எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசுக்கே “தண்ணி காட்டி வந்த” தென்காசி ஏஜெண்ட் அதிரடி கைது !
எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசுக்கே “தண்ணி காட்டி வந்த” தென்காசி ஏஜெண்ட் அதிரடி கைது ! தமிழகத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்து வரும் குறிப்பிடத்தக்க மோசடி வழக்குகளுள் ஒன்றான எல்ஃப்பின் மோசடி வழக்கில், நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுள் ஒருவரான தென்காசியைச் சேர்ந்த சுப்பிரமணி (எ) மணியை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை பரப்பி இயங்கி வந்த ELFIN E.Com Pvt Ltd என்ற நிறுவனம்; பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தரவில்லை என்ற புகாரில் சிக்கியது.
இடத்திற்கும் ஏமாறக் காத்திருக்கும் ஆளுக்குத் தகுந்தாற்போல, விலையுயர்ந்த பொருட்களை விற்பணை செய்வதாகவும்; பணத்துக்கு நிலம் தருவதாகவும்; பத்தே மாதத்தில் போட்ட பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறி மோசடியான முறையில் பல கோடிகளை வாரிச் சுருட்டியிருந்தது மேற்படி கம்பெனி.
கடந்த 2022 ஆம் ஆண்டு அம்பலமான இந்த மோசடி வழக்கு தற்போது, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு – சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையில் இருந்து வருகிறது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலில், இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் விசாரித்து வருகிறார்.
அவரது அதிரடி நடவடிக்கைகளால், இதுவரை எல்ஃபின் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர் தொடங்கி 18 பேருக்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தற்போது தென்காசி மாவட்டத்தின் முக்கிய ஏஜெண்டாக இருந்து வந்த சுப்பிரமணி (எ) v.S.மணியை கைது செய்திருக்கிறார்கள்.
கவர்ச்சிகரமான திட்டங்களுக்கும் அதிக வட்டிக்கும் ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்து ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
– அங்குசம் செய்திப் பிரிவு.