திருச்சி படைப்பாளர்களை கௌரவித்த சிரா இலக்கிய கழகத்தினர் !
”தமிழக வரலாற்றில் பெண்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற புத்தகக்காட்சி திருவிழாவில், திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட படைப்பாளிகள் – ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களது இலக்கியப் பணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் படைப்பாளர்களை கௌரவித்திருந்தார்கள்.
புத்தகத்திருவிழாவில் விருது பெற்ற ஆளுமைகளை பாராட்டும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார்கள் சிரா இலக்கிய கழகத்தினர். அக்-08 அன்று திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிரா இலக்கிய கழகத்தின் சார்பில் பதிப்பித்து புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல்கள் திறனாய்வு செய்யப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து மாணவி தமோச்சனாவின் வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது. எழுத்தாளர் ஜனனி அந்தோணி ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிரா இலக்கிய கழகத்தின் துணைத் தலைவர் இலக்கியப் பேரொளி கேத்தரின் ஆரோக்கியசாமி தலைமை வகிக்க, முன்னிலை வகித்த ராயல் லயன்ஸ் சங்கம் சாசன தலைவர் முகமது ஷஃபி விருது பெற்ற ஆளுமகளை பாராட்டி சுருக்கென்று உரையாற்றினார். தொடர்ந்து, உரத்த சிந்தனை பேரவையின் செயலாளர் அப்துல் சலாம் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
திருச்சி புத்தகத் திருவிழாவில் சிறா இலக்கிய கழகத்தின் பதிப்பாக வெளியான இளம் பெண் படைப்பாளர் கவிஞர் இரா தங்க பிராகாசியின் ”எங்கும் சுதந்திரம் வேண்டும்” கவிதை நூலை கவிஞர் பாட்டாளி திறனாய்வு உரை நிகழ்த்தினார். அவரது கவிதை நூலிலிருந்து சிறந்த கவிதைகளை சுட்டிக்காட்டி, உணவாகவும் மருந்தாகவும் கொடுப்பதே கவிதை என்றவர், பெண்கள் ரௌத்திரம் பழக வேண்டும் என்ற கருத்தை பதிய வைத்தார் கவிஞர் பாட்டாளி.
இதனைத தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவி கவிஞர் இவான் கேத்தரின் ஏஞ்சலினா எழுதிய “ தேவையின் தேடல்கள்” கவிதை தொகுப்பை, மாணவியின் ஆசிரியரும் கவிஞருமான கவிஞர் செசிலி அந்நூலை திறனாய்வு செய்தார். ”எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியா இப்படி எழுதுகிறது?” என்ற ஆச்சர்ய வினா எழுப்பியவர், ”சமூகத்தின் எதிர்பார்ப்புகள் ,மனிதர்களிடம் இருக்கும் செயல்பாடுகள் ,வாழ்க்கையில் தேவையான ஊக்கங்கள் ,தந்தை தாயின் அன்புகள் ஆகியவற்றை அழகாக கடத்துகிறது, “தேவையின் தேடல்கள்” கவிதைத் தொகுப்பு என்றார்.
”திருவள்ளுவர் ஒரே ஒரு நூலைத்தான வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இன்று வரையும் திருக்குறளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், எத்தனை படைப்புகள் படைத்தாலும் படித்தாலும் மனிதாபிமானத்தோடு நடப்பவர்களே அறிஞர்.. மனித நேயம் முக்கியம், சமூக அக்கறையோடு எழுத வேண்டும்” என்றார், தமிழ் சங்கத்தின் துணை அமைச்சர் செலாதிபதி.
சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக அலுவலர் அ. பொ சிவகுமார், தனது உரையில் திருச்சி புத்தகத் திருவிழாவின் பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும், கவிஞர் நந்தலாலாவின் எழுத்துக்களை சிலாகித்து பேசினார். அவரைப் போன்ற ஆளுமைகள் ஒரே அரங்கில் இணைந்திருப்பதை கண்டு மகிழ்வதாய் சொன்னார். படிக்கும் வயதிலேயே நூல் வெளியிட்டிருந்த அந்த மாணவியையும் அவர் பாராட்டத் தவறவில்லை.
நிறைவாக, கவிஞர் நந்தலாலா திருச்சி புத்தக திருவிழாவை சிறந்த முறையில் நடத்தி கொடுப்பதற்கு ஆதரவாக இருந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். விருதுபெற்ற ஆளுமைகளின் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்தினார். இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் மலபாடி ராஜாராமனும் பங்கேற்று படைப்பாளிகளை வாழ்த்தினார்.
தமிழ் சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வாழ்த்துரைக்க, ஆளுமைகள் ஒவ்வொருவராக நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பூ மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு, பார்வையாளர்களை பூரிப்பில் ஆழ்த்தியது.
இனிய இந்நிகழ்வை, சிரா இலக்கிய கழகத்தின் தலைவர் முனைவர் தமிழ் மாமனி பா ஸ்ரீராம் தொகுத்து வழங்கினார். நிறைவாக, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் ப.விஜயகுமார் நன்றி உரையாற்ற நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
– மு.வசீர் அகமத், சஞ்சய்.