மணல் அள்ளும் உரிமையை பெறத்துடிக்கும் எஸ்.ஆர். குரூப் ?
மணல் அள்ளும் உரிமையை பெறத்துடிக்கிறதா எஸ்.ஆர். குரூப்?
ஆற்றுமணல் அள்ளும் உரிம விவகாரங்கள் ஆளும் தலைமைக்கே தெரியாமல் மறைக்கப்படுகிறதா?
தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ளும் உரிமை இதுவரை எஸ்.ஆர். குழுமத்திடமிருந்து கைமாறப் போவதாக செய்தி ஒன்றை அங்குசம் இணையத்தில் வெளியிட்டிருந்தோம்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை மற்றும் எஸ்.ஆர். குழுமத்தின் வரைமுறையற்ற விதிமீறல்கள் மற்றும் அதன் ஏகபோக ஆதிக்கம் உள்ளிட்டு ஆளும் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியதையடுத்தே, அதே போல் கடந்த எம்.பி. தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வைட்டமின் பா சப்ளே செய்ததையும், கடைசி நேரத்தில் கண்டுபிடித்த தடுத்து நிறுத்தியதாலும், மீண்டும் அவர்களுக்கு மணல் அள்ளும் உரிமை கொடுத்தால் 2026ம் தேர்தலில் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும் என்பதை உணர்ந்த ஆளும்கட்சி தலைமை இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அதில் தெளிவுபடுத்தியிருந்தோம்.
மிக முக்கியமாக, நாமக்கல் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டு தமிழகத்தில் லாரியை வைத்து சரக்கு சேவையை வழங்கிவரும் தொழிலை நம்பி வாழும் பலரது குடும்பம் பலன்பெறும் என்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில்தான், தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முக்கியமான கோரிக்கை ஒன்றை தமிழக அரசிடம் முன்வைத்திருக்கிறார்கள்.
வீடியோ லிங்
தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்; அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்திருக்கிறார்கள்.சமீபத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் வழியே இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக மணல் குவாரிகளை மூடியிருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கட்டுமானத்திற்கு சவுடு மண்ணிற்கு கூடுதல் தேவை இருப்பதால் சவுடு மண் குவாரிகளையும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். மூடிக்கிடக்கும் மணல் குவாரிகள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு-8 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டத்தையும்; அதனைத்தொடர்ந்து ஆகஸ்டு-9 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், எஸ்.ஆர். குழுமத்திற்கு எதிரான மனநிலை ஆளும் தரப்பில் உண்டாகிவிட்டதை உணர்ந்திருக்கும் எஸ்.ஆர். குழுமம், தங்களது சொல்படி நடக்கும் வேறு ஒரு நபரை பினாமியாக வைத்து எப்படியாவது மீண்டும் உரிமத்தை வாங்கிவிட வேண்டுமென முயற்சிக்கிறார்கள் என்பதாக ஒரு தகவல்.
குறிப்பாக, ஆளும் தரப்புக்கு மிக வேண்டப்பட்ட மிக முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு நம்பகமான நபரை வைத்து இந்த காய் நகர்த்தலில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல். லாரி உரிமையாளர்கள் தரப்பில் எதிர்பார்ப்பது, தமிழகத்தில் எந்த தடங்களும் இன்றி மணல் அள்ளும் பணி நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறார்களாம். எஸ்.ஆர். குழுமத்தின் கடந்த கால நடவடிக்கைகளிலிருந்து சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
கொள்ளை இலாபத்தை எதிர்பார்க்காத காண்டிராக்டராக இருக்க வேண்டும். அவர்களே சொந்தமாக லாரி, சொந்தமாக மணல் அள்ளும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு அதில் மற்றவர்களை அனுமதிக்காத ஏகபோகமாக இருக்கக்கூடாது.
விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகாமல் ஓரளவு நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதாக அவர்களின் எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, இருந்த குத்தகைதாரர்கள் ஒரே குழுவாக எஸ்.ஆர். தலைமையில் இருந்ததால், அவரவர்களும் தங்களால் முடிந்ததை அள்ளிவிடலாம் என்ற மனநிலையில் செயல்பட்டார்கள்.
இதனால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதையோ, திடீரென மணல் குவாரி மூடப்படும் அபாயம் இருப்பதையோ கருத்திற் கொள்ளவில்லை. தற்போதும்கூட, கிராவல் மணல் அள்ளுவதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கிறது. இவையெல்லாம், தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட நபர்களை சரிகட்டி, தங்களது தில்லுமுல்லுகள் தலைமையின் கவனத்திற்கு போகாத அளவுக்கு செய்துவிட்டார்கள்.
இப்போதும், அதுபோலவே தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலே, அதற்கு அடுத்த நிலையிலுள்ள நபர்களை வைத்து எப்படியும் எஸ்.ஆர். குழுமத்தின் ஆதரவான நபர்களை காட்டி மணல் அள்ளும் உரிமையை பெற்றுவிட முயற்சித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
மத்திய மாநில அரசுகளின் குடியிருப்புத் திட்டங்கள் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், மிக முக்கியமாக கட்டிட அனுமதி பெறுவதில் இருந்த தடைகளை நீக்கி ஆன்லைன் வழியாகவே எளிதாக பெறும் வகையில் மாற்றங்களை செய்திருக்கும் சூழலில், கட்டுமானப்பணிகள் சுறுசுறுப்படைந்திருக்கின்றன.
இதற்கு ஏற்ற வகையில் ஆற்றுமணல் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதோடு மட்டுமின்றி, இதுவரை அதில் கோலோச்சியிருந்த ஏகபோகத்தை ஒழித்து, அதன் வழியே பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நல்ல முடிவை ஆளும் தலைமை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் மையமான கோரிக்கையாகவும் அமைந்திருக்கிறது.
இதற்கு இடையில் எஸ்.ஆர். தன்னுடைய மகன் திருமணத்திற்கு சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார். அப்போது அவர் இந்த தொழிலை இப்போதைக்கு நிறுத்திவை. நம்ம ஆட்சிக்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஆலோசனையும் சொல்லி அனுப்பி உள்ளார் என்கிறார்கள் உள்வட்டாராம் அறிந்தவர்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
வீடியோ லிங்