர விசாரணையில், கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், லேப் அசிஸ்டன்ட் கண்ணன், கார்த்திக் ஆகியோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வுக்குட்படுத்தி குற்றச்சாட்டை உறுதிபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட நபர்களோடு, மாணவர்களின் பெற்றோர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே இதுபோன்ற மோசடி அரங்கேறி வருவதாகவும்; மேலிருந்து கீழ் வரையில் பலரும் இதில் சம்பந்தபட்டிருப்பதாகவும்; இதற்காக இலட்சங்களில் வசூலித்திருப்பதாவும் கல்வித்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை சிபிசிஐடி போலீசாரின் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால், இந்த மோசடியில் தொடர்புடைய சி.இ.ஓ. மற்றும் டி.ஓ. அலுவலக ஊழியர்கள் பதட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஷாகுல் படங்கள் ஆனந்தன்