அங்குசம் பார்வையில் ‘சாலா’- திரைப்படம் திரைவிமர்சனம் –
அங்குசம் பார்வையில் ‘சாலா’- திரைப்படம் திரைவிமர்சனம் – தயாரிப்பு : ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ டி.ஜி.விஸ்வபிரசாத், இணைத் தயாரிப்பு : விவேக் குச்சிபோல்டா, டைரக்ஷன் : எஸ்.டி.மணிபால். நடிகர்—நடிகைகள் : தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், சம்பத்ராம். ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு, இசை : தீசன், எடிட்டிங் : புவன், ஆர்ட் டைரக்டர் : வைரபாலன், ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ, ‘ரக்கர்’ ராம். பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
‘இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிருச்சு, டிரைலர் ரிலீசாகிருச்சு’ன்னு அப்பப்ப வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் அனுப்புவார், படத்தின் பி.ஆர்.ஓ.வான அண்ணன் நிகில் முருகன். மத்தபடி படத்தின் புரமோ எதுவும் நடக்காததால, நமக்கும் படத்தைப் பத்தி எதுவும் தெரியாததால, என்னத்த பெருசா இருத்துரப் போகுதுன்ற நினைப்புல தான் படம் பார்க்க ஆரம்பிச்சோம்.
அதுகேத்த மாதிரி தான்.. வடசென்னை ஏரியா, சாராயக் கடை, அப்புறம் டாஸ்மாக் பார் ஏலம் எடுப்பதில் தாதாக்களிடையே தகராறு, வெட்டுக்குத்து, கொலைன்னு படமும் ஆரம்பிச்சது.
ஆனா டீச்சர் புனிதா [ ஹீரோயின் ரேஷ்மா வெங்கடேஷ் ] ஆசிரியைகளுடனும் பள்ளிக் குழந்தைகளுடனும் டாஸ்மாக்கிற்கு எதிராகவும் குடிக்கு எதிராவும் போராட ஆரம்பித்த பின் நம்மையும் அறியாமல் படத்தின் மீது ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
இடையிடையே வடசென்னை ராயபுரம் ஏரியாக்களின் தாதாக்கள் தங்கதுரை [ சார்லஸ் வினோத்] ஜி.பி.குணா [ அருள் தாஸ் ] ஆகியோருக்கிடையிலான பழி வெறியையையும் திரைக்கதையில் மிக்ஸ் பண்ணி ‘சாலா’வுக்கு சலாம் போட வைத்துவிட்டார் டைரக்டர் எஸ்.டி.மணிபால்.
அருள்தாஸின் வலதுகரம் சாலாவாக ஹீரோ தீரன். ஆள் பார்க்க ஓங்குதாங்கா இருக்கார், சண்டைக்காட்சிகளில் அனாயசமாக அனல் பறத்துகிறார். ஆனால் நடிப்பு தான்.. வர்றதுக்கு கொஞ்சம் சிரமப்பட்டிருக்கு.
அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் ஆசிரியையாக ஹீரோயின் ரேஷ்மா, ஒரு சாயலில் ‘வாத்தி’ பட சம்யுக்தா மேனன் போல இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
குடிக்கு அடிமையானவர்களைப் பற்றியும் குடியால் ஏற்படும் கேடுகளைப் பற்றியும் க்ளைமாக்சில் புள்ளி விபரங்களுடன் ரேஷ்மா பேசும் காட்சி, அனைவரின் மனதையும் உலுக்கிவிடும்.
அதே போல் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை, தனது அப்பாவின் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லி ஒரு பள்ளிச் சிறுமி பேசும் அந்தக் காட்சி, கல்நெஞ்சையும் கரையை வைத்துவிடும், டூவீலர் ஓட்டும் எல்லோரையும் ஹெல்மெட் அணிய வைத்துவிடும்.
அருள்தாஸும் சரி, சார்லஸ் வினோத்தும் சரி தாதாக்கள் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும் இசையும் சாலாவுக்கு நல்ல சப்போர்ட்.
நெஞ்சை பதற வைக்கும் க்ளைமாக்ஸ் மரணங்கள் உட்பட, இந்தப் படத்தில் நிகழும் மரணங்கள் எல்லாமே கேடுகெட்ட குடியால் வருவது தான் என்பதை காரண காரியத்துடன் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
தாதாக்கள் மோதல் என்ற லைட்டான மசாலாவைத் தடவி, சமூக அக்கறையுடன் வெயிட்டான ‘சாலா’வைத் தந்த டைரக்டர் மணிபாலுக்கு சபாஷ்.
-மதுரை மாறன்