அங்குசம் பார்வையில் ‘மின்மினி’ திரைப்பட திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘மின்மினி’ திரைப்பட திரைவிமர்சனம் – தயாரிப்பு: மனோஜ் பரமஹம்சா & ஆர்.முரளிகிருஷ்ணன். டைரக்ஷன் ஹலிதா ஷமீம். நடிகர்—நடிகைகள் : பிரவீன் கிஷோர், கெளரவ் காளை, எஸ்தர் அனில், நிவேதிதா சதீஷ்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, இசை : கதிஜா ரஹ்மான், எடிட்டிங் : ரேமாண்ட் டெரிக் க்ரஸ்டா, ஆர்ட் டைரக்டர் : குர்மித், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.
ஊட்டி கான்வெண்டில் படிக்கும் பாரி [ கெளரவ் காளை ]க்கு இமயமலைப் பகுதியில் ராயல் என்ஃபீல்ட் பைக் டிராவல் போகவேண்டும் என்பது லட்சியம். அவனுடன் படிக்கும் சபரி [ பிரவீன் கிஷோர் ]க்கு பெரிய ஓவியனாகி மிகப்பெரிய ஆர்ட் கேலரி வைக்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் இருவருமே எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.
பள்ளிப் பேருந்தில் மாணவ—மாணவிகள் போகும் போது எதிர்பாராதவிதமாக பெரும் விபத்து ஏற்பட்டு, பேருந்து தீப்பிடிக்கிறது. மற்ற மாணவ—மாணவிகள், ஆசிரியைகளைக் காப்பாற்றிவிட்டு, பேருந்துக்குள் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் சபரியையும் காப்பாற்றும் பாரி, மூளைச் சாவு அடைகிறான்.
பாரியின் இருதயத்தால் உயிர் பிழைக்கிறாள் பிரவீனா [ எஸ்தர் அனில் ]. தனக்கு உயிர் கொடுத்த பாரியின் லட்சியம் என்ன, கனவு என்ன என தெரிந்து கொள்வதற்காக, பாரி படித்த அதே பள்ளியில் சேர்கிறாள் பிரவீனா. அதே போல் தன்னைக் காப்பாற்றிய நண்பன் பாரியின் ஹிமாலயா பைக் ரைட் லட்சியத்தை நிறைவேற்ற களம் இறங்குகிறான் சபரி. பிரவீனாவும் அதே முயற்சியில் இறங்குகிறார். ஹிமாலயாவில் இருவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.
அதன் பின் நடக்கும் மனதை நெகிழச் செய்யும் மாயஜாலம் தான் இந்த ‘மின்மினி’.
‘பூவரசம் பீபீ’, ’ஏலேய்’, ‘சில்லுக்கருப்பட்டி’ படங்களின் மூலம் தனித்துவமான கவனம் பெற்ற டைரக்டர் ஹலிதா ஷமீமின் அழகான அன்பை மட்டுமே விதைக்கும் கவிதை தான் இந்த ‘மின்மினி’. படத்தின் முதல் பாதியில் வரும் ஊட்டி பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் நீண்டு கொண்டே போவது சற்றே சலிப்பைத் தருகிறது. ஆனால் இந்த சலிப்பையெல்லாம் துடைத்தெரிந்துவிடுகிறது இடைவேளைக்குப் பிந்தைய, ஹிமாலயாவில் பயணக் காட்சிகள்.
நாமெல்லாம் கனவிலும் நினைத்தே பார்க்க முடியாத இமயமலை லடாக் பகுதிளுக்கு நம்மை அழைத்துச் சென்று பிரமிக்க வைத்திருக்கிறார் ஹலிதா ஷமீம். இதற்காகவே ஹலிதாவை மனசார பாராட்டி மகிழ்வோம். ஹலிதாவின் அசாத்திய உழைப்பிற்கும் இந்த மின்மினியின் வெளிச்சத்திற்கும் மாபெரும் உறுதுணையாக இருந்து, படத்தைத் தயாரித்ததுடன் ஒளிப்பதிவாளராகவும் படத்திற்கு பெரும் தூணாக இருப்பது மனோஜ் பரமஹம்சா தான். படத்தின் ஹீரோ இவர் தான் என்று கூட சொல்லலாம்.
சில இடங்களில் நேர்த்தியான சாலை, பல இடங்களில் ஆபத்தான, குண்டும் குழியுமான சாலை, குறுகலான மரப்பாலம், பனி உருகி ஓடும் சிறு சாலைகள், சில இடங்களில் அடர்கருப்பான மலைகள், ஒரிரு இடத்தில் மஞ்சள் வண்ண மலைகள், பாலைவனம் போல் மணல் பகுதிகள், வெந்நீர் ஊற்று, அங்கங்கே இருக்கும் டெண்ட் ரிசார்ட், என மனுஷன் மனோஜ் பரமஹம்சா நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். ஸ்பெஷல் தேங்ஸ் டூ மிஸ்டர் பரமஹம்சா.
அடுத்த ஸ்பெஷல் தேங்ஸ் மியூசிக் டைரக்டர் கதிஜா ரஹ்மானுக்குத்தான். ஊட்டி காட்சிகளுக்கும் இமயமலைக் காட்சிகளுக்குமிடையே கனெக்ட் ஆககூடாது என்பதில் கவனம் செலுத்தி பின்னணி இசையில் பிரமாதப்படுத்திவிட்டார் கதிஹா ரஹ்மான். அதே போல் இமயமலைப்பகுதியில் கற்களை அடுக்கிய சின்னக் குடிசைவீடு, டெண்ட் ரிசார்ட் இவற்றால் ஆச்சரியப்படுத்திவிட்டார் ஆர்ட் டைரக்டர் குர்மித்.
பிரவீன் கிஷோர், கெளரவ் காளை இவர்களைவிட எஸ்தர் அனில் தான் மின்மினியில் டாப் ஸ்கோரர். ஓரிரு காட்சிகள் தான் என்றாலும் நினவிக் நிற்கிறார்கள் சந்தோஷ் பிரதாப்பும் நிவேதிதா சதீஷும்.
உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தையும் பலனையும் எளிய மனிதர்களிடம் இயற்கையாகவே நிரவிக்கிடக்கும் அன்பையும் ஆழமாகப் பதிவு செய்த டைரக்டர் ஹலிதா ஷமீக்கு மீண்டும் ஒரு சபாஷ் போடலாம்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் இந்த ‘மின்மினி’ வெளிச்சம் மிகவும் அவசியமானது.
-மதுரை மாறன்