அரசியல் களத்தில் திரை நட்சத்திரங்கள் – ”விஜய்” தவெக தாக்குபிடிக்குமா? – ஓர் அலசல்
அரசியல் களத்திற்கும் திரை என்னும் சினிமா துறைக்கும் தமிழ்நாட்டில் நெருக்கம் அதிகமாகவே உள்ளது. அண்ணா, கலைஞர், எம்.ஆர்.இராதா, எஸ்.எஸ்இராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எஸ்.எஸ்.சந்திரன், பாக்யராஜ். டி.இராஜேந்தர், மன்சூர் அலிகான் போன்ற பலர் அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். திருநாவுக்கரசு, தொல்.திருமாவளவன் போன்றோர் அரசியல் களத்திலிருந்து திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார்கள்.
தற்போது திரைத் துறையிலிருந்து அரசியல் களத்திற்கு வருகிறார் நடிகர் விஜய். அவர் அரசியல் களத்தில் தாக்குப்பிடிப்பாரா? என்ற பரபரப்பான கேள்விகள் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் நாள் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
அதில் விஜய் ஆற்றும் உரை, அவர் செல்லப்போகுத் திசையைச் சொல்லும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் தொடங்கிய இந்தப் புதுக்கட்சி ஆட்சியைப் பிடிக்குமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அரசியல் களத்தில் விஜய் தாக்குப்பிடிப்பாரா? என்பதை இந்தக் கட்டுரை அலசுகின்றது.
நடிகர்களும் அரசியலும்
எஸ்.எஸ்.இராஜேந்திரன்
தமிழ்நாட்டு அரசியலில் திமுகவில் உறுப்பினராக இருந்த இலட்சிய நடிகர் என்று வருணிக்கப்பட்ட எஸ்.எஸ்.இராசேந்திரன் 1962ஆம் ஆண்டு தேனி சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்திய வரலாற்றில் ஒரு நடிகர் சட்டமன்ற உறுப்பினர் ஆனது என்ற வரலாறு எஸ்.எஸ்.இராசேந்திரனுக்கு உண்டு. அதுபோலவே 1970 முதல் 1976ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மேலவை என்றழைக்கப்படுகின்ற மாநிலங்களவையில் எஸ்.எஸ்.இராஜேந்திரன் உறுப்பினராக இருந்தார்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு நடிகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கு மட்டுமே உண்டு. பின்னர் அதிமுகவில் இணைந்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் 1980இல் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1984 சட்டமன்றத்துக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் பிளவுபட்ட அதிமுகவில் ஜெயலலிதா அணியில் 1989ஆம் ஆண்டு பெரியகுளத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார். தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சினிமா நடிகர் அரசியல் இயக்கம் தொடங்கிய வரலாறும், பெருமையும் எஸ்.எஸ்.இராஜேந்திரனையே சாரும்.
எம்.ஜி.ஆர். – வி.என்.ஜானகி – ஜெயலலிதா
திமுகழகத்திலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடிகால நிலையில் மாநிலக் கட்சியாக இருப்பதைவிட அகில இந்திய கட்சியாக இருப்பது நல்லது என்று பயந்து கொண்டு எம்.ஜி.ஆர். கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திமுக என்று மாற்றினார். என்றாலும் தற்போது வரை அதிமுக என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
1972இல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ஆளும் திமுகவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது. பின்னர் 1977 முதல் 1987ஆம் ஆண்டு வரை 3 முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தார் என்பது தமிழ்நாட்டின் வரலாறு. அவர் மறைவுக்குப்பின் அவரோடு திரைப்படங்களில் நடித்த நடிகையாக இருந்த வி.என்.ஜானகி தமிழ்நாட்டின் மிகக்குறுகிய காலம் முதல் அமைச்சராக இருந்தார்.
பின்னர் நடிகையாகவும் அதிமுகவில் உறுப்பினராக இருந்த ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக 1991, 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டார். இதில் வி.என்.ஜானகியும், ஜெயலலிதாவும் திரைத்துறையோடு தொடர்பு இருந்தாலும் புதிய கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
சிவாஜி கணேசன்
திரையுலகை ஆட்டிப்படைத்த இருபெரும் ஆளுமைகளில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவாஜி என்னும் விசி கணேசன். 1957இல் திமுகவில் சிவாஜி இருந்தார். அப்போது தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. புயல்நிதி திரட்டி தர கட்சியினருக்கு அண்ணா வேண்டுகோள் விடுத்தார். சிவாஜியும் எம்.ஜி.ஆரும் போட்டிப்போட்டுக் கொண்டு நிதி திரட்டினர். சிவாஜி அதிக நிதி திரட்டியும் பாராட்டும் புகழும் எம்.ஜி.ஆருக்கே கிடைத்தது.
பின்னர் சிவாஜி திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டார் என்று சிவாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிவாஜி 1962 தேர்தலில் சினிமா நடிகை பத்மினியோடு இணைந்து திமுகவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். நடிப்பில் கவனம் செலுத்திய சிவாஜி, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பிளவுபட்ட அதிமுகவின் ஜானகி அணியோடு கூட்டு சேர்ந்து சிவாஜியின் தமுமுக போட்டியிட்டது. தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் தமுமுக சார்பில் போட்டியிட்ட சிவாஜி 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஜானகி அணியும் தோல்வி அடைந்தது. பின்னர் சிவாஜியின் அரசியல் பயணம் சொந்த காசில் சூனியம் வைத்துகொண்ட கதையாக மாறியது. தமுமுகவைக் கலைத்து, அரசியலிருந்து ஒதுங்கியிருந்து சிவாஜி இயற்கை எய்தினார் என்பதும் தமிழ்நாட்டு அரசியல் கள வரலாறு.
கே.பாக்கியராஜ்
திரைப்பட கதை ஆசிரியர், வசனம் எழுதியவர், நடிகர் என்று புகழ் பெற்ற கே.பாக்கியராஜ், எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த காலத்தில், தன் கலை உலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். திரைப்படத்துறையில் பெண்களின் மகத்தான ஆதரவைப் பெற்றிருந்த பாக்கியராஜ் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் என்றும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
இவர் கட்சி தேர்தலில் போட்டியிட்டதாக செய்தி இல்லை. மாநாடு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என் கட்சியின் சார்பில் நடந்ததாகவும் பதிவுகள் இல்லை. பின்னர் திமுகவில் இணைந்த பாக்கியராஜ் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் ஒதுங்கியுள்ளார்.
டி.இராஜேந்திரன்
திரையுலகின் அஷ்டாவதானி என்று புகழப்பட்ட டி.இராஜேந்திரன் என்னும் இராஜேந்தர் திரைக்கதை வசனம் எழுதி, இயக்கியதாகச் சொல்லப்படும் ஒருதலை ராகம் என்னும் திரைப்படம் 1978ஆம் ஆண்டுகளில்தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம். இதற்குப் பின் பல திரைப்படங்களை இயக்கி டி.இராஜேந்தர் திரைக்கதை, வசனம், பாடல், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று பல்துறை வித்தராக விளங்கினார்.
இவர் 1991ஆம் ஆண்டு தாயக முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். கட்சியின் சார்பில் மாநாடு, ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாமல், பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதுகை மேனையோடு பேசிபேசியே கட்சி இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். டி.ஆர். தன் கட்சியை 1996ஆம் ஆண்டு திமுகவில் இணைத்தார்.
1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். 2001ஆம் ஆண்டில் திமுகவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மீண்டும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு ‘லட்சிய திமுக’ என்று பெயர் சூட்டினார். கட்சி இப்போது இயங்கி வருவதாக எந்தத் தகவலும் இல்லை. அவர் மகன் சிம்பு என்னும் சிலம்பரன்கூட தந்தையின் அரசியல் கட்சியில் இல்லை என்ற தகவலும் உள்ளது.
விஜயகாந்த்
2005ஆம் ஆண்டு புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்’ என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். தன்னுடைய இரசிகர் மன்றத்தையே அரசியலுக்கு மடைமாற்றம் செய்தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் கட்சி 234 தொகுதியிலும் போட்டியிட்டது. என்றாலும் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு அதிமுகவோடு கூட்டணி வைத்து 29 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று, திமுகவைப் பின்னுக்குத் தள்ளி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். விஜயகாந்த் – ஜெயலலிதா கருத்து மோதலில், விஜயகாந்த் கட்சியை ஜெயலலிதா பிளவுபடுத்தினார். விஜயகாந்த் கட்சிக்குள்ளே ஜெயலலிதா ஆரவு அணி என்ற ஒன்று சட்டமன்றத்தில் செயல்பட்டது. அதை சமாளிக்கும் அரசியல் திறன், தெளிவு இல்லாமல் விஜயகாந்த் தடுமாறினார். செய்வது அறியாது தவித்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக இல்லாத மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, டெப்பாசிட் இழந்தார் என்பது தனிக்கதை. தொடர்ந்து இவர் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்தே வந்தது. உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த விஜயகாந்த் 2023ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
அவர் மறைவுக்குப் பின் அவர் மனைவி பிரேமலதா கட்சியை நடத்திவருகிறார் என்றாலும் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்ல முடியாமல் தடுமாறி வருகிறார் என்பது நிகழ்கால வரலாறாகவே உள்ளது.
சரத்குமார்
திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் தொடங்கி, பின்னர் நடிகராக வளர்ந்தவர் சரத்குமார். இவர் 1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினராக இருந்தார்.
2006ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் அவரது மனைவி இராதிகாவும் அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்தனர். அப்போது அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டார் என்று இராதிகா அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். பின் திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி அதிமுகவிலிருந்து விலகினார் சரத்குமார்.
2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார்.
2024ஆம் ஆண்டு சரத்குமார் தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்தார். அவர் மனைவி இராதிகாவுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது பாஜகவில் சரத்குமார் எந்தப் பொறுப்பில் உள்ளார் என்பது அவருக்கே தெரியுமா என்பது பெரிய கேள்வி குறிதான்.
சீமான்
திரைத்துறையில் இயக்குநராக இருந்து வந்த சீமான் 2010ஆம் ஆண்டில் நாம் தமிழர் என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் சில திரைப்படங்களில் நடித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இயக்கம் நடத்தி வருகிறார். இவர் கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஈழப் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஈழத்தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டன என்று அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்தார்.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாதக 234 தொகுதியிலும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு+பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் மட்டும் டெப்பாசிட் தொகையைத் தக்கவைத்து, பெரும்பான்மையான தொகுதிகளில் பெட்பாசிட் தொகை இழந்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் தொகையை இழந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாதக தனித்தே போட்டியிடும் என்றும் தோல்வியைப் பற்றி கவலையில்லை. ஒருநாள் இந்த மக்கள் என்னைப் புரிந்துகொண்டு ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற கனவோடும் நம்பிக்கையோடும் கட்சி நடத்தி கொண்டு வருகிறார்.
கருணாஸ்
தஞ்சை மாவட்டம் பேரவூரணியைச் சார்ந்த கருணாஸ் என்னும் நகைச்சுவை நடிகர் 2015ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2016இல் அக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து, இரட்டை இலை சின்னத்தில் கருணாஸ் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021இல் கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவந்தார். தற்போது முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் இயக்கம் உள்ளதா? என்பதை யாரைக் கேட்டு தெரிந்துகொள்வது என்பது புலப்படவில்லை. 2026 தேர்தலின்போது இக் கட்சி உயிரோடு உள்ளதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ளலாம்.
கமலஹாசன்
2018ஆம் ஆண்டு நடிப்பில் இயம் தொட்ட கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 142 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நிறுத்தியது. அனைவரும் தோல்வி அடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் பாஜக வேட்பாளர் வானதிசீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது. 2026ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக்
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். இவர் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். இவர் திரைத்துறையில் செல்வாக்கிழந்து, 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கார்த்திக் அரசியலில் நுழைந்தார். அவர் அகில இந்திய பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தார் மற்றும் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் 24 செப்டம்பர் 2006 அன்று கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் தனது சொந்த கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை 2009 இல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தொடங்கினார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 15000 வாக்குகள் மட்டுமே பெற்றார். லோக்சபா தேர்தலுக்கு முன் திருநெல்வேலியில் டிசம்பர் 15, 2018 அன்று மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினார், மேலும் அவர் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு மனித உரிமைகள் காக்கும் மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கார்த்திக்கின் கட்சி முயற்சித்தது, ஆனால் அதிமுக மேலிடம் அவரது கட்சிக்கு டிக்கெட் தர மறுத்தது. அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காததால் 25 முதல் 40 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக கார்த்திக் அறிவித்தார். தென் தமிழகத்தில் கணிசமான தேவர் வாக்குகளைக் கொண்ட அவரது கட்சி அதிமுக வாக்கு வங்கியில் விழும் என நம்பப்பட்டது.
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் திருநெல்வேலியில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், அங்கு கார்த்திக் தரப்பினர் வாக்கு வித்தியாசத்தைவிட அதிகமாக பெற்றனர். 2016இல் அ.தி.மு.க. கூட்டணியிலிரந்து பிரிந்து கார்த்திக் கட்சி 19 தொகுதிகளில் சுயேச்சையாகவும், 213 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் கார்த்திக் தொடங்கிய மனித உரிமைகள் காக்கும் மக்கள் கட்சி எங்கே? என்று பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் தென்படவில்லை.
மன்சூர்அலிகான்
விஜயகாந்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, 1992இல் பட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தார். 1999ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில், பெரியகுளத்தில் இருந்து புதிய தமிழகம் (பி.டி) வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டு கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டடியிட்டு அதிமுக வேட்பாளர் வேலுமணியிடம் தோல்வி அடைந்தார்.
2024 பிப்ரவரியில் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கித் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த நடிகர் தொடங்கிய அரசியல் கட்சியும் இயங்கிக் கொண்டிருக்கின்றதா? என்பதைத் தேர்தல் காலங்களில்தான் அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
நடிகர்கள்
அரசியல் இயக்கங்களில் திமுக சார்பில் நடிகர் வாகை சந்திரசேகரன் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுகவில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக நடிகர் இராமராஜன் இருந்துள்ளார். தேமுதிக சார்பில் நடிகர் அருண் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அதிமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுக சார்பில் எஸ்.வி.சேகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர் கே.ஆர்.இராமசாமி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்.
நடிகர் இராதாரவி அதிமுகவின் சைதைப்பேட்டை சட்டமன்ற உறப்பினராக இருந்துள்ளார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். நடிகர் உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் துணை முதல் அமைச்சர் பொறுப்பிலும் உள்ளார். இவர்கள் யாரும் இன்னும் தனிக்கட்சித் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் என்ற புகழுக்குரிய ரஜினிகாந்த் 1996ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வருகிறார்…. அரசியலுக்கு வருகிறார் என்று ஏதாவதொரு இதழின் அட்டைப் படச் செய்தியாக இருக்கும். 2020 டிசம்பர் மாதம் கடைசியில் ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. கொரேனா பரவலைச் சுட்டிக்காட்டி, உடல் நலத்தைக் காரணம் காட்டி, தான் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்று அறிவித்தார்.
விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் மாநில அளவில் 10 மற்றும் +2 தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் நிதி உதவிகளையும் வழங்கி வந்தார். கடந்த மாதத்தில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து நடிகர் விஜய் வணங்கியது சமூக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
வரும் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மாலை தொடங்குகின்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் உரை நிகழ்த்துகிறார். அவர் உரைக்குப் பின்னரே, அவர் கட்சியின் கொள்கை, கோட்பாடு, இலட்சியம் ஆகியவை தெரிவிக்கப்படும் என்று கூறப்படும்.
திமுவின் தொடர்ச்சியாகவே எம்.ஜி.ஆர். தனிக்கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்து 3 முறை தொடர்ச்சியாக முதல் அமைச்சராக இருந்துள்ளார். இந்த வாய்ப்பு வேறு எந்த நடிகருக்கும் வாய்க்கவில்லை என்ற வரலாற்றை அரசியல் களத்தில் நடிகர் விஜய் முறியடிப்பாரா? அரசியல் களத்தில் முறிந்து வீழ்வாரா? என்பதை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
— ஆதவன்.