அங்குசம் பார்வையில் ‘வீராயி மக்கள்’ திரைப்படம் திரை விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘வீராயி மக்கள்’ திரைப்படம் திரை விமர்சனம் – தயாரிப்பு : ‘ஒயிட் ஸ்க்ரீன் ஃபிலிம்ஸ்’ சுரேஷ் நந்தா, டைரக்ஷன் : நாகராஜ் கருப்பையா. நடிகர்—நடிகைகள்: வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா. தொழில்நுட்பக் கலைஞர்கள்—இசை : தீபன் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு; எம்.சீனிவாசன், எடிட்டிங் : முகன்வேல். பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ]
அறந்தாங்கி அருகே தீயத்தூரில் வீராயி மகன்கள் வேலராமமூர்த்தி, மாரிமுத்து, ஜெரால்டு மில்டன். இதில் வேலராமமூர்த்தியின் மனைவி ரமா, மாரிமுத்துவின் மனைவி செந்தில்குமாரி. இளைய மகன் ஜெரால்டு சென்னைக்குச் சென்று அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துவிட்டு, தனது அண்ணன்களுக்கு லெட்டர் மூலம் தகவல் தெரிவிக்கிறார். இதனால் இளைய தம்பியை வெறுத்து ஒதுக்கின்றனர் அண்ணன்கள். ஐந்து பவுன் நகை பாக்கிக்காக வேலராமமூர்த்தியின் தங்கை தீபா சங்கரின் கணவர் விரைப்புடன் இருக்கிறார்.
இந்த நிலையில் அறந்தாங்கி பகுதி முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டு, விவசாய பூமி காய்கிறது.
இதனால் தனது தாய் வீராயியை தனது தம்பி மாரிமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு, தனது மனைவியுடன் திருப்பூருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்கிறார் வேலராமமூர்த்தி. இங்கே தீயத்த்தூரில் மருமகள் செந்தில்குமாரிக்கும் மாமியார் வீராயிக்கும் இடையே ஓயாத சண்டை, அக்கப்போர். மனைவிக்கு சப்போர்ட்டாக தாயை வீட்டைவிட்டு விரட்டுகிறார் மாரிமுத்து.
இதைக் கேள்விப்பட்டு ஊருக்கு வருகிறார் வேலராமமூர்த்தி. ஊர்ப் பஞ்சாயத்து கூடுகிறது. சொத்தைப் பிரிக்கச் சொல்லி மல்லுக்கு நிற்கிறார் செந்தில்குமாரி. பெத்த தாய்க்கு ஒரு வாய் சோறு கூட போடாத தம்பியின் குடும்பத்தையும் தங்கச்சியையும் வெறுத்து ஒதுக்கிறார் வேலராமமூர்த்தி. விரிசலாகிப் போன உடன் பிறப்பு என்ற உறவுகள் ஒட்டியதா? என்பதை அச்சு அசல் மண் மனம் மாறாமல் சொல்வது தான் இந்த ‘வீராயி மக்கள்’.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் சாயல் இருந்தாலும் இந்த வீராயி மக்களின் வாழ்வியலும் பாசப்போராட்டமும் ஆண்களையே தேம்பித்தேம்பி அழ வைக்கிறது என்பது தான் நிஜம்.
வீராயி மக்களில் ஆலமரமாக நிற்பவர் வேலராமமூர்த்தி என்றால், அதில் திண்மையான விழுதுகளாக சுரேஷ் நந்தா இருக்கிறார். தனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவருக்கு ஒரு மகள் [ நந்தனா ] இருக்கிறார் என்பது தெரிந்த பிறகு பிரிந்து சிதறிய உறவுகளை ஒட்ட வைக்கும் நல்ல காரியத்தில் இறங்குகிறார் சுரேஷ் நந்தா.
தயாரிப்பாளரும் நானே, ஹீரோவும் நானே அதனால் ஜீன்ஸ் பேண்ட், கலர் கலரா டீ ஷர்ட் போட்டு கிராமத்துல சுத்துவேன். ஏன்னா இதெல்லாம் சினிமாதானேன்னு வீராப்பு காட்டாமல், சாதாரண கைலி, சட்டை, கலர் வேட்டிகளில் வந்து கவனம் ஈர்க்கிறார் சுரேஷ் நந்தா. நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்கிவிட்டார்.
ஹீரோயின் நந்தனா ஒரு சாயலில் லட்சுமி மேனன் மாதிரி லட்சணமாக இருந்தாலும் இம்புட்டுக்காணு பொண்ணாகத் தெரிகிறார். இருந்தாலும் டபுள் ஓகே தான்.
மாரிமுத்துவைப் பற்றியும் அவரின் நடிப்பைப் பற்றியும் சொல்லவே வேண்டாம். கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மனுசன் சிக்சர் அடிச்சிருக்காரு. ஆனா என்ன ஒண்ணு ஃப்ளாஷ்பேக்ல மாரிமுத்துவுக்கு எதுக்கு விக் வைச்சீக டைரக்டரே?
“அண்ணே அஞ்சு பவுன் நகைக்காக அந்த சண்டாளப்பய பண்ண வேலைண்ணே. இப்ப நீ சொல்லுண்ணே.. அவனை வெட்டிட்டு தாலிய அறுத்தெரிஞ்சுட்டு வர்றேன்” இந்த சீனில் தீபா சங்கர் டாப் டக்கர். செந்தில்குமாரியையும் சும்மா சொல்லக் கூடாது. அவரு வாயைத் திறந்தாலே தியேட்டருக்கு வெளியே கூட சவுண்ட் கிழியுது.
இசைஞானியின் சாயலில் தீபன் சக்கரவர்த்தியின் பாடலும் பின்னணி இசையும் வீராயி மக்களின் கோபம், பகை, பாசம் இவற்றை நமக்குள் எளிதாக கடத்துகிறது.
காட்சிகளை நீட்டிக் கொண்டே போய் க்ளைமாக்ஸை நெருங்கியிருப்பது தான் வீராயி மக்களின் வீக்னெஸ் என்றாலும் , “அண்ணன் –தம்பியா பொறந்தோம், அண்ணன் –தம்பியாவே வாழ்ந்துட்டுப் போவோம்டா. இருக்கிறது ஒரு பொறப்பு தாண்டா. இது ஊர் இல்லடா, நம்மளோட வேர்” இதைச் சொன்னதற்காகவே டைரக்டர் நாகராஜ் கருப்பையா.. நம்ம ஆளுய்யா…
-மதுரை மாறன்