இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் – ‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.
இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை.
‘வீர சந்திரஹாசா’ கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளித் திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார்.
இந்தப்படம் அந்த லட்சியத்தின் பலனை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல… ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என்றும் சொல்லலாம்.
யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல… கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது.