அங்குசம் பார்வையில் ‘வாழை’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘வாழை’
தயாரிப்பு : டிஸ்னி +ஹாட் ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ். திவ்யா மாரி செல்வராஜ் & மாரி செல்வராஜ். தமிழ்நாடு ரிலீஸ் : ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்ஷன் : மாரி செல்வராஜ். நடிகர்—நடிகைகள் : பொன்வேல், ராகுல் [ அறிமுகம் ] கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, பத்மன், ஜே.சதீஷ்குமார். ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், இசை : சந்தோஷ் நாராயணன், ஆர்ட் டைரக்டர் : குமார் கங்கப்பன், எட்டிட்டிங் : சூர்யா பிரதமன், நடனம் : சாண்டி, காஸ்ட்யூம் : டி.ரவி, ஒலிப்பதிவு : சுரேன் ஜி. & அழகிய கூத்தன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : வெங்கட் ஆறுமுகம். பி.ஆர்.ஓ.: சதீஷ் [ எய்ம் ]
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் [ மாரி செல்வராஜ் பிறந்து வளர்ந்த ஊர் ] வாழை அறுவடையின் போது, வாழைத்தார் சுமந்து கிடைக்கும் கூலியில் வாழ்க்கையை நரக வேதனையுடன் நகர்த்துகிறார்கள் அவ்வூர் மக்கள். சிவப்புக் கொடியை கையில் ஏந்தி போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட கம்யூனிஸ்ட்டான தனது கணவனின் திடீர் மறைவால் தனது மகள் வேம்பு [ திவ்யா துரைசாமி ] ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் சிவனனைந்தானுடன்[ பொன்வேல் ] அல்லாடுகிறார் ஜானகி.
பள்ளி விடுமுறை நாட்களில் தாயுடனும் அக்காவுடனும் காய் சுமக்கச் செல்கிறான் சிவனனைந்தான். இவனின் தோழன் சேகர் [ராகுல் ] உட்பட அக்கிராமத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களும் காய் சுமக்கும் வேலைக்குச் சென்று சொற்பக் கூலியை வாங்கி குடும்பத்திற்கு உதவியாக இருக்கின்றன்றனர்.
சிவனணைந்தான் ரஜினி ரசிகன், சேகர் கமல் ரசிகன். சிவனணைந்தானுக்கு தனது வகுப்பு ஆசிரியை பூங்கொடி மீது இனம் புரியாத காதல். கீழே விழுந்த பூங்கொடியின் கர்சீப்பை எடுத்து திருட்டுத்தனமாக மோந்து பார்க்கும் அளவுக்கு ஒருவித கிறக்கம். இந்த எபிசோடை கொஞ்சமும் விரசமில்லாமல் காட்டியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
தலையில் சுமக்கும் வாழைத்தாருக்கு ஒரு ரூபாய் கூலியை உயர்த்திக் கேட்கிறார்கள் தொழிலாளர்கள். முதலில் மறுக்கும் வியாபாரி,
[ ஜே.சதீஷ்குமார் ] வேறு வழியில்லாமல் சம்மதித்துவிட்டு, தொழிலாளர்களை வேறு விதத்தில் வஞ்சிக்கிறார். இந்த வஞ்சத்தின் கொடூர முடிவு தான் ‘வாழை’யின் க்ளைமாக்ஸ்.
படத்தின் ஹீரோக்கள் என்றால் அது பொன்வேலும் ராகுலும் தான். கேமரா பயமோ, நடிப்பு பதட்டமோ இல்லாமல் வெகு அனாயசமாக நடித்திருக்கிறார்கள் அந்தச் சிறுவர்கள். அதனால் தான் டைட்டில் கார்டில் இவர்களின் பெயரை முதலில் போட்டு பெருமைப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் மாரி செல்வராஜ்.
வாழைத் தோட்டத் தொழிலாளி கனியாக கலையரசன், வேம்புவாக திவ்யா துரைசாமி, இவர்களுக்கிடையே லைட்டாக ஒரு லவ் எபிசோட் இதெல்லாம் கவிதை ரசனை. ஆசிரியை பூங்கொடியாக நிகிலா விமல், கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்றார் போல அன்றலர்ந்த மலர் போல ரொம்பவே அழகாக இருக்கிறார், நடிப்பிலும் நிறைவாக தெரிகிறார்.
“என்னலே பண்ணச் சொல்லுத, சிகப்புக் கொடியை கையில பிடிச்சுக்கிட்டு சுத்தியே செத்து ஆத்தோட போய்ட்டான் உங்கப்பன்”. “நம்ம கிட்ட இந்த மாடும் பசி பட்டினியோட கிடந்து சாகுறதவிட இன்னொருத்தண்ட போய் நல்லா சாப்பிடட்டும்” தாய் ஜானகியின் இந்த வேதனைக்குரல், ஏழைகளின் அவலத்திற்கு சாட்சி.
கேமராமேன் தேனி ஈஸ்வரும் சரி, மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனும் சரி, வாழைக்கு நல்ல உரமாக இருக்கிறார்கள். அனேக காட்சிகளில் பின்னணி இசையிலும் பாடல்களிலும் குறிப்பாக க்ளைமாக்சில் வரும் எழவுப்பாடலில் உருக்கிவிட்டார் சந்தோஷ் நாராயணன்.
“ஏழைகளிடம் மீசையை முறுக்குறதும், கீழ இருக்குறவண்ட வரலாறு பேசுறதும் வீரம் இல்லடே”, நாங்கெல்லாம் கமல் ரசிகர், முள்ளு குத்தாமலேயே நடிப்போம், ரஜினி படம் ஓடுது, கமல் படம் ஓட மாட்டேங்குது” –இது மாரி செல்வராஜின் பிராண்ட் வசனத்திற்கு சின்ன சாம்பிள்.
இதுவரையிலான தனது மூன்று சினிமாக்களில் சாதிய ஒடுக்குமுறைகளை அழுத்தமாகப் பேசிய டைரக்டர் மாரி செல்வராஜ், இந்த வாழையில் அதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, ஏழைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்து வெகுஜன மக்களுக்கான சினிமாவைப் படைத்துள்ளார். ‘வாழை’ ஏழைகளின் வலி.
–மதுரை மாறன்